குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற உடனான முதல் செய்தியார் சந்திப்பில் தமிழில் விடையளிக்க முயன்ற பொழுது தேசிய மொழியில் இந்தியில்தான்பேச வேண்டும் என்றதும் அஞ்சித் தமிழில் பேச மறுத்த கலாமிற்கு இன்னும் அச்சம் போகவில்லை போலும்! தாகூர், விவேகானந்தர், அம்பேத்கார், நேரு முதலானவர்களாலும் போற்றப்பட்ட தமிழ்ப்பண்பாடு, தமிழர் நாகரிகம், தமிழர் ஆட்சி , புதையுண்ட தமிழர் நாகரிகங்கள் பற்றி வாயே திறக்கவில்லையே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
ராமாயண காலத்தை ஆராய கலாம் ஆதரவு
First Published : 31 Jul 2011 12:26:45 AM IST
புதுதில்லி, ஜூலை, 30: பண்டைய இந்தியா குறித்து அறிவியலாளர்களும் மொழி அறிஞர்களும் ஆராய்ச்சி நடத்த வேண்டும், குறிப்பாக ராமாயண காலத்தையும் அதனுடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் இடங்களையும் எல்லா கோணங்களிலும் ஆராய வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வலியுறுத்தினார்.கிறிஸ்து பிறப்பதற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளை அறிவியல்பூர்வமாக ஆராய்வது தொடர்பான தேசிய கருத்தரங்கு தில்லியில் சனிக்கிழமை நடந்தது. அதில் அப்துல் கலாம் கலந்துகொண்டு பேசினார்."இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியர்கள் எப்படி வாழ்ந்தார்கள், விவசாயம் செய்தார்கள், கால்நடைகளை வளர்த்தார்கள், நகரங்களை நிர்மாணித்தார்கள், கிராம சபைகளை நிர்வகித்தார்கள், அரசுகள் எப்படி செயல்பட்டன, வெளிநாடுகளுடனான தொடர்புகள் எப்படி இருந்தன, உழவுக் கருவிகளையும் போர்க் கருவிகளையும் எப்படி வடித்தார்கள், உலோகவியலை எப்படிக் கற்றார்கள், ஆடைகளை நெய்யவும் சாயம் ஏற்றவும் எப்படி அறிந்தார்கள், வியாபாரத்தை எப்படி நடத்தினார்கள், கவிதைகளையும் காவியங்களையும் எப்படிப் படைத்தார்கள், நோயற்ற வாழ்வு வாழ என்ன விதமான உடல் உழைப்புகளையும் விளையாட்டுகளையும் யோகாசனங்களையும் மேற்கொண்டார்கள் என்றெல்லாம் ஆராய்வது இப்போதைய தலைமுறைக்கும் பலன்களைத் தரும்.வரலாற்று ஆசிரியர்களும் அறிவியல் அறிஞர்களும் வேத பண்டிதர்களும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் பலவற்றை நாம் புதிதாகத் தெரிந்துகொள்ள முடியும்.நான் ராமேஸ்வரத்தில் பிறந்தேன். என்னுடைய ஊர் ராமாயண இதிகாசத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. என்னுடைய கண் முன்னே கந்தமானபர்வதம் விரிகிறது. இங்கிருந்துதான் ராமர் இலங்கையைப் பார்த்திருக்கிறார். ராமேஸ்வரத்திலேயே மிகவும் புகழ்பெற்ற இடமான கோதண்டராமர் கோயில் என் கண் முன்னே தோன்றுகிறது. நகரின் மையமான பகுதியில் ராமநாத ஸ்வாமி ஆலயம் இருக்கிறது. சேது பந்தனத்துக்காக ராமர் தன்னுடைய கையாலேயே பிடித்த சிவலிங்கம் இங்கேதான் இருக்கிறது. இந்த இடத்தில் சிவனை வழிபட்டுத்தான் சேதுவை அமைக்கும் வேலையை ஆரம்பிக்கிறார் ராமர். பிறகு வானர சேனையுடன் கடலைக் கடந்து இலங்கையில் நுழைந்து சண்டையிடுகிறார்.சிறு வயது முதலே எனக்கு ராமாயணக் கதையைக் கேட்பதில் ஆர்வம் அதிகம். ராமர், லட்சுமணர், ஹனுமான், சுக்ரீவன் ஆகியோர் எந்த இடத்திலிருந்து இலங்கை மீது தாக்குதலைத் தொடுத்தனர் என்பதை அறிய நானும் ஆர்வமாக இருக்கிறேன்.வேதகாலத்தில் இயற்கையோடு இயைந்த வேளாண் சாகுபடி முறைகளைத்தான் நம்முடைய முன்னோர்கள் கடைப்பிடித்தனர். அவற்றை அறிவதன் மூலம் நாம் ஏராளமான பாடங்களைப் படிக்கலாம்.வேத காலத்தில் மண்ணின் தன்மையைப் பொருத்து நிலங்களை 12 வகைகளாக நம்முடைய முன்னோர்கள் வகுத்துள்ளனர். அவற்றுக்கேற்ற தானியங்களையும் காய்கறிகளையும் கனிகளையும் கிழங்குகளையும் கீரைகளையும் பயிரிட்டுப் பலன் கண்டுள்ளனர். கால்நடை வளர்ப்பில் கை தேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர்.வேளாண்மைக்கு இயற்கையான முறையில் எரு தயாரித்துப் பயன்படுத்தியுள்ளனர். நிலத்தையும் உயிரினங்களையும் நச்சுப்படுத்தும் ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் அவர்கள் பயன்படுத்தியதே இல்லை.வேதகால இலக்கியத்திலும் அதற்குப் பிந்தைய இலக்கியங்களிலும் ஏராளமான அறிவியல் கருத்துகள் புதைந்து கிடக்கின்றன.ராமாயண காலத்தை நாம் அறுதியிட்டு அறிந்து கொள்ளும் வகையில் அன்றைய கோள்களின் இயக்கங்கள் குறித்து வால்மீகி ஏராளமான தகவல்களை அந்தக் காவியத்தில் தந்திருக்கிறார்.அந்த காலத்தில் இருந்த நாடுகளின் தன்மைகளை, அவற்றின் அமைப்பை, மண் வளத்தை, மக்களின் பழக்க வழக்கங்களை, கலாசாரத்தை மிக அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார். அந்தக் கால மன்னர்களின் குல வரிசையையும் கூறியிருக்கிறார்.அந்தக் கால பருவநிலைகளையும் பருவ நிலைகளில் ஏற்படும் மாற்றங்களையும் நன்றாகவே பதிவு செய்திருக்கிறார்.ராமாயணத்தில் வரும் குறிப்புகளைக் கொண்டு ஆராய்ந்ததில் ராமாயணம் நிகழ்ந்து சுமார் 7,000 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு பல அறிஞர்கள் வந்துள்ளனர்.வால்மீகி ராமாயணத்தில் தரும் குறிப்புகளின்படியே அதே இடத்தில்தான் ராமர் கட்டிய சேது (பாலம்) இன்றைக்கும் இருக்கிறது. கடந்த 7,000 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் கடலில் நீர் மட்டம் சுமார் 9 அடிக்கு அதிகரித்துவிட்டதாக அறிவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ராம சேது இன்றைக்கு கடல் மட்டத்துக்கு 9 அடி ஆழத்தில்தான் இருக்கிறது. பேச்சு வழக்கு எப்போது வந்தது, வால்மீகி ராமாயணம் எப்போது பாடப்பட்டது என்று ஆராய்வது அவசியம்.நவீன அறிவியல் வளர்ச்சி காரணமாக தொல்லியல் துறையின் ஆராய்ச்சிப் பணிகள் எளிதாகவும் துல்லியமாகவும் உருப்பெற்றுள்ளன. இந்த மண்ணில் வசிக்கும் நாம் அனைவரும் ஒரே மூதாதையரிடமிருந்து வந்துள்ளோம், நம் அனைவருக்கும் மூலம் ஒன்றுதான். எனவே இந்த ஆய்வுகள் நம்மை மேலும் ஒற்றுமைப்படுத்தி வலுப்படுத்த உதவும்' என்றார் கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக