மணப்பாறை, பிப். 7: திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் கிருஷ்ணன் (எ) ஜெயந்தன் (72) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். இவருக்கு மனைவி நாகலட்சுமி, மகன்கள் சீராளன், அன்பு, மகள் வளர்மதி ஆகியோர் உள்ளனர். மணப்பாறையில் 1938-ம் ஆண்டு பிறந்த இவர் நூற்றாண்டு கண்ட நகராட்சிப் பள்ளியிலும், வட்டார அரசுப் பள்ளியிலும் இன்டர்மீடியட் படிப்பு வரை படித்தார். இவரும், யுனெஸ்கோ கூரியர் தமிழ்ப் பதிப்பில் ஆசிரியராகப் பணியாற்றி சென்னையில் வசித்து வரும் மணவை முஸ்தபாவும் பள்ளி நண்பர்கள். மணவை முஸ்தபாவுடன் இணைந்து 1956-ம் ஆண்டு மணவைத் தமிழ் மன்றத்தைத் தொடங்கியவர். தொடக்கத்தில் ஆசிரியராகவும், வருவாய்த் துறை அலுவலராகவும் இருந்து, பின்னாளில் கால்நடைப் பராமரிப்புத் துறை ஆய்வாளராக சென்னையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். சிறு வயதில் நாடகக் கலையின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக நாடக நடிகராக நடித்தார். தமிழ் இலக்கிய ஈடுபாடு காரணமாக நூற்றுக் கணக்கான சிறுகதைகள், கவிதைகளை எழுதியுள்ளார். கோடு என்ற சிற்றிதழையும் நடத்தி வந்தார். இவருடைய சிறுகதைகள் கோமல் சாமிநாதனின் சுபமங்களா, கணையாழி உள்பட பல்வேறு முன்னணி இதழ்களில் வெளிவந்துள்ளன. நிராயுதபாணியின் ஆயுதங்கள், பகல் உறவு, நாலாவது பிரயாணம், இந்தச் சக்கரங்கள், ஞானக் கிறுக்கன் ஆகியவை இவரது சிறுகதைத் தொகுப்புகளில் குறிப்பிடத்தக்கது. சிறந்த முற்போக்கு சிந்தனைவாதியாக வாழ்ந்த இவர், இறுதிக் காலத்தில் பிறந்த மண்ணில் இருக்க விரும்பியதால், மணப்பாறையில் சிந்தனைக் கூடல் என்னும் அமைப்பைத் தோற்றுவித்து, எழுத்து மற்றும் பேச்சுப் பயிற்சியை அளித்து வந்தார். தற்போது 1,000 பக்கங்களுக்கும் அதிகமான அறிவியல் பூர்வமான நாவல் ஒன்றை எழுதி வந்தார். அதற்குள் அவரை மரணம் தழுவிக் கொண்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக