புது தில்லி, பிப். 6: அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையைக் குறைப்பது தொடர்பாக ஆலோசனை தெரிவிக்க மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கொண்ட உயர் நிலை குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.ஆந்திரப் பிரதேசம், அசாம், பிகார், மேற்கு வங்கம், பஞ்சாப், குஜராத், ஹரியாணா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநில முதல்வர்கள் இக்குழுவில் இடம்பெறுகின்றனர். இவர்களைத் தவிர மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உணவு மற்றும் வேளாண் அமைச்சர் சரத் பவார் மற்றும் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோரும் இக்குழுவில் இடம்பெறுகின்றனர்.உணவுப் பொருள்களின் விலையைக் குறைக்கும் வகையில் பொது விநியோக முறை செயல்பாட்டை வேகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான யோசனைகளை இக்குழுவினர் வழங்குவர்.சர்க்கரை, பருப்பு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை கடந்த 10 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆனால் ஜனவரியில் இவற்றின் விலை ஓரளவு குறைந்துள்ளது. இருப்பினும் சாதாரண மக்கள் வாங்கும் வகையில் இவற்றின் விலைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.முதல்வர்கள் மாநாட்டை நிறைவு செய்து பேசிய பிரதமர், ஏழை மற்றும் பாமர மக்களின் அன்றாட வருவாயை பாதுகாப்பதில் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆனால் உணவுப் பொருள்களின் விலையைக் குறைப்பதில் எதிர்பார்த்த முடிவு அரசுக்கு கிடைக்கவில்லை என்றார்.
கருத்துக்கள்
இதுபோன்ற அறிவுரைக் குழுக்களில் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சேர்க்க வேண்டும். அப்பொழுதுதான் நடுநிலையுடன் நீண்ட காலக் கண்ணோட்டத்தில் நல்ல முடிவுகள் எடுத்துச் செயற்படுத்த முடியும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/7/2010 4:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்2/7/2010 4:07:00 AM