புதன், 10 நவம்பர், 2010

பெண்களுக்குத் தற்காப்புக் கலைப் பயிற்சி

பெண்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி

சமூக நலத்துறை சார்பில் பயனாளிக்கு தையல் இயந்திரம் வழங்கும் மாநில மகளிர் ஆணைய தலைவர் சற்குணபாண்டியன் (இடமிருந்து 2-வது). (வலது) கூட்டத்தில் பங்கேற்ற அல
திருவள்ளூர், நவ. 9: பாலியல் கொடுமையில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், இரவு நேரத்தில் தனியாக செல்லும்போது ஆபத்து நேர்ந்தால் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் தற்காப்புக் கலை பயிற்சி அளிக்க மாநில மகளிர் ஆணையம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது என அதன் தலைவி சற்குணபாண்டியன் தெரிவித்தார்.மாநில மகளிர் ஆணையம் சார்பில் சமூகநலத் துறையில் பெண்கள் தொடர்பாக வரப்பெற்ற குடும்ப வன்முறை, வரதட்சிணை கொடுமை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாநில மகளிர் ஆணைய தலைவி சற்குணப்பாண்டியன், மாநில ஆணைய உறுப்பினரும் மாவட்ட எஸ்.பி.யுமான வனிதா ஆகியோர் பங்கேற்று ஆய்வு நடத்தினர்.ஆய்வுக்குப் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் மாநில மகளிர் ஆணையத் தலைவி சற்குணபாண்டியன் கூறியது:தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சமுகநலத் துறை சார்பில் வரப்பெற்ற மனுக்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 19 மாவட்டங்களில் ஆய்வை முடித்துள்ளேன். இது 20-வது மாவட்டம்.திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்த வரையில் 2007-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை குடும்ப வன்முறைச் சட்டம் தொடர்பாக 506 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இதில் 334 மனுக்கள் சமூகநலத் துறை மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. 96 மனுக்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு அதில் 31 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் விசாரணையில் உள்ளன.தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை 6259 மனுக்கள் வரப்பெற்றன. அதில் 2959 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் நிலுவையில் உள்ளன. குடும்ப பெண்கள் தங்களது பிரச்னைகளை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றால் மற்ற குடும்ப உறுப்பினர்கள் என்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டாயா என கூறி மேலும் எதிரியாக நினைக்கின்றனர். இதனால் பெரும்பாலான வழக்குகளில் பிரிவு ஏற்படுகிறது.ஆனால், சமூகநலத் துறையில் வழங்கப்படும் புகார்களில் அதுபோல் பிரச்னை ஏற்படாமல் அனைவரும் நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகின்றனர். குடும்பப் பிரச்னை காரணமாக நீதிமன்றத்துக்கு வரும் பெண்களை அவர்களின் வழக்கறிஞர்கள் வாய்தா போட்டு அலைய வைக்காமல் விரைவில் குடும்ப வழக்குகளை முடிக்க துணை புரிய வேண்டும் என்றார்.இக்கூட்டத்தில் காவல் துறையினர், சமூகநலத் துறையினர் மற்றும் பல அதிகாரிகள் பங்கேற்றனர். இறுதியில் சமூகநலத் துறை சார்பில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், திருமண நிதியுதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாரதி நன்றி கூறினார்.
கருத்துகள்

நான் 90களில் பெண்களுக்குத் தற்காப்புப்க்கலைப் பயிற்சியும் சிலம்பக்கலைப் பயிற்சியும் பயிற்சி முகாம்கள் மூலம் அளித்துள்ளேன். நல்ல பயன் இருந்ததாகப் பங்கேற்றோர் தெரிவித்துள்ளார்கள். மகளிர் ஆணையம் மாவட்டங்கள் தோறும் உள்ள மாவட்டக்கலை மன்றங்கள் மூலமாக இப்பயிற்சிகளை அளிக்கலாம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/10/2010 2:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக