கொழும்பு, பிப்.9: இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட முன்னாள் படைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா திங்கள்கிழமை இரவு திடீரென்று கைது செய்யப்பட்டார். கொழும்பு நகரில் பொன்சேகாவும் அவருடைய பத்திரிகைச் செயலர் சேனக டிசில்வாவும் அலுவலக வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவருடைய வீட்டைச் சூழ்ந்துகொண்ட ராணுவப் போலீஸôர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அதிபர் மகிந்த ராஜபட்சவையும் அவருடைய குடும்பத்தாரையும் கொலை செய்ய சதி செய்ததாகவும் ஆட்சியைக் கவிழ்க்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்ததாகவும் உங்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன, எனவே உங்களைக் கைது செய்கிறோம்; எங்களுடன் ஒத்துழைப்பதுதான் உங்களுக்கு நல்லது என்று மிரட்டும் தொனியிலும் எச்சரிக்கும் தொனியிலும் ராணுவப் போலீஸ் அதிகாரி கூறினார். பொன்சேகா கைது செய்யப்பட்டபோது அந்த இடத்தில் அசாதாரணமான நிலைமை காணப்பட்டது. கைதுக்கு முன்பாக அவர் எதிர்க்கட்சித் தலைவர்கள் 3 பேருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அவரை ராணுவ வீரர்கள் வலுகட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். சம்பவ இடத்தில் நிருபர்கள், புகைப்படக்காரர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பகலில் கைது செய்தால் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் வீதிகளில் வந்து சாலை மறியல் போன்றவற்றில் ஈடுபட்டு சட்டம், ஒழுங்கைச் சீர்குலைக்கக் கூடும் என்று கருதியே இரவில் கைது செய்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ராணுவச் சட்டப்படி கைது செய்து குற்றம் சாட்டியிருப்பதாலும் ராணுவப் போலீஸôரே கைது நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாலும் வழக்கு விசாரணையும் ராணுவ நீதிமன்றத்திலேயே நடக்கவிருப்பதால் சரத் பொன்சேகாவுக்கு இனி என்ன நேரும் என்று அவருடைய ஆதரவாளர்கள் அச்சப்படுகின்றனர். இனி அவருடைய ஆதரவாளர்களையும் அரசு வேட்டையாடும் என்ற அச்சமும் நிலவுகிறது. பொது வேட்பாளராக நின்றதோடு, மகிந்த ராஜபட்சவும் அவருடைய தம்பிகளும் கோடிக்கணக்கில் பொதுப்பணத்தைக் கொள்ளை அடிப்பதாகவும் ஆட்சிக்கு வந்தால் இந்த ஊழல்களை அம்பலப்படுத்துவேன் என்றும் பொன்சேகா தன்னுடைய பிரசாரத்தில் பேசிவந்தார். அத்துடன், ராணுவத்திடம் சரண் அடைய வந்த விடுதலைப் புலிகள் பற்றி தனக்குத் தகவலே தெரிவிக்காமல் மகிந்தவின் தம்பியே அவர்களைக் கொல்ல உத்தரவிட்டிருக்கலாம் என்றும் அவர் பிரசாரத்தின்போது கூறியிருந்தார்.அதையடுத்து மகிந்தவையும் அவருடைய தம்பியையும் போர்க்குற்றவாளிகளாக அறிவித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மகிந்த ராஜபட்ச, இந்தப் புகாருக்காக பொன்சேகா மீது தேசத்துரோக வழக்கே தொடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.இப்போது அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைப் பார்க்கும்போது பொன்சேகாவின் வழக்கு விசாரணை ரகசியமாகவும் விரைவாகவும் நடத்தி முடிக்கப்பட்டு அதிகபட்ச தண்டனையும் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இலங்கை ராணுவத்திலிருந்து பாதியில் விட்டு ஓடிய ராணுவ வீரர்களுக்கு அவர் புகலிடம் கொடுக்கிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது கூறப்பட்டுள்ளது. அவர்களைக் கொண்டுதான் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் அவர் இறங்க திட்டமிட்டிருந்தார் என்றும் வழக்கு போடப்படலாம் என்று தெரிகிறது.
By Ilakkuvanar Thiruvalluvan
2/9/2010 2:49:00 AM
By raj
2/9/2010 2:38:00 AM
By cholan
2/9/2010 2:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*