செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

கடலூர் அருகே பழங்கால பிரெஞ்சு நாணயம் கண்டெடுப்பு



கண்டெடுக்கப்பட்ட கோழிச் சின்னம் பொறிக்கப்பட்ட பிரெஞ்சு செப்புக் காசு.​ ​(வலது)​ செப்புக்காசில் புதுச்சேரி என்று எழுதப்பட்ட மறுபக்கம்.
கடலூர்,​​ பிப்.​ 8:​ கடலோர கிராமமான தியாகவல்லியில் பழங்கால பிரெஞ்சு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.​ ​கடலூர் அருகே உள்ள தியாகவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கச்சிராயர்.​ ​ கடலூர் திரைப்பட இயக்கச் செயலாளராகவும் குறும்படத் தயாரிப்பாளராகவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார்.​ சாமிக்கச்சிராயர் தனது கிராமத்தில் தொடர்ந்து தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.​ ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள வயல் வெளியில் பழங்காலச் செப்பக்காசு ஒன்றை கண்டெடுத்தார்.​ வட்ட வடிவமான இந்தச் செப்புக் காசின் ஒரு புறம் கோழிச் சின்னமும்,​​ மறுபுறம் புதுச்சேரி 1837 என்றும் உள்ளது.இதுகுறித்துச் சாமிக் கச்சிராயர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:​ ​கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை முதல் புதுவை மாநிலத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் அரிக்கமேடுவரை பல்லாண்டுகளாக பழந்தமிழர் நாகரிகத்தைப் பறைசாற்றும் நாணையங்கள்,​​ பானை ஓடுகள்,​​ சுட்ட மண்ணால் செய்யப்பட்ட கலன்கள்,​​ ​ மது ஜாடிகள்,​​ பாசிமணிகள் உள்ளிட்ட பல பொருள்கள் கிடைத்து உள்ளன.​ ​கடலூர் கடற்கரையோர கிராமங்களில் ஆங்காங்கே காணப்படும் மணல் திட்டுகள் பல காலங்களில் நடந்த கடல்கோள்களால் அழிந்த நகரங்கள்,​​ கிராமங்களின் சுவடுகளாக உள்ளன.​ அத்தகைய மணல் குன்றுகளில் இருந்துதான் இத்தகைய பழங்கால பொருள்கள் கிடைத்து வருகின்றன.​ இந்த மணல் குன்றுகள் பல ரசாயனத் தொழிற்பேட்டைகளாக மாற்றப்பட்டுவிட்டது தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.​ ​தற்போது கிடைத்து இருக்கும் செப்புக்காசு கடலூர் பகுதியில் பிரெஞ்சு அரசின் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததை எடுத்துக் காட்டுகிறது.​ கிராமங்களில் கோழிக்காசு என்று முதியோர் பலர் தெரிவிக்கிறார்கள்.​ மேலும் கடலூர் பகுதிகளில் ஆபரணத் தொழிற்சாலைகள் இருந்தது முன்னரே கண்டறியப்பட்ட தகவல் ஆகும்.​ எனவே கடலூர் துறைமுகம் பழங்காலத்தில் மேன்மையுடன் செயல்பட்டு வந்ததையும் இங்கு வணிகம் சிறந்து இருந்ததையும் இந்தச் செப்புக்காசு எடுத்துக் காட்டுகிறது.​ விரைவில் இந்தக் காசு தொல்பொருள் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் சாமிக் கச்சிராயர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக