திங்கள், 1 ஆகஸ்ட், 2011

மாநிலங்களுக்கு இடையே கவிதைப் பரிமாற்றம் தேவை: அப்துல் கலாம்

மாநிலங்களுக்கு இடையே கவிதைப் பரிமாற்றம் தேவை: அப்துல் கலாம்


கவிஞர் சிற்பி அறக்கட்டளைக்கு அவரது மாணவர்கள் திரட்டிக்கொடுத்த ரூ.7.5 லட்சத்துக்கான காசோலையை சிற்பியிடம் வழங்குகிறார் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்
கோவை, ஜூலை 31: மாநிலங்களுக்கு இடையே கவிதைப் பரிமாற்றம் நடக்க வேண்டும். அதன் மூலமாக இணைப்புப் பாலம் ஏற்படுத்த வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் குறிப்பிட்டார்.
கோவையில் நடந்த கவிஞர் சிற்பி பவள விழா நிறைவு நிகழ்ச்சியில் அப்துல் கலாம் பேசியதாவது:
திருவள்ளுவர், இளங்கோவடிகள், பாரதியார் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத சிறப்பு கவிஞர் சிற்பிக்கு கிடைத்திருக்கிறது. அதற்குக் காரணம் சிற்பியிடம் படித்த மாணவர்கள்தான். அம் மாணவர்களின் குருபக்திதான் இதற்குக் காரணம். அம் மாணவர்களை வாழ்த்துகிறேன்.
"கவிதையால் வளமான இந்தியாவை படைப்போம்' என்ற தலைப்பில் பேசுகிறேன். கவிஞர் சிற்பி இருமுறை சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ளார். அவருடைய 5 கவிதைப் புத்தகங்களைப் படித்தேன்.
மனிதநேயத்தின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிவதுதான் கவிஞனின் லட்சியம். சிற்பியின் "மூடுபனி' கவிதையில் நிறங்களின் பெருமை தேசியக் கொடி, நிறங்களின் தேசம் இந்தியா என வேற்றுமையில் ஒற்றுமை காணும் கவிதையைப் படைத்திருக்கிறார்.
மாநிலங்களுக்கு இடையே கவிதைப் பரிமாற்றம் நடக்க வேண்டும். இதன் மூலமாக இணைப்புப் பாலம் ஏற்படுமா என்ற கேள்வி எழலாம். கவிஞர் சிற்பி தன்னுடைய "ஒரு கிராமத்து நதி' என்ற கவிதைப் புத்தகத்தில், கேரளத்தையும் தமிழகத்தையும் இணைத்திருக்கிறார். கவிஞர் சிற்பியின் எண்ணங்கள் செயலாக்கம் ஆக வேண்டும் என வாழ்த்துகிறேன்.
கவிஞர் சிற்பிக்கு 3 குருமார்கள் வழிகாட்டியாக இருந்தனர். அவருடைய 10 வயதில் கல்வி கற்றுக்கொடுத்த ஆ.சீனிவாசராகவன், கவிஞர் கண்ணதாசன், பாரதிதாசன். மூவரிடமும் கை குலுக்கியதால் பாலசுப்பிரமணியம் கவிஞர் சிற்பி ஆனார். தேச விடுதலைக்காக மட்டுமா தேவி அவதாரம், மாதர் விடுதலைக்கும் அவரே அவதாரம் என கவிதையில் கூறியிருக்கிறார் சிற்பி. அறம் கூறும் சிற்பிக்கு நாம் பண் பாட வேண்டும்.
2020-ல் இந்தியா வல்லரசாக வர வேண்டும. சிகரத்தையும், அறிவுப் புதையலையும் உழைப்பால் அடைய வேண்டும். அதற்கு எண்ணங்கள் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
இளைஞர்கள் தங்கள் உழைப்பால் வளமான நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும்.
எனக்கு ஒரு ஆசை, கவிஞர் சிற்பி "வளர்ந்த தமிழகம், வளர்ந்த இந்தியா 2020' என்ற கவிதைப் பெட்டகத்தைப் படைக்க வேண்டும். அனைத்து மொழிகளிலும் அது மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய காப்பியமாக, இந்திய எல்லைகளைத் தட்டி, மனங்களை ஒன்றுபடுத்துவதாக அமைந்து, இளைஞர்களுக்கு ஆற்றலைக் கொடுக்க வேண்டும். உறக்கத்தில் வருவதல்ல கனவு, உறங்க விடாமல் செய்வதுதான் கனவு. இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
அறிவைப் பெற தேடிச் செல்ல வேண்டும். தோல்வியையே தோல்வியடையச் செய்ய வேண்டும். அதற்கு ஆசிரியர்களும் பெற்றோரும், மாணவர்கள் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும். நம்நாட்டின் 60 கோடி இளைஞர்கள்தான் மிகப் பெரிய சொத்து. அவர்கள் நல்ல மனிதர்களாக வர வேண்டும் என்றார் அப்துல் கலாம்.
சிற்பி பவள விழா குழு சார்பில் கவிஞர் சிற்பி அறக்கட்டளைக்கு மாணவர்கள் சார்பில் வழங்கப்பட்ட முதல் தவணைத் தொகை ரூ. 7.5 லட்சத்துக்கான காசோலையை விழாக்குழுத் தலைவர் சி.சுப்பிரமணியம் அப்துல் கலாமிடம் வழங்க, அத்தொகையை சிற்பியிடம் கலாம் வழங்கினார்.
கருத்துகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக