செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனைத் ‘தீர்த்துக்கட்ட’ சோனியா பிறப்பித்த கமுக்க உத்தரவு?

ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை சீர்குலைத்து, ராணுவ மோதலுக்கு ஊக்கப்படுத்தியது இந்தியாவும் – சோனியாவும் தான் என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டைச் சார்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் குழு, ராஜபக்சேவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் சோனியாவும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுபற்றி பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் மற்றும் ‘ஸ்டேட்ஸ்மென்’ ஆங்கில நாளேட்டின் மூத்த செய்தியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சாம் ராஜப்பா ஆகியோர் தனித்தனியாக எழுதிய கட்டுரைகள் – இணையதளங்களில் இடம் பெற்றுள்ளன.
குழுவில் இடம் பெற்றிருந்தவரும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியுமான எம்.ஜி.தேவசகாயம் எழுதிய கட்டுரை:
அண்மையில் உலக நாடுகளையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது ‘சேனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள். ஈழத் தமிழர்களை நிர்வாணமாக்கி, கண்களைக் கட்டி, சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்வதும், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவதும் இதில் இடம் பெற்றுள்ளது. அண்மையில் இலங்கை சென்று திரும்பிய பிரிட்டிஷ் முன்னாள் வெளியுறவு அமைச்சர் டேவிட் மில்லி பாண்ட், பிரான்சு முன்னாள் வெளியுறவு அமைச்சர் பெர்னார்டு கவுச்னார் ஆகியோர், “யுத்தம் முடிந்த பிறகு, தமிழர்கள் நான்காம் தர, அய்ந்தாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள். வெளிநாட்டுக் கொள்கை என்று ஏதேனும் ஒன்று இருக்குமானால், உடனடியாக இந்த மோசமான மனித விரோத நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்” என்று எழுதியிருந்தனர்.
இந்த கொடூரமான மனித அவலங்களுக்குப் பின்னால், இந்தியாவின் பங்கு உண்டு என்பது வெளிவராத உண்மை.
2005 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்தியாவின் விருப்பத்துக்கு மாறாக ரணில் விக்ரமசிங்கே தோற்று, ராஜபக்சே வெற்றிப் பெற்றார். ராஜபக்சேவின் வெற்றியை விரும்பாத புதுடில்லி, அவரை அங்கீகரிக்காமல், ஓரம் கட்டி, ராஜபக்சேவை ஒதுக்கி வைத்துவிட்டது. இந்த நிலையில் தந்திரக்காரரான ராஜபக்சே, தன்னை நேர்மையாகக் காட்டிக் கொள்ளவும், இந்தியாவின் ஆதரவைப் பெறவும் விரும்பினார். அதற்காக ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ள முயன்றார். தமிழ்நாட்டைச் சார்ந்த தமிழின உணர்வு கொண்ட மூத்த அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு ஈழத் தமிழர் அரசியல் தீர்வுக்காக இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையே உறவுப் பாலமாக செயல்படுமாறு கேட்டுக் கொண்டார். கொழும்பிலிருந்து வந்த இந்த வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள், மூத்த பத்திரிகையாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் நானும் (எம்.ஜி. தேவசகாயம்) இடம் பெற்றிருந்தேன். குழுவின் முதல் கூட்டம் 2007 மே மாதம் 10 ஆம் தேதி சென்னையில் நடந்தது. ராஜபக்சேவின் மூத்த ஆலோசகர் கலந்து கொண்டார். இருதரப்பினரும் ஏற்கக்கூடிய அரசியல் தீர்வுக்கான திட்டம் ஒன்றை தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழக அதிகாரிகள் குழு கொழும்பு சென்று 2007 ஜூலை 17 அன்று ராஜபக்சேயையும் கொழும்பு உயர் மட்ட அதிகாரிகள் குழுவையும் சந்தித்தது. ராஜபக்சே விரிவாக பேசினார். அவரது பேச்சு மிகவும் ஈடுபாட்டுடனும், ஆக்கபூர்வமாகவும் இருந்தது. தமிழக குழுவின் கருத்துகளை ராஜபக்சே முழுமையாக ஒப்புக் கொண்டார். பிரச்னைகளுக்கான தீர்வு முதலில் அந்த நாட்டு மக்களிடமிருந்தே உருவாக வேண்டும் என்றும், அந்தத் தீர்வுத் திட்டங்கள் சர்வதேச கருத்துகளோடு, குறிப்பாக, இந்தியாவின் கருத்தைப் பெற்று திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கூறினோம். ராஜபக்சேயும் ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்புக்குப் பிறகு, தமிழர்கள் வாழும் வடக்கு – கிழக்குப் பகுதிகளை ஒன்றாக இணைத்து, சுயாட்சி வழங்கும் திட்டத்தை ராஜபக்சே அறிக்கையாகவே வெளியிட்டார். இதைத் தொடர்ந்து தமிழகக் குழு, ராஜபக்சே அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் தொடர்ந்து பலமுறை சந்தித்து, தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டது. கடைசியாக, இலங்கை சட்ட அமைச்சர், ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசிய பிறகு ராஜபக்சேவுடன் முக்கியமான சந்திப்பு 2008 மார்ச் 25 இல் நடந்தது. அப்போது அரசியல் தீர்வு திட்டம் ஒன்று இறுதியாக்கப்பட்டது.
உடனே, கொழும்பிலிருந்த இந்திய தூதரகம் இதை அறிந்து ஆத்திரமடைந்தது. அதன் துணை ஆணையர் ஏ. மாணிக்கம், என்னை சந்திக்க நேரம் கேட்டார். நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு மாலை 5 மணிக்கு வரச் சொன்னேன். ஆனால், அந்த அதிகாரி வரவில்லை. அதற்கு பதிலாக எங்களுடன் பேசிக் கொண்டிருந்த கொழும்பு அதிகாரிகள் குழுவிடம், அங்கீகாரம் இல்லாத நபர்களிடம் எப்படி பேசலாம் என்று இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்தது. பிறகு நான், நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளை விளக்கி, பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.எ. நாயருக்கு 2008 ஏப்ரல் முதல் தேதி விரிவான கடிதம் எழுதினேன். அவர், என்னுடன் பணியாற்றிய அதிகாரி நீண்ட காலப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு உருவாகியுள்ள இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் கேட்டிருந்தேன். ஆனால், எந்த பதிலும் வரவில்லை” என்று அய்.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி மேலும் பல விவரங்களை ‘ஸ்டேட்ஸ்மென்’ ஏட்டின் ஓய்வு பெற்ற மூத்த செய்தியாளர் சாம் ராஜப்பா, தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழக குழுவினர் அரசியல் தீர்வுத் திட்டத்தை உருவாக்குவதில் வெற்றிப் பெற்ற நிலையில், இந்தியா தனது போக்கை மாற்றிக் கொண்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக முழு ராணுவத் தாக்குதலைத் தொடங்குமாறு, ராஜபக்சேவுக்கு பச்சைக் கொடி காட்டியது. பிரபாகரன், உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மன் ஆகியோரின் தலையை வெட்ட வேண்டும் என்றும், இதற்காக எந்த ராணுவ உதவியையும் இந்தியா வழங்கும் என்றும் சோனியா கூறினார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவித்தன. பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கரமேனன், பிரதமர் அலுவலகத்தில் செல்வாக்குள்ள அதிகாரிகள் குழு ஒன்றாக இணைந்து, நாட்டின் நலனைவிட சோனியாவின் விருப்பமே முக்கியம் என்று செயல்பட்டன. அதன் பிறகு, கொடூரமான இனப் படுகொலைகளை ராணுவம் நடத்தியது. அதுதான் ‘சேனல் 4’ வெளியிட்ட படுகொலை காட்சிகள். இலங்கையே இந்தப் புதைகுழியை வெட்டிக் கொண்டுவிட்டது.
‘சேனல் 4’ ஆவணங்களைப் பார்த்து உலக நாடுகள் எல்லாம் கண்டிக்கும்போது, இந்தியா மட்டும் எதுவுமே தெரியாதது போல் கள்ள மவுனம் சாதிப்பதற்கு காரணம் இதுதான்.
ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜபக்சேவும் அவரது பரிவாரங்களும் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்படும்போது, புதுடில்லியும், இந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததிலிருந்து தப்பிவிட முடியாது. அதற்கான மணி ஒலிக்கத் தொடங்கி விட்டது” – என்று சாம் ராஜப்பா எழுதியுள்ளார்.
விடுதலை இராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக