மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் பத்மினி, டாக்டர் கபாலிமூர்த்தி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கெüரவிக்கிறார் திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் (வலது).
சிதம்பரம், பிப். 8: திருக்கோயில்களில் தமிழ் ஒலிக்கவும் திருமுறைகள் சபை ஏறவும் குன்றக்குடி அடிகளார் பாடுபட்டு வருவதாக திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமாரசுவாமி தம்பிரான் தெரிவித்தார்.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் பிப்ரவரி 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை 12-வது உலக சைவப் பேரவை மாநாடு நடைபெற்றது. மாநாட்டு நிறைவு விழாவில் திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் பேசியது: தமிழ் திருமுறைகள் கோயில் கர்ப்பகிரகத்தில் நுழையக்கூடாது என்பது விதி அல்ல. எங்கெல்லாம் வடமொழி ஒலிக்கிறதோ அங்கெல்லாம் தமிழும் ஒலிக்கலாம். அதற்காக எந்தத் தியாகத்துக்கு தயாராக இருக்க வேண்டும். அனைவரும் திருமுறைகளை இல்லங்கள் தோறும் ஓதி வழிபட வேண்டும். அப்போதுதான் நாடு வளம் பெறும் என்றார்.இலங்கை யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தர் பேசியது: யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்த ஆறுமுகநாவலரால் சிதம்பரத்தில் பாடசாலை மற்றும் அச்சுக்கூடம் தொடங்கப்பட்டது. இங்கு யாழ்ப்பாண மடத்துக்கு நிறைய நிலங்கள் உள்ளன. 25 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இலங்கையில் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம். தற்போது அமைதி ஏற்பட்டு சமாதான சூழல் உருவாகியுள்ளது. இலங்கைத் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ் மற்றும் சைவ சமயத்தை கைவிட்டு விடமாட்டோம். இன்றும் இலங்கையில் தமிழர் இல்லங்களில் தேவாரம், திருவாசகம் மற்றும் திருமுறைகளை ஓதி வழிபட்டு வருகிறோம். இலங்கையில் 4 மதங்கள் உள்ளன. இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களுக்கு கட்டமைப்பு உள்ளது. இந்து மதத்துக்கு கட்டமைப்பு கிடையாது. கட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் இங்குள்ள சைவ ஆதீனங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்தியாவிலிருந்து வரும் நாளிதழ் மற்றும் வானொலி செய்திகளில் சன்னியாசிகளை கார்ட்டூன் மூலமாகவும், பேச்சு மூலமாக கேலியாக சித்தரித்து வருவதால் இலங்கையில் உள்ள இந்து மதகுருமார்களை கேலி செய்யும் குழப்பநிலை உருவாகியுள்ளது. வானொலி மூலம் திருமுறைகள் தவறாக பாடப்படுகின்றன. இதனை இங்குள்ள ஆதீனங்கள் தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கையில் உள்ள மதத் தலைவர்களுக்கு ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இலங்கையில் மாணவர்களுக்கு நடத்தப்படும் 8 பாடங்களில் ஒரு பாடம் சமயப்பாடம் ஆகும். தமிழகத்திலும் அந்த நிலை வர வேண்டும் என சோமசுந்தரதேசித ஞானசம்பந்தர் தெரிவித்தார்.விருந்தோம்பல் நின்றுவிட்டது குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நிறைவுரையாற்றினார். அவர் பேசியது: சைவ சமயம், சமயம் மட்டுமல்ல, தத்துவம் மட்டுமல்ல. அது வாழ்க்கை முறை. அனைத்து வல்லமைகளும் கொண்டது. இன்றைய அறிவியல் மற்றும் பகுத்தறிவு குறித்து உலகளவில் விடை சொல்லிக் கொண்டு வருகிறது சைவ சமயம். சட்டத்தின் வழியாக ஏற்படுத்த முடியாத மனமாற்றத்தை சைவத்தின் வழியாக ஏற்படுத்த முடியும் என அப்பர் பெருமான் பாடியுள்ளார். சமயங்கள் மானுடத்தை நெறிபடுத்துகின்றன. தற்போது சமயத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாததால் இல்லங்களில் தங்கவைத்து நடைபெறும் விருந்தோம்பல் நின்று விட்டது. குடும்பங்கள் வர்த்தக நிறுவனங்களாக மாறிவிட்டன. இதனால் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் பெருகிவிட்டன. குடும்ப வாழ்க்கை உடைந்து சிதறிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருமணங்கள் சொர்க்கத்தில் இல்லை, ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. பெரியபுராணம் காட்டிய இல்லறத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்றார் குன்றக்குடி அடிகளார்.பழ.தரும. ஆறுமுகம் வரவேற்றார். பேரூர் சாந்தலிங்கராமசாமி அடிகளார் தொடக்கவுரையாற்றினார். திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்தார். உலக சைவப் பேரவை இந்தியத் தூதர் டாக்டர் பத்மினிகபாலிமூர்த்தி தொகுத்து வழங்கினார். கருத்துக்கள்
தமிழ் நாட்டுக்கோயல்களிலும் தமிழர்களின் கோயில்களிலும் தமிழ் வழிபாடு நடக்கும் பொழுதுதான் தமிழர்கள் வளம் பெறுவர். ஆனால், ஆதினங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழ் வழிபாட்டிற்கே வழியில்லை. எனவே, முதலில் ஆதினங்கள் தம் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் தமிழ் மட்டுமே வழிபாட்டு மொழி என்று நடைமுறைப்படுத்த வேண்டும். பின் சிறுபான்மையர் ஆரியத்திற்குச் சார்பாகத் தீர்ப்பு கூறும் உச்ச நீதிமன்றத்தை எதிர்த்தே வழக்கு தொடுத்து அனைத்துக் கோயில்களிலும் தமிழ் வழிபாடு மட்டுமே இருக்க வகை செய்ய வேண்டும். பாட்டென்றால் தமிழ்ப்பாட்டே! வழிபாடென்றால் தமிழ் வழிபாடே! என்னும் முன்னோர் கருத்தை நிலைநாட்ட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/9/2010 3:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 2/9/2010 3:27:00 AM