ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

வன்முறையல்ல, மக்கள் ஒற்றுமையே தேவை: சிவசேனைக்கு கேரளத்தில் ராகுல் காந்தி பதிலடி



எடதலா, பிப். 6: "மகாராஷ்டிரத்தில் சிவசேனையின் பிராந்தியவாதத்துக்கு பதிலடியாக வன்முறை தேவையில்லை;மக்களின் ஒற்றுமையே அதற்கான ஒரே தீர்வு' என்று, கேரளத்தில் மாணவர் காங்கிரஸ் கூட்டத்தில், அதன் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கூறினார். "மகாராஷ்டிரம் மராட்டியருக்கே' என்ற பிரிவினைவாதப் பிரசாரத்தில் சிவசேனை இறங்கியுள்ளது. இதை ராகுல் காந்தி கண்டித்தார். நேற்று முன்தினம் அவர் மும்பை சென்றபோது சிவசேனைத் தொண்டர்கள் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அச்சம்பவத்தைக் குறிப்பிட்டு, மேற்கண்ட கருத்தை ராகுல் காந்தி தெரிவித்தார். ராகுல் காந்தியின் வருகை, முன்னறிவிப்பின்றி இருந்ததால், மாநில காங்கிரஸ் தலைவர்களும், காவல்துறையினரும் வியப்படைந்தனர். புதுச்சேரியில் இருந்து நேற்று காலை கேரளத்துக்கு ராகுல் காந்தி வந்து சேர்ந்தார். கேரளம் மற்றும் லட்சத்தீவுகளைச் சேர்ந்த, மாவட்ட, மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் காங்கிரஸ் பிரதிநிதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோரை சந்தித்த அவர் பேசியதாவது:வெள்ளிக்கிழமையன்று நான் மும்பை சென்றிருந்தேன். எனது வருகைக்கு சிவசேனை எதிர்ப்பு தெரிவித்தது. மிரட்டலை மீறி அங்கு சென்றேன்; அங்கு புறநகர் ரயில்களில் பயணம் செய்தேன். அப்போது, 15 முதல் 20 வரையிலான சிவசேனைத் தொண்டர்கள் எனக்கு கறுப்புக்கொடி காட்டினர். அதேசமயம், ஆயிரக் கணக்கான மக்கள் எனக்கு ஆதரவாகத் திரண்டு பாதுகாப்பு அளித்தனர். பிரிவினைவாதிகளுக்கு எத்தகைய எதிர்ப்பைக் காட்டுவது என்று மும்பை மக்கள் காட்டியுள்ளனர். பிரிவினைவாதிகளுக்கான பதிலடி, வன்முறையல்ல; மக்களின் ஒற்றுமையே சரியான தீர்வாகும். இந்தியர்கள் அனைவருக்கும் இந்நாடு சொந்தமானது. கேரளமோ, தமிழகமோ, பஞ்சாபோ, எந்த மாநிலத்தவராயினும், நாட்டின் எந்தப் பகுதியிலும் வாழ உரிமையுண்டு. தங்கள் சொந்த மாநிலம் போலவே, எந்த மாநிலத்துக்கும் அனைத்து இந்தியர்களும் செல்லலாம்.இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். முன்னதாக அவரைக் காணக் காத்திருந்த முதிய பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பூங்கொத்துகளைப் பெற்றுக் கொண்டார்.
கருத்துக்கள்

இராகுல் நன்றாகப் பேசியுள்ளார். யாருக்கும் எந்த மாநிலத்திற்கும் செல்லத் தடை இருக்கக் கூடாது. எந்த மாநிலத்திற்கும் செல்ல உரிமை உண்டு என்பது உண்மைதான். வன்முறைக்கு எதிர்ப்பை ஒற்றுமை மூலம் காட்ட வேண்டும் என்பதும் உண்மைதான். (இதைக் காங்கிரசே பின்பற்றாது என்பது வேறு). ஆனால். எந்த மாநிலத்திலும் புதியதாக நுழையும் அயல் மாநிலத்தவர் சொத்து வாங்கும் உரிமை இருககக் கூடாது. தலைமுறை தலைமுறையாக வாழ்பவர்களுக்கு மட்டும்தான் விதிவிலக்கு அளித்தல் வேண்டும். இல்லையேல் தமிழ்நாடு அயலவர் சுரண்டல் பகுதியாக மாறியது போல் ஒவ்வொரு மாநிலமும் விளங்கித் தேசிய இன உணர்வு மங்கி நாட்டு ஒற்றுமைக்கு ஊறு நேரும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/7/2010 4:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக