வியாழன், 11 பிப்ரவரி, 2010

நாத்திகத்தை திணிக்கவும் இல்லை; ஆன்மிகத்தை புறக்கணிக்கவும் இல்லை: முதல்வர் கருணாநிதி



உலக திருக்குறள் பேரவை சார்பில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் "திருக்குறள் பேரொளி' என்ற விருதை முதல்வர் கருணாநிதிக்கு வழங்குகிறார் ​குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.​ உடன் முன்னாள் நீதிபதி பு.ரா.​ கோகுலகிருஷ்ணன்.
சென்னை,​​ பிப்.10: "நான் எழுதிய திருக்குறள் உரையில் நாத்திகத்தை திணிக்கவும் இல்லை;​ ஆன்மிகத்தை புறக்கணிக்கவும் இல்லை'' என்று முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டார்.​ சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் "உலகத் திருக்குறள் பேரவை' சார்பில் வழங்கப்பட்ட "திருக்குறள் பேரொளி' விருதைப் பெற்றுக் கொண்டு அவர் பேசியது:""மறைந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடம் எனக்கு அன்பும்,​​ பாசமும்,​​ பரிவும் உண்டு.​ தமிழ் மீதும்,​​ தமிழ் இனத்தின் மீதும் அவர் கொண்டிருந்த பற்றைக் கண்டு நான் வியந்துள்ளேன்.​ அவரைப் போலவே இளையவர் பொன்னம்பல அடிகளாரும் செயல்பட்டு வருகிறார்.​ இரண்டு அடிகளார்களும் பெரியார்,​​ அண்ணா மற்றும் என் மீதும் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர்கள் என்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.​ எனக்கு "திருக்குறள் பேரொளி' என்ற விருது வழங்க விரும்புவதாகவும்,​​ அதற்காக ஒரு தேதியைத் தருமாறு அடிகளார் என்னிடம் வலியுறுத்தினார்.​ எனக்கிருந்த பல்வேறு அலுவல்களை எடுத்துச் சொல்லி இந்த விழா தேவைதானா?​ என்றேன்.​ "எனது ஆசையை நிறைவேற்றுங்கள்' என்றார்.​ துறவிகள் ஆசைப்படக் கூடாது.​ ஆனாலும் இந்த ஆசையை நான் புறக்கணிக்க விரும்பவில்லை.​ எனக்கு "திருக்குறள் பேரொளி' என்ற விருது வழங்கியுள்ளார்கள்.​ திருக்குறளே ஒரு பேரொளிதான்.​ என்னிடம் பேரொளி எதுவும் இல்லை.​ ஆனால் இங்கே மேடையில் என்னைச் சுற்றி அடிகளார்,​​ நீதியரசர் கோகுலகிருஷ்ணன் போன்ற பேரொளிகள் உள்ளன.​ அவர்களுக்கு இந்த விருதை காணிக்கையாக்குகிறேன்.​ எனது திருக்குறள் பணிகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அடிகளார் தெரிவித்தார்.​ நடைமுறை வாழ்க்கைச் சம்பவங்கள்,​​ வரலாற்றுக் கதைகள் மற்றும் இதர சம்பவங்கள் ஆகியவற்றைக் கொண்டு நான் "குறளோவியம்' படைத்துள்ளேன்.​ எனது குறளோவியத்தில் மகாத்மா காந்தி,​​ ரஷிய புரட்சியாளர் லெனின்,​​ காரல் மார்க்ஸ் ஆகியோரின் வாழ்க்கைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.​ குறளோவியம் மட்டுமல்ல,​​ திருக்குறளுக்கு நான் உரையும் எழுதியுள்ளேன்.​ அதில் நான் எந்தக் கொள்கையையும் புகுத்தவில்லை.​ சிலர் எழுதிய திருக்குறள் உரையில் நாத்திகத்தை புகுத்தியிருப்பார்கள்.​ சிலர் ஆத்திகத்தை திணித்திருப்பார்கள்.​ நாத்திகத்தை திணிக்கவும் இல்லை;​ ஆத்திகத்தைப் புறக்கணிக்கவும் இல்லை.​ வள்ளுவர் காலத்து உண்மைகளை அப்படியே உரையாக தந்துள்ளேன்.​ எனக்கு வழங்கப்பட்ட விருது என்னை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும்.​ என்னை மேலும் பாண்டியத்தியம் பெற்றவனாக ஆக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார் முதல்வர் கருணாநிதி.உலகத் திருக்குறள் பேரவையின் தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முதல்வர் கருணாநிதிக்கு "திருக்குறள் பேரொளி' விருதை வழங்கினார்.​ அதோடு ஏலக்காய் மாலை,​​ கிரீடம்,​​ செங்கோல் மற்றும் நினைவுப் பரிசையும் வழங்கினார்.குன்றக்குடியைச் சேர்ந்த இரண்டு கால்களும் ஊனமுற்ற சக்திவேல் என்ற இளைஞர் வரைந்த முதல்வர் கருணாநிதியின் ஆளுயர ஓவியம் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.​ விழாவின் தொடக்கத்தில் சீர்காழி சிவசிதம்பரத்தின் இசை நிகழ்ச்சியும்,​​ திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி மாணவ,​​ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.​ குஜராத் உயர் நீதிமமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பு.ரா.​ கோகுலகிருஷ்ணன்,​​ தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ​ துணை வேந்தர் ம.ராசேந்திரன்,​​ பால முருகனடிமை சுவாமிகள் ஆர்க்காடு வீராசாமி,​​ வீரபாண்டி ஆறுமுகம்,​​ துரைமுருகன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள்,​​ மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.​ பழனிமாணிக்கம்,​​ மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி,​​ முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

உண்மைதான். கலைஞரின் திருக்குறள் உரை சிறந்த உரைகளுள் ஒன்றாகும். குறளோவியம் மூலம் திருக்குறள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினார். இனநலம் எல்லாப் புகழும் தரும் என்னும் குறளடியையும் இன்னாது இனனி்ல் ஊர் வாழ்தல் என்னும் குறள் அடியையும் நினைத்து உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந்தற்று என்னும் திருக்குறளை உலகிற்கு உணர்த்தி நம் இன நலம் காக்க தமிழ் ஈழ விடுதலைக்குப் பாடுபட்டு வென்றால் குவலயம் என்றென்றும் அவரைப் பாராட்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By ilakkuvanar Thiruvalluvan
2/11/2010 2:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக