ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

இராணுவ, சிங்கள – பவுத்த மயமாக்கல் ஆகியவற்றால் முற்றுகையிடப்படும் தமிழீழம் !

06 February, 2010 by admin

இலங்கை சுதந்திரம் பெற்ற 62 ஆவது ஆண்டு நிறைவை சிங்கள தேசம் கண்டியில் கொண்டாடி மகிழ்ந்துள்ளது. அவர்களது மகிழ்ச்சிக்குக் காரணம் இருக்கிறது. இலங்கையின் வட – கிழக்கு மாகாணங்களை சிங்களப் பேரினவாத அரசு தனது மேலாண்மைக்குள் வேகமாகக் கொண்டு வருகிறது. இலங்கைத் தீவின் வரலாற்றில் அது என்றுமே ஒரு நாடாக, ஒரே அரசாக இருந்தில்லை.

இராசரட்டை, உறுகுணரட்டை, மாயரட்டை என இலங்கை மூன்றாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றை வெவ்வேறு குறுநில அரசர்கள் ஆண்டார்கள்.
முதலாவது விஜயபாகு, ஆறாவது விக்கிரமபாகு இவர்கள் காலத்திலேயே இலங்கை ஒரு குடைக்குள் ஆளப்பட்டது எனக் கொள்ளலாம். குடியேற்ற நாடுகளில் ஒன்றான போர்த்துக்கேசியர் புயலில் சிக்குண்டு கிபி 1505 ஆம் ஆண்டு இலங்கையில் கரை தட்டியபோது இலங்கையில் மூன்று அரசுகள் வரையறை செய்யப்பட்ட எல்லைகளுக்குள் இருந்தன.

1)தெற்கே கோட்டையைத் தலைநகராகக் கொண்ட கோட்டை இராச்சியம்.

2)வடக்கே யாழ்ப்பாணத்தை தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண இராச்சியம்.

3)மத்தியில் கண்டியைத் தலைநகராகக் கொண்ட கண்டி இராச்சியம்.

யாழ்ப்பாண இராச்சியம்; கிபி 1215 தொடக்கம் கிபி 1619 வரை யாழ்ப்பாண மன்னர்களால் தனிநாடாக ஆளப்பட்டது. அதன் எல்லைகள் புத்தளத்துக்கு வடக்கே மோதரகம் ஆறு முதலாக கிழக்கே பொத்துவிலுக்குத் தெற்கே கும்புக்கன் ஆறுவரை விரிந்திருந்தது

ஒல்லாந்தர்; இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆறு மாவட்டங்களாகப் பிரித்து ஆட்சி செய்தனர். புத்தளத்துக்கு வடக்கே மோதரகம் ஆறு முதலாக பொத்துவிலுக்குத் தெற்கே கும்புக்கன் ஆறுவரை தமிழர் பகுதி எனப் பிரிக்கப்பட்டது. தமிழர்கள் வாழ்ந்த பகுதி யாழ்ப்பாணம் மாவட்டம் என அப்போது அழைக்கப்பட்டது.

இலங்கையில் போர்த்துக்கேயரது ஆட்சி 1656 வரை நீடித்தது. பின்னர் அவர்களிடம் இருந்து ஒல்லாந்தருக்குக் கைமாறியது. ஒல்லாந்தரிடம் இருந்து 1796 இல் ஆங்கிலேயர் கைக்கு மாறியது.

1815 இல் மத்தியில் ஆங்கிலேயர் கண்டி இராச்சியத்தின் மீது படையெடுத்து அதனை ஆண்டுகொண்டிருந்த ஸ்ரீவிக்கிரம இராசசிங்கனைக் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு வந்து அங்கிருந்து லேலூருக்கு அவனும் அவனது குடும்பமும் அனுப்பி வைக்கப்பட்டனர். 1815 ஆம் ஆண்டு கண்டி உடன்படிக்கை மூலம் அந்த இராச்சியம் ஆங்கிலேயருக்குக் கையளிக்கப்பட்டது.

இலங்கையில் இருந்த மூன்று பகுதிகளையும் தனித்தனியாக ஆண்டு வந்த ஆங்கிலேயர் 1833 இல் நிருவாக வசதிக்காக மூன்று பகுதிகளையும் (அதாவது யாழ்ப்பாணம், கண்டி, மற்றும் கோட்டை) ஆகியவற்றை) ஒரே நிருவாகத்தின் கீழ் கொண்டு வந்தனர். 1948 இல் இலங்கைக்கு ஆங்கிலேயர் சுதந்திரம் வழங்கிய போது செயற்கையாக அய்க்கியப்படுத்திய இலங்கைத் தீவைப் பெரும்பான்மை சிங்களவர்கள் கையில் கொடுத்துவிட்டு வெளியேறினார்கள்.

ஒன்றுபட்ட இலங்கையில் தங்களை முதலில் இலங்கையர் என்றும் பின்னர் தமிழர் என்றும் கருதிய தமிழர்கள் ஆங்கிலேயரிடம் தங்களது மூதாதையர் போர்முனையில் இழந்த அரசைப் பிரித்துத் தருமாறு கேட்கத் தவறிவிட்டனர்.

சேர் பொன். அருணாசலம், சேர் பொன். இராமநாதன் போன்றோர் சிங்களவர்களும் தமிழர்களும் இலங்கைத் தீவின் பூர்வீக தேசிய இனங்கள் (Founding Nations) என்றே நம்பினார்கள். தங்களைச் சிறுபான்மை இனம் என அவர்கள் நினைக்கவில்லை. கடைசிக் காலத்தில்தான் சிங்களவர்கள் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை என்ற திரைக்குப் பின்னால் அரசியல் அதிகாரம் முழுவதையும் தங்கள் கைக்குள் கொண்டுவரச் சதி செய்தார்கள் என்பதையும் தம்மை அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்ற உண்மையையும் உணர்ந்து கொண்டார்கள்.

அண்டை நாடான இந்தியாவில் முஸ்லீம் லீக் தலைவர் மொகமது ஜின்னா மாட்டை வழிபடும் இந்துக்களும் மாட்டை அடித்துச் சாப்பிடும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழமுடியாது என பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு வாதாடி பாகிஸ்தான் என்ற தனி நாட்டைப் பிரித்து எடுத்துக் கொண்டணர். 'பிரிட்டிஷ்காரரே வெளியேறுங்கள் ஆனால் முதலில் இந்தியாவைப் பிரித்து விட்டு வெளியேறுங்கள்' என்று ஜின்னாவின் முழக்கத்தை தமிழ்த் தலைவர்கள் காதில் போட மறுத்துவிட்டார்கள்.

சோல்பெரி ஆணைக்குழு முன் தோன்றி 50 க்கு 50 க்கு வாதாடிய ஜி.ஜி. பொன்னம்பலத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதற்குப் பதில் சிறுபான்மை இனத்தவர்களது நலன்களைப் பாதுகாக்க சோல்பெரி யாப்பில் விதி 29 சேர்க்கப்பட்டது.

இலங்கை சுதந்திரம் பெற்ற அதே ஆண்டில் குடியுரிமைச் சட்டத்தை டி.எஸ். சேனநாயக்கா நிறைவேற்றினார். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

1947 இல் நடந்த தேர்தலில் மலையக மக்கள் 7 தொகுதிகளில் வென்றிருந்தார்கள். இதனை சிங்கள இனவாதியான டி.எஸ். சேனநாயக்காவால் செரிக்க முடியவில்லை. இரண்டாவதாக மலையக மக்களின் வாக்குப் பலத்தால் மேலும் 20 தொகுதிகளில் இடதுசாரிக் கட்சிகள் வெற்றிபெற்றிருந்ததை சேனநாயக்கா தனது அரசியல் இருப்புக்கு அவர்கள் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என நினைத்தார்.

1952 இல் நடந்த தேர்தலில் வாக்குரிமை பிடுங்கப்பட்ட மலையக மக்களால் ஒருவரைக் கூட நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முடியாது போய்விட்டது. அறுபதுகளில் சிறிமா – சாத்திரி உடன்பாட்டின் கீழ் 525,000 மலையக மக்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப் பட்டார்கள். இதனால் சிங்களவர்களது எண்ணிக்கை அதிகரிக்கவும் தமிழர் எண்ணிக்கை குறையவும் ஏதுவாயிற்று.

சுதந்திரத்துக்குப் பின்னர் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் எப்படிச் சிங்களவர்களுக்கு சாதகமாகவும் தமிழர்களுக்கு பாதகமாகவும் மாறியதை கீழேயுள்ள அட்டவணை காட்டுகிறது.





இலங்கை சுதந்திரம் பெறு முன்னரே சட்ட அவையில் காணி, வேளாண்மை அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்கா கிழக்கில் காணி மேம்பாடு என்ற போர்வையில் பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களைத் தொடக்கி அவற்றில் தென்னிலங்கையில் வாழ்ந்த சிங்களக் குடும்பங்களை ஆயிரக்கணக்கில் குடியேற்றினார்.

1948 இல் டி.எஸ்.சேனநாயக்கா தனது மகன் டட்லி சேனநாயக்காவை காணி, அமைச்சராக நியமித்து அந்த சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற வழிகோலினார்.

கிழக்கில் 1949 இல் கல்லோயா (பட்டிப்பளை) பள்ளத்தாக்கு திட்டத்தின் கீழ் 120,000 ஏக்கர் நிலம் கல்லோயா மேம்பாட்டு அவையின் கீழ் கொண்டுவரப்பட்டு 40 கொலனிகளில் 20,000 சிங்களவர்கள் முதற்கட்டமாகக் குடியேற்றப்பட்டனர். இந்தக் குடியேற்றத்தின் விளைவாக 1963 ஆம் ஆண்டு அம்பாரை மாவட்டம் என்ற புதிய மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது. 1960 இல் அம்பாரை (டிகமடுல்ல) என்ற புதிய தொகுதி சிங்களவர்களுக்கு உருவாக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள பெரும்பான்மை சேருவெல தொகுதி 1976 இல் உருவாக்கப்பட்டது.

எண்பதுகளில் ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட மதுர ஒயா சிங்களக் குடியேற்றத் திட்டத்தினால் மேலும் ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் குடியேற்றப்பட்டார்கள்.

இதே போல் திருகோணமலை மாவட்டத்தில் அல்லை – கந்தளாய் என்ற பாரிய குடியேற்றம் அய்ம்பதுகளில் தொடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து முதலிக்குளம் ( மொறவேவா) பதவிக்குளம் பெரியவிளாங்குளம் போன்ற சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கிவிடப்பட்டன.

இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் கிழக்கு மாகாணத்தின் இனவாரிஙாந மக்கள்தொகை விழுக்காடு மாறத் தொடங்கியது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1827-1981 இடையில் ஏற்பட்ட மாற்றத்தைச் சுட்டிக் காட்டுகிறது.



இதுபோன்று சுமார் 50 வருடங்களுக்கு முன்னரே திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களை அடிமைப்படுத்த நினைக்கும், சிங்கள மரபணுவில் ஊறியுள்ள இந்த இனவெறியை நாம் இலங்கை அரசுடன் கூடி நின்று செயலாற்றி வெல்லமுடியுமா ? இலங்கை தேசிய நீரோட்டத்தில் கலக்க நினைக்கும் தமிழர்களுக்கு இது ஒரு நல்ல வரலாறுப் பாடம். இனியாவது தெளிவுபெற இது ஏதுவாக அமையும்


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 1623

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக