வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவை நாம் நம்பலாமா?– ஈழவேந்தன்

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவை நாம் நம்பலாமா? நம்பக்கூடாது என்பது தான் நாம் அளிக்கும் பதில்! – ஈழவேந்தன்

08 . 12 . 2004ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் அவரோடு உரையாடியது மேதகு தலைவர். வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு 27 .12 . 2004 ல் அரசியற் துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் ஊடாக தலைவருக்கு அனுப்பிய கடிதம் இதோ தரப்படுகிறது. நிரூபமா ராவின் வெறிப் போக்குக்கு இது சான்று கூறும்.
தமிழ்த் தேசியத்தின் பார்வையில் ஈழவேந்தனின் பதிவுகள் என்ற என் நூலில் பக்கங்கள் 37 – 41
மேதகு தலைவர் வே. பிரபாகரன் அவர்கள்,
தமிழீழம்
இந்தியத் தூதுவர் திருமதி. நிரூபமா ராவ், துணைத் தூதர் திரு. மோகன் குமார் ஆகியோருடன் 08 . 12 . 2004 புதன்கிழமை அன்று முற்பகல் 10 .45 – 11 . 45 வரை நடைபெற்ற உரையாடலின் சுருக்கம்.
(தூதுவரோடு நடைபெற்ற ஆங்கில உரையாடலின் தமிழாக்கம்)
மேற்குறித்த இருவருடன் நான் நடாத்திய உரையாடலின் போது நாம் உணர்ந்த கசப்பான உண்மைகள். இந்தியா எங்களோடு இல்லை என்பது மட்டுமல்ல, எமக்கு மாறாகவும் செயற்படுகிறது என்பது வெளிப்படையாகத் தெரிய வருகிறது. இதை உங்களுக்குத் தெரிய வேண்டும் என்ற ஒரே நோக்குடன் இக் குறிப்புகள் தரப்படுகின்றன.
1 . இந்திய மாயையில் இருந்தும், ஆரிய மாயையில் இருந்தும் ஈழத் தமிழர்கள் விடுபட்டால் தான் அவர்களுக்கு வாழ்வு உண்டு என்று 2003 ஒக்டோபர் 22 ல் எனக்கு நீங்கள் கூறிய கூற்று முழுமையாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
2 . இந்தியாவில் அரசுகள் மாறினாலும் அடிப்படைச் சிந்தனை ஒன்று என்பதை நாம் உணர்ந்துள்ளோம். இந்தியாவிடம் ஈழத் தமிழர் மீது எத்தகைய பாசப் பிடிப்பும் இல்லை என்பது தெரிய வருகிறது. அதேவேளை ஆசியாக் கண்டத்தில் அது ஒரு வல்லரசாகவும் எமது பக்கத்து நாடாகவும் இருப்பதால் நாம் அதை பகைக்க முடியாது என்பது உண்மை. இதை ஒட்டி உங்கள் வழிகாட்டலை நாம் எதிர்பார்த்து நிற்கிறோம். உங்களுடனும் சு.ப. தமிழ்ச்செல்வனுடனும் வாய்ப்புள்ள போது நேராக உரையாட விரும்புகிறேன்.
3 . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரும், முதலில் தமிழகத்திற்கும், பின்பு டெல்கிக்கும் செல்வதற்காக முடிவெடுத்த நிலையில் என் (விசா) இசைவுச் சீட்டினைப் பெறுவதற்காகவே இந்தியத் தூதரகத்திடம் நியமனம் பெற்ற நிலையில் நான் அங்கு சென்றேன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
4 . இந்தியா எந்நிலையிலும் எங்களுடைய தமிழீழ கோரிக்கையை ஏற்காது என தூதுவரும் துணைத் தூதுவரும் உறுதிபடக் கூறினார்கள். “ஈழத்துக்கு ஒப்புதல் வழங்குவதில் உங்களுக்கு ஏதும் சிக்கல் இருப்பின் பொருள் பொதிந்த இணைப்பாட்சி உருவாவதற்காவது துணை நில்லுங்கள்” எனக் கேட்டேன். அவர்கள் புன்முறுவல் பூத்தார்கள், ஆனால் பதில் சொல்லவில்லை.
5 . மேலும் இறங்கி வந்த நான், ” நாம் இன்று கேட்கும் இடைக்கால அரசை அமைக்க உங்களது தார்மீக ஆதரவை வழங்குங்கள்” என்று கேட்ட போது , உங்கள் இடைக்கால அரசின் எடுத்துரைப்புகளிற் கூறப்பட்டுள்ள அதிகாரங்கள் ஏறக்குறைய தனி நாட்டுக்குரிய அதிகாரங்களாக விளங்குவதால் அதை நாம் ஏற்க முடியாது என கூறினார்கள்.
6 . “எம் மக்கள் படும் துன்பங்கள் எல்லை மீறுபவைகளாக இருக்கின்றன. உடனடியாக இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளவே நாம் இதனை வலியுறுத்தி நிற்கிறோம் ” என்று கூறிய போது ” ஏன் இடைக்கால அரசை மட்டும் கேட்கிறீர்கள், முழுத் தீர்வையும் காண முயலுங்கள்” என்றார்கள். “நிலப் பாதுகாப்பு, உள்ளகப் பாதுகாப்பு (internal security ) போன்றவற்றில் சிங்கள அரசு காட்டும் நேர்மையைப் பொறுத்து எமது முழுமையான அரசியற் தீர்வு அமையும் என்று நான் குறிப்பிட்டேன். அதற்கு அவர்கள் பதில் தரவில்லை.
7 . “குடியரசுத் தலைவர் சந்திரிகா நல்நோக்கத்தோடு செயற்படுகின்றார். அவரை நம்புங்கள்” என்று அவர் கூறிய போது முன்னுக்குப் பின் முரணான பல செய்திகளை சந்திரிக்கா தந்துகொண்டு இருக்கிறார். இடைக்கால அரசை ஒட்டி கடந்த யூன் 10ம் திகதி அவர் எமக்கு அளித்த வாக்குறுதியை சிறிதும் நிறைவேற்ற இல்லை. அவரோடு இணைந்திருக்கும் ஜே.வி. பி. யின் வெறியாட்டத்திற்கு அஞ்சி அடங்கியே அவரது அரசியற் சிந்தனை இருக்கிறது. ஆகவே நாம் அவரை நம்ப முடியாது என்று கூறினேன். இதற்கும் பதில் கூறாது புன்னகை பூத்தார்கள்.
8 . இந்திரா காந்தியை 1983 ஆகஸ்ட் 19ல் நான் கண்டு உரையாடியபோது, அவர் எமக்கு ஆதரவாக தெரிவித்த பல கருத்துக்களை, அவர்களுக்கு நான் நினைவுபடுத்தினேன். இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலை ( genocide ) என்பதை இந்திரா காந்தி ஏற்று நாடாளுமன்றத்தில் இச் சொல்லை கையாண்டதையும் நான் நினைவு கூர்ந்தேன். அரச ஆதரவோடு நடைபெறுகின்ற சிங்கள குடியேற்றம் எவ்வளவு தூரம் எம்மை பாதிக்கிறது என்பதை, அவர் முழுமையாக ஏற்றுக் கொண்டார் என்பதையும் நான் வலியுறுத்திக் கூறினேன். ஜே. ஆர். இந்தியாவினது மட்டுமல்ல இந்திராவினதும் எதிரி என்று அவர் கூறியதையும் நான் நினைவுபடுத்தினேன்.
9 . இந்திரா காந்தியுடன் நான் நடாத்திய உரையாடலை ஒரு சிறு வெளியீடாக வெளியிட்டிருந்தேன். அதனை அவர்களிடம் ஒப்படைத்தேன்.
10 . மன்மோகன் சிங் ஆட்சிக்கு வந்த போது நான் அவருக்கு அனுப்பிய கடிதத்தையும் அவர் எனக்கு அனுப்பிய பதிலையும் கொண்ட படிகளையும் நான் அவர்களிடம் கொடுத்தேன். இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங், இலங்கைக்கு இணைப்பாட்சியே இனச் சிக்கலை தீர்க்கும் என்று கூறியதை இக் கடிதத்தில் நான் குறிப்பிட்டதாகவும் எடுத்துரைத்தேன்.
ஈழத் தமிழ் உள்ளங்களை புண்படுத்தும் முறையில் இரு தூதுவர்களும் கூறியவை இதோ:
11 . இலங்கை இந்திய ஒப்பந்தங்களை நாம் எதிர்த்தது தவறு என்று சிறு கோபத்துடன் கூறினார்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் முன்னுரையில் இலங்கையின் வட கிழக்கு மாகாணம் வரலாற்றின் அடிப்படையில் தமிழர் தாயகம் என்பதை ஏற்றுள்ளது நீங்கலாக வேறு எதுவும் ஈழத் தமிழ் மக்களுக்கு வாழ்வு கொடுக்கும் வகையில் அமையவில்லை என்று குறிப்பிட்டேன். ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதே மதுறு ஓயா, மணலாறு பகுதிகளில் அரச ஆதரவோடு சிங்களக் குடியேற்றம் நடைபெற்றதையும் நான் குறிப்பிட்டேன்.
12 . இவ் ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகளோடு இலங்கை அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும். தமிழருக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் சிங்களவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். இதில் இந்தியா நடுவராக மட்டும் தான் பணி புரிந்திருக்க முடியும். மாறாக தமிழரையும், தமிழ் உணர்வையும் புறக்கணித்த இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்வதை நாம் ஏற்பது கடினம் என்று குறிப்பிட்டேன்.
13 . திலீபனின் தியாகத்தை இந்திய அரசு மதிக்க மறுத்ததை குறிப்பிட்ட நான் காந்தீய வழியில் திலீபன் செய்த தியாகத்தை இந்தியா மதித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டேன். ஆனால் எம் மனத்தை மிக நோகச் செய்கின்ற முறையிலும் எமக்கு ஆத்திரத்தை வருவிக்கின்ற முறையிலும் திலீபன் தொடர்ந்து உண்ணா நோன்பு இருக்கமுடியாத நிலையில் மணிக்கணக்கில் குடிப்பதற்கு நீர் கேட்டும் விடுதலைப்புலிகள் ஈவிரக்கம் அற்ற முறையில் செயற்பட்டனர் என்று இந்தியத் தூதுவர்கள் குறிப்பிட்டனர்.
இந் நிகழ்ச்சிக்கு மூவர் சாட்சி என்று அவர் குறிப்பிட்ட போது நீங்கள் மூவரை உங்கள் கூற்றுக்கு துணைக்கு அழைக்கின்றீர்கள். ஆனால் ஆயிரக்கணக்கில் மக்கள் திலீபனின் உள்ளம் உருக்கும் நிகழ்ச்சியை கண்டு கண்ணீர் விட்டதை நான் குறிப்பிட்டபோது அதை அவர்கள் ஏற்க மறுத்தனர்.
14 . படைத் தளபதிகள் குமரப்பாவும் புலேந்திரன் உட்பட ஏனைய பத்து வீரர்களும் சயனைட் அருந்தி சாவதற்கும் புலிகள் தான் காரணம் என்று ஆணவத்தோடு கூறினார்கள்.
15 . புலிகளின் வன்முறையை தாம் ஏற்க முடியாது என்றும் ஒரு காலத்தில் தமது தோழர்களாக இருந்த ஏனைய விடுதலைப் போராளிகளை விடுதலைப் புலிகள் சாகடித்ததையும் கூறினார்கள் .
16 . தூதுவர்கள் தெரிவித்த கருத்தில் இருந்து ஈ. பி. டி. பி, வரதராஜப்பெருமாள் குழு, கருணா குழு போன்றோர் இந்தியத் தூதரகத்தில் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றனர் என்பதை இந்தியத் தூதுவர்களின் பேச்சு மறைமுகமாக உணர்த்தி நிற்கிறது.
17 . கடந்த பத்து ஆண்டுகளாக தமிழர்களுக்கு பெரும் பாதிப்பு, அழிவு ஏற்படவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டதை மறுத்து 1995ல் ரத்வத்தை தலைமையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதன் பேரில் ஏற்பட்ட அழிவை நான் குறிப்பிட்டேன்.
இதனையடுத்து 1999 – 2000 ம் ஆண்டுகளில் யாழ் குடா நாட்டு நகரங்கள் சாம்பல் மேடாக மாறும் முறையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதல்களை நான் குறிப்பிட்டேன். இப்பொழுது யாழ்ப்பாணத்தில் ஏழு இலட்சம் தமிழர்கள் வெளியேறிய நிலையில் ஐந்து லட்சம் தமிழ் மக்களே வாழ்கிறார்கள்.
இங்கு யாழ்ப்பாணத்தில் குடிகொண்டிருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கையோ 50 ,000 ஆகும். இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பூமியாகவே யாழ்ப்பாணம் திகழ்கிறது. உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமிழ் மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையிலும் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க முடியாத நிலையிலும் தத்தளிப்பதை நான் குறிப்பிட்டேன்.
18 . யாழ்ப்பாணம் நீங்கலாக வன்னி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் மக்களின் ஏக்கம் நிறைந்த வாழ்வை எடுத்துரைத்தேன்.
19 . திருகோணமலை திட்டமிட்டு பறிக்கப்பட்டு தமிழரின் தாயகம் துண்டிக்கப்படுவதையும் புள்ளிவிபரங்களோடு விளக்கினேன். என் கருத்துகளை அவர்கள் செவிமடுத்தார்களே அன்றி எம் துன்பம் நிறைந்த வாழ்வை ஒட்டி அவர்களுக்கு மருந்தளவு கூட அக்கறை இல்லை என்று அவர்களது உரையாடலில் இருந்து தெரிய வந்தது.
மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. ஏதோ ஈழத் தமிழருக்கு நன்மை விளைவிக்கும் என்று நாம் எதிர்பார்த்தது உண்மை. ஆனால் ஆட்சிகள் மாறினாலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை டெல்கியின் தென் பிரிவே நிர்ணயிக்கின்றது என்பதை இந்த உரையாடலில் இருந்து அறிந்து கொண்டேன்.
ஈழத் தமிழர் சிக்கலில் இந்தியாவின் அணுகுமுறை எத்தகையது என்பது நீங்கள் நன்கறிந்த விடயம். எனினும் என் பட்டுணர்வை, அனுபவத்தை சொல்லி வைப்பது பயனளிக்கும் என்பதால் இக் கருத்துகளை சொல்லி வைக்கின்றேன்.
மா. க. ஈழவேந்தன்
நாடாளுமன்ற உறுப்பினர்
பிற்குறிப்பு:  இந்தியச் சிந்தனை பற்றி 27 . 12 .  2004 ல் தலைவருக்கு எழுதிய கடிதம் மேலே தரப்பட்டுள்ளது.  இப்பொழுது  2011 வது ஆண்டாகும்.  ஏழு ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் ஈழத் தமிழரை ஒட்டி இந்தியாவின் சிந்தனையில் எந்தவித நல்மாற்றமும்  இல்லை.  மாறாக 20  நாடுகளின் துணையோடு 2009  ல்  எமக்கு பேரழிவை ஏற்படுத்திய இந்தியாவின் வெறிப்போக்கு தொடர்கிறது.
2004  ல் நான் நிரூபமா ராவை சந்தித்த பொழுது அவர் இந்தியாவின் தூதுவர். இப்பொழுது அவர் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர். அவரின் பதவி உயர்வு ஈழத் தமிழர்களுக்கு மேலும் பாதகங்களை ஏற்படுத்தியுள்ளது. இப் பதவியில் இருந்து ஓய்வு பெறும் அவர்  இலங்கைக்குச் சென்று மகிந்தாவிற்கு பிரியாவிடை கூறி திரும்பி வந்துள்ளார். அத்தோடு ஆளும் சிங்களக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விட்டு வந்துள்ளார்.  டெல்கியில் அவர்களுக்கு  வரவேற்புரை வழங்கப்பட்டுள்ளது.  ஆனால் இவர்களுக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலையாளிகள் என்று கூறி காட்டிய எதிர்ப்பு எமக்கு தென்பு தருகின்ற நிகழ்ச்சியாகும். 
ஆனால் ஆபத்து தொடர்கிறது.  பதவி ஓய்வு பெரும் நிரூபமா ராவ் அமெரிக்காவிற்கு உயர் பதவி ஏற்று செல்கிறார்.  அண்மையில் அமெரிக்காவின் சிந்தனை எம் சார்பில் அமைந்துள்ளது. நாம் விழிப்போடு இல்லாவிடின் அமெரிக்காவின் சிந்தனையையும் நிரூபமா ராவ் கெடுக்கக் கூடும். என்றுமே விழிப்போடு இருப்பது தான் நாம் விடுதலைக்கு கொடுக்கின்ற விலை என்பதை உணர்ந்து இந்தியாவின் போக்கை ஒட்டி நாம் விழிப்போடு இருப்போமாக.
வைகோ,  மன்மோகன் சிங்கை சந்தித்த பின்பு   கூறியுள்ள கருத்துக்கள் எமது ஆழ்ந்த சிந்தனைக்குரியவை.  இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்கும் படி மன்மோகன் சிங்கிற்கு வைகோ விடுத்த வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. காரணம் இந்தியா இலங்கை மீது பொருளாதார தடை விதித்தால் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள்  இலங்கை வந்துவிடும் என்று அச்சம் தெரிவித்தார் . ஆனால் ஸ்ரீலங்கா ஏற்கனவே சீனாவின் கட்டுப்பாட்டில் இயங்குவது உலகம் அறிந்த செய்தி. தன் எதிரியான தமிழனை அழிக்க இந்தியா தனது மூக்கை அறுக்க முடிவு செய்துள்ளது. எனினும் தமிழகத்தின் விழிப்புணர்ச்சி டெல்கியை  மீளச் சிந்திக்க வைக்கும் என்பது எமது  நம்பிக்கை. 
நல்லதை எதிர்பார்ப்போம். ஆனால் எதற்கும் ஆயத்தமாக இருப்போம்.   ஏதோ என் உள்ளொளி சொல்கிறது ஐ. நா. மன்றத்தில் தென் சூடானை அடுத்து 194வது நாடாக தமிழீழம் மலரப்போவது உறுதி. உலகில் எந்த சக்தியும் இதனை தடுக்க முடியாது. நம்புங்கள் நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும். 
மா. க. ஈழவேந்தன்


Short URL: http://meenakam.com/?p=32428
Share/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக