சனி, 13 நவம்பர், 2010

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு:

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு: மசோதா நிறைவேற்றம்

சென்னை, நவ. 12: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாநில அரசின் பணிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோவையில் கடந்த ஜூனில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதன் அடிப்படையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாநில அரசின் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் 20 சதவீத ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக செப்டம்பர் 5-ம் தேதி ஆளுநரால் அவசர சட்டம் (தமிழ்நாடு அவசர சட்டம் 30) பிறப்பிக்கப்பட்டு செப்டம்பர் 7-ல் தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் வெளியிடப்பட்டது.  இந்த சட்ட மசோதா புதன்கிழமை (நவம்பர் 10) அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதம்:வி.பி. கலைராஜன் (அதிமுக): தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 80 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் வகையில் இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தமிழில் பேச முடியாத நிலை உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று அறிவித்தீர்கள். அதற்கும் வெற்றி கிடைத்ததாகத் தெரியவில்லை. முதல்வரின் குடும்பத்தினர் நடத்தும் திரைப்பட நிறுவனங்களுக்கு ரெட் ஜெயிண்ட், கிளவ்டு நைன் என ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டுவதற்காக இதனைக் கூறவில்லை.தமிழகத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக இதனை கூறுகிறேன். இந்த தலைமைச் செயலக கட்டடத்தை கட்டுவதற்குக் கூட தமிழர்களைப் பயன்படுத்தவில்லை.சி. ஞானசேகரன் (காங்கிரஸ்): தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க சட்டம் கொண்டு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது வருத்தத்தை தருகிறது. இந்தச் சட்டத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. 20 சதவீதம் என்பதை 50 சதவீதமாக அதிகரித்து திருத்தம் செய்ய வேண்டும் என்றார்.மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. நன்மாறன், பேரவை இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் வை. சிவபுண்ணியம், மதிமுக எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார் ஆகியோர் 20 சதவீத ஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரிக்க வலியுறுத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இந்த ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.விவாதத்துக்கு பதில் அளித்து சட்ட அமைச்சர் துரைமுருகன் பேசியது: இன்று ஒரு புனிதமான நாள். வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது வேதனையான விஷயம். 20 சதவீதம் என்பதை அதிகரிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். இது முதல்படிதான். எதிர்காலத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 100 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் நிலையும் வரும்.  தமிழுக்காக இந்த அரசும், முதல்வர் கருணாநிதியும் அளப்பரிய பணிகளை ஆற்றியுள்ளனர். அதில் ஒன்றுதான் இந்தச் சட்டம். யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தச் சட்டத்தை மாற்ற முடியாது என்றார். அதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் எதிர்ப்பின்றி இந்தச் சட்டம் நிறைவேறியது.
கருத்துகள்

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கேட்டால் பின்னுரிமை ஒதுக்கப்படுகிறது. 80 விழுக்காடு ஆங்கில வழிக் கல்விக்கு என்றால் தமிழ் வழிக் கல்வியை எவ்வாறு ஊக்கப்படுத்தும்?இச்சட்டத்தில் தமிழில் (தமிழ் இலக்கியத்தில்) பட்டம் பெற்றவர்களுக்கு எந்த முன்னுரிமையும் வழங்கப்படவில்லை. எனினும் சட்ட அமைச்சரின் நம்பிக்கை விரைவில் நிறைவேறும நாள் வரட்டும்! அதற்கேற்ப அரசு செயல்படட்டும்! அறிவியல் மேதைகளும் தொழில் முனைவர்களும் கல்வியாளர்களும் பெருக தமிழ்வழிக் கல்வி மட்டுமே தமிழகத்தில் இருக்கும் நிலை உடனே வர வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2010 3:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக