ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

மாநிலங்கள் இறக்குமதி செய்ய அனுமதி தேவை: தமிழகம் யோசனை



புதுதில்லி, பிப்.6: அத்தியாவசிய உணவுப் பொருள்களை மாநில அரசு சார்ந்த பொதுத் துறை நிறுவனங்கள் இறக்குமதி செய்வதை அனுமதிக்க வேண்டும். இத்தகைய இறக்குமதிகளுக்கு மத்திய அரசு மானியம் அளிக்க வேண்டும் என்று தமிழகம் யோசனை தெரிவித்துள்ளது.மாநில முதல்வர்களின் இரண்டு நாள் மாநாடு தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது. மாநாட்டின் முதல் நாளில், அத்தியாவசிய பொருள்களுக்கான விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழக முதல்வர் கருணாநிதி சார்பில் கலந்து கொண்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் சுருக்கம்:"அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளன.குறிப்பிட்ட சில பொருள்கள் மீது விலையைக் கட்டுப்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது இப்போது அவசியமாகிறது. பருப்பு வகைகள், சர்க்கரை, சமையல் எண்ணெய் மற்றும் காய்கறிகள் போன்ற பொருள்களின் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கும் போக்கு நிலவுகிறது. இந்த விலை உயர்வு பொருள்களின் தேவைகளையும், அவை கிடைப்பதில் உள்ள சிரமங்களையும் அதிகப்படுத்துகிறது.உணவு தானியங்களின் தனி மனித உபயோகம் அதிகரித்தல், தனி மனித வருவாய் அதிகரிப்பு, நலத் திட்ட உதவிகள் போன்றவை இந்த விலை ஏற்றத்துக்குக் காரணங்களாக அமைகின்றன. சந்தையில் ஏற்படும் குழப்பங்களும் இந்த நெருக்கடிக் காரணமாகின்றன. எனவே, இந்தப் பிரச்னையைச் சமாளிப்பதற்கு நீண்ட கால நோக்கிலும், உடனடியாக எடுக்க வேண்டியதுமான நடவடிக்கைகள் அவசியமாகின்றன.தமிழகத்தின் ஆலோசனைகள்... முதல்வர்கள் மாநாட்டை ஒட்டி, மத்திய அரசின் பரிசீலனைக்காக சில யோசனைகளை தெரிவிக்க விரும்புகிறேன்.சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற சில அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு அதிகபட்ச சில்லரை விலையை அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின் கீழ் நிர்ணயம் செய்வதை மத்திய அரசு பரிசீலிக்கலாம்.கள்ளச் சந்தை வர்த்தகம் போன்றவைகள் மீது கடுமையான தண்டனைகள் அளிப்பதை மேலும் உறுதியாக நடைமுறைப்படுத்தும் நோக்கில், அது தொடர்பான சட்டங்களில் விதிகள் உருவாக்கப்பட வேண்டும்.அதிகரித்துவரும் உணவு பொருள்களின் தேவையை ஈடு செய்யும் வகையில், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றின் ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும்.மேலும், தாற்காலிகமாகவோ, கூடுதலாகவோ ஒதுக்கீடு செய்யப்படும் உணவு தானியங்களை மானிய விலையில் மட்டுமே வழங்க வேண்டும்.இருப்புப் போதுமான அளவு உள்ள நிலையில், இப்போது கோதுமையை தாற்காலிகமாக ஒதுக்கீடு செய்வதற்குப் பதிலாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தொடர்ந்து ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் லெவி சர்க்கரையின் அளவு 10 சதவீதம் என்பது 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. லெவி சர்க்கரையை இரண்டு மடங்காக மாநிலங்களுக்கு உயர்த்தி ஒதுக்கீடு செய்திடல் வேண்டும். தேவைப்படும் நேரங்களில் மத்திய அரசு இறக்குமதி செய்து சர்க்கரையை வழங்க வேண்டும்.பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்தப் பொருள்களுக்கான ஆதரவு விலையை நிர்ணயிக்கும் போது வெளிச்சந்தைகளில் நிலவும் விலைகளுக்கு இணையாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும்'' என்று தனது உரையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.தனது உரையின் போது, தமிழக அரசு செயல்படுத்தி வரும் ஒரு கிலோ அரிசி ரூ.1, ரூ.50-க்கு 10 மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட திட்டங்களை அவர் விவரித்தார்.
கருத்துக்கள்

தேவைக்கேற்ப உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்குத் தேவை எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் 1960 களில் வலியுறுத்தி வந்தார். அதனைத் தமிழக அரசு இப்பொழுது ஏறறு வலியுறுத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், இவ்வாறு வலியுறுத்தி விட்டு இறுதியில் தேவைப்படும் நேரங்களில் மத்திய அரசு இறக்குமதி செய்து சர்க்கரையை வழங்க வேண்டும் என முரண்பாடாக வேண்டுவது ஏன் என்று தெரியவில்லை. இவ்வாறு குழப்பிக் கொண்டு இராமல் தேவைக்கேற்ப உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யம் அதிகாரம் மாநிலங்களுக்கு வேண்டும் என வலியுறுத்தி இவ்வுரிமையைப் பெற வேண்டும். மேலும் அதிக அளவிலான சில்லறை விலை என்பது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இதை வரைறயறை செய்யும் அதிகாரத்தை மத்திய அரசிற்கு விடுவது என்பது மாநிலத் தன்னாட்சிக்கு எதிரானது. எனவே, இக் கோரிக்கையைக் கைவிடவேண்டும். மாநில அரசே வரையறுக்க மத்திய அரசு தடையா செய்யப் போகிறது? மாநிலத் தன்னாட்சிதான் அரசின் கொள்கை எனில் அதற்கு ஊறு நேராத வகையில்தான் இதுபோன்ற கூட்டங்களில் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/7/2010 3:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக