திங்கள், 1 ஆகஸ்ட், 2011

நாடாளுமன்றத்தில் இலங்கை நா.உ.(எம்பி)க்கள்: அதிமுக கடும் எதிர்ப்பு

தலைவிரித்தாடும் ஊழல்கள் பற்றிய  வாதங்கள் தவிர வேறு முதன்மையான நிகழ்வு இல்லாத பொழுது இந்த அவலத்தைக் காட்டச்  சிங்கள நா.உ.களை அழைத்திருக்க வாய்ப்பில்லை. வேறு எதற்கோ அழைத்து  அவைக்கும் வரச் சொல்லி உள்ளார்கள். கற்பனையிலும் எண்ணிப்பார்க்க முடியாத மிக மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து தமிழ் மக்களின் உயிர்களைப் பறித்த சிங்களர்களின் சார்பாளர்களைக் கூட்டாளியான காங்.தான் விருந்தாளி என்கின்றது என்றால், கூட்டாளிக்கட்சியினரும் சிங்களத்திற்கு எதிரான போராட்டத்தில் தலைமை தாங்கிய தங்கபாலுஅணியினரும் என்ன செய்கிறார்கள்? உலகத்தின் முன்னால் நம் நாட்டிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தும் செயலில் காங். வெட்கமோ நாணமோ மன உறுத்தலோ இன்றி,  கொலைகாரக் கூட்டாளிகளை வரவேற்கிறது என்றால் இக்காலத்தில் வாழும் நமக்கும் அவமானம்தான். 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/ எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

நாடாளுமன்றத்தில் இலங்கை எம்பிக்கள்: அதிமுக கடும் எதிர்ப்பு

First Published : 01 Aug 2011 04:28:26 PM IST

புதுதில்லி, ஆகஸ்ட் 1: இன்று இந்திய நாடாளுமன்றத்துக்கு இலங்கை எம்பிக்கள் வருகை தந்தனர். அதற்கு அதிமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு கிளப்பினர்.

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமல்ராஜபக்சே தலைமையில் இலங்கை எம்.பி.க்கள் குழு இந்தியாவுக்கு வந்துள்ளது. அவர்கள் இந்தியாவின் அழைப்பின் பேரில் வருகை புரிந்ததாகத் தெரிகிறது. அவர்கள் இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரில் காண்பதற்காக அவைக்கு வந்திருந்தனர். அவர்களை சபாநாயகர் மீராகுமார் வரவேற்று, இலங்கை எம்.பி.க்கள் குழு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருப்பதை அவைக்கு அறிவித்து, அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து, அதிமுக எம்பிக்கள் கூச்சல் எழுப்பினர். தம்பித்துரை எம்.பி. தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எழுந்துநின்று, இலங்கை எம்பிக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், சபாநாயகர் மீராகுமார் இதனை கண்டித்தார். இலங்கை எம்பிக்கள் நமது அழைப்பின் பேரில் வந்துள்ள விருந்தினர். அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றார். ஆனால், இதனை ஏற்காத அ.தி.மு.க. எம்.பி.க்கள், வெட்கம் வெட்கம் என்று கோஷமிட்டனர். தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக