ஞாயிறு, 31 ஜூலை, 2011

இலங்கைச் சிக்கல் ஆகசுட் 9- இல் மார்க்சியக்கட்சி ஆர்ப்பாட்டம்

குற்றுயிரும் குறையுயிருமாக இருப்பவர்களுக்கு  உரிய மருத்துவ உதவி அளிக்காமல் ஒத்தடம் கொடுத்துக் கொலையாளிகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுபோல் திட்டமிட்டு நாட்டு  மக்களைக் குழப்புவதில்  முனைந்துள்ளது மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி. படுகொலைக் காணொளிகளைக் கண்ட பின்பு சிங்களர்களில் ஒரு பகுதியினரே வருந்திக் கருத்துகளைத் தெரிவிக்கும் வேளையில் ஒன்றுபட்ட இலங்கை எனக் கூற  இவர்கள் யார்? காலம்காலமாகத் தனியாட்சி செய்து வந்த இலங்கைத் தமிழர்கள், தங்கள் விருப்பப்படி தமிழ்ஈழம் அமைக்க விரும்புவதற்கு எதிராகப் பரப்புரை மேற்கொள்வதைவிடக்கட்சியைக் கலைத்துவிட்டுக் காங்கிரசுக்கட்சிக்குக்கால்கை அமுக்கி விடலாம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


இலங்கைப் பிரச்னை: ஆகஸ்ட் 9-ல் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

First Published : 31 Jul 2011 02:31:43 AM IST


சென்னை, ஜூலை 30: இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் 9-ம் தேதி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வலியுறுத்தியும், அங்குள்ள தமிழர்களுக்கு சம உரிமை வழங்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய சிறப்பு மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இலங்கையின் அண்டை நாடு என்ற முறையிலும், சார்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடு என்ற முறையிலும், இலங்கைத் தமிழர்களின் துயரம் இந்தியத் தமிழர்களிடம் ஏற்படுத்தும் பாதிப்பை கருத்தில் கொண்டும், இலங்கை இனப் பிரச்னைக்கு தகுந்த அரசியல் தீர்வு காண உதவ வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. இந்தியா தனக்குள்ள ராஜீய உறவைப் பயன்படுத்தி, இனப் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு ராஜபட்ச அரசை வற்புறுத்த வேண்டும். ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு, கிழக்குப் பகுதிகளை இணைத்து மாநில சுயாட்சி வழங்க வேண்டும். இதுவே இலங்கை இனப் பிரச்னைக்கு சரியான தீர்வாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. எனவே, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும். இதனை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கான அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தி, நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக