First Published : 31 Jul 2011 02:19:39 AM IST
கோவை, ஜூலை 30: இருமுறை சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். கல்வியாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், கட்டுரையாளர் என பன்முகம் கொண்டவர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். 75 வயது நிறைவையொட்டி அவரது மாணவர்களும், நண்பர்களும் அவருக்கு பவள விழா எடுத்துள்ளனர்.விழா ஏற்பாடுகளுக்கு இடையே தினமணிக்கு அவர் அளித்த பேட்டி:கவிதை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?இன்டர்மீடியட் படிக்கும்போது எனது ஆசிரியர் அப்துல் கபூரின் தூண்டுதலில், நான் எழுதிய "ஆழ்கடலே கேள்' என்ற முதல் கவிதை கல்லூரி மலரில் வெளியானது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, எனது ஆசிரியர்களில் ஒருவரான மு.அண்ணாமலையின் தூண்டுதலும் கவிதை மீதான ஈர்ப்புக்குக் காரணம். எனது இலக்கியச் செழுமைக்கு ஜீவாவும், அவர் தொடங்கிய கலை இலக்கியப் பெருமன்றமும் மிக முக்கியக் காரணம்.வானம்பாடி கவிஞர்கள் தோன்றியதன் பின்னணி என்ன?தமிழகத்தின் மற்ற பகுதிகளைக் காட்டிலும், மார்க்சீய சிந்தனைகளும், கம்யூனிச சிந்தனைகளும் கோவையில் அதிகமாகப் பரவியிருந்தன. தமிழகம் முழுவதும் உள்ள தமிழ் ஆசிரியர்கள், திராவிட இயக்கச் சார்பாளர்களாக இருந்த காலத்தில், கோவை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த தமிழாசிரியர்கள் மார்க்சீய சிந்தனை கொண்டவர்களாக இருந்தனர். இந்த தத்துவார்த்தப் பின்னணியோடு, சமூகப் பிரச்னைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. மேலும் யாப்புக் கவிதைக்கு அப்பால் தி.சு.செல்லப்பா தொடங்கி வைத்த புதுக் கவிதை இயக்கமும் மரபுக் கவிதை எழுதிக் கொண்டிருந்தவர்களைக் கூட ஏற்றுக் கொள்ள வைத்தது. அந்தக் காலத்தில் ஏராளமான சிற்றிதழ்கள், எழுத்தாளர் சங்கங்கள், இலக்கிய அமைப்புகள் செயல்பட்டன. இவையெல்லாம் கூடி கலந்துதான் வானம்பாடி கவிதை இயக்கம் என்ற பெரிய அமைப்பு உருவானது.வானம்பாடி இயக்கம் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு தொடரவில்லையே?எல்லா இலக்கிய இயக்கங்களுக்கும் இருக்கக் கூடிய விதி அது. வானம்பாடி இயக்கம் அதனுடைய பணியை முடித்துக் கொண்டதற்கு காரணம், அது தொடங்கி வைத்த பணியைப் பின்பற்றி பலரும் எழுதத் தொடங்கினர். சொல்ல முடியாத சில கருத்து வேறுபாடுகளாலும் வானம்பாடி இயக்கம் நின்று போனது. இருப்பினும் அதனால் பெற்ற படிப்பினைகளும், பயன்களும் வேறு வேறு துறைகளில் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.இப்போதைய புதுக்கவிதைகளில் வானம்பாடி கால வீச்சு இருக்கிறதா?கண்டிப்பாக உண்டு. புதுக் கவிதைகளில் படிமம் இருக்க வேண்டும், குறியீடு இருக்க வேண்டும் என்றார்கள். இப்போதைய புதுக்கவிதைகள் அதையெல்லாம் தாண்டிவிட்டன. தலித்தியம், பெண்ணியம் சார்ந்த படைப்புகள் ஏராளமாக வருகின்றன. வானம்பாடி இயக்கம் தொடங்கி வைத்த பாதை சரியானது என்பதை இவை நிரூபித்து வருகின்றன. காலத்தால் மொழி மாறியிருக்கலாம். ஆனால் பிரச்னைகளை எழுதக் கூடாது என்ற எதிர்ப்பு இருந்த சூழல் தலைகீழாக மாறியிருக்கிறது.தற்கால இலக்கியத்தின் போக்கு எப்படி இருக்கிறது? மிகவும் நம்பிக்கையூட்டக் கூடிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் அனைத்துத் தரப்பிலும் தோன்றியிருக்கின்றனர். இலக்கியத்துக்கு எல்லைகளோ, கோடுகளோ போட முடியாது. அது தன்னுடைய போக்கில் போய்க் கொண்டு தான் இருக்கும். சாகித்ய அகாதெமியில் தமிழ் மொழிப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறதே? இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை இல்லாதது. ஆதாரமற்றது. சாகித்ய அகாதெமி 22 மொழிகளுக்கு பொதுவான அமைப்பு. இதில் ஹிந்தி மொழிக்கு அடுத்தபடியாக, அதிக புத்தகங்கள் தமிழில் தான் வெளியிடப்பட்டுள்ளன. சாகித்ய அகாதெமியின் வருவாயில் கணிசமான பகுதி தமிழ் புத்தக விற்பனையில் தான் உள்ளது. தமிழில் சிறந்த எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைக்கவில்லை என நினைக்கலாம். ஆனால், ஆண்டுக்கு ஒரு எழுத்தாளருக்கு மட்டுமே விருது கொடுக்க முடியும். அவர் எந்த பின்புலத்தில் இருந்து வருகிறார் என்பதை வைத்து, மற்றொரு பின்புலத்தில் குற்றச்சாட்டு எழுகிறது. நோபல் பரிசு கூட அந்தந்த காலத்தில் சிறந்த அறிஞர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற புகார் இருக்கிறது. எல்லா மொழிகளிலும் சிறந்த படைப்புகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பது தான் சாகித்ய அகாதெமியின் நோக்கம்.உங்களது சமகாலக் கவிஞர்களில் யாருடைய படைப்புகள் நீங்கள் அதிகம் ரசித்தவை?சமகாலக் கவிஞர்களில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்துக்கு நேசிக்கிறேன் என்று கூறலாம். வானம்பாடிக் கவிஞர்களை கடுமையாக விமர்சித்த தருமு. சிவராமின் கவிதை, வரலாற்றுச் சிறப்புமிக்கது. சமூக சிக்கல்களை எள்ளலோடு சொல்லக் கூடியவர் புவியரசு. இதனால் அவரது கவிதைகளுக்குத் தனித்தன்மை உண்டு. நா.காமராஜன், ரகுமானின் படைப்புகள் என்னை மிகவும் கவர்ந்தவை.இப்போதைய பெண் கவிஞர்கள் சிறந்த படைப்புகளைக் கொடுத்து வருகின்றனர். இதுவரை சந்திக்காத ஒரு மொழியை தனித்தன்மையோடு அவர்கள் கையாளுகின்றனர். திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை சொல்கிறார்களே என நினைக்கலாம். இன்னும் நிறைய காலமும், வாய்ப்பும் உள்ளது. அப்போது அவர்கள் வேறு செய்திகளையும் எழுதக் கூடியவர்களாக வருவார்கள் என்றார் சிற்பி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக