திங்கள், 8 நவம்பர், 2010

பேரவைக் கூட்டம் - தமிழ் வழிக் கல்விக்கான சட்டம்

பேரவைக் கூட்டம் இன்று தொடக்கம்: நான்கு மசோதாக்கள் நிறைவேறுகின்றன


சென்னை, நவ. 7: தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் புதிய சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தொடங்குகிறது. 13-வது சட்டப்பேரவையின் 14-வது கூட்டத்தொடர் இதுவாகும்.ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டமாக கடந்த மார்ச் 19-ம் தேதி நிதிநிலை (2010-2011) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின், 40 நாள்களுக்கும் மேலாக கூட்டத்தொடர் நடைபெற்றது.இந்த நிலையில், சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது.நான்கு முக்கிய மசோதாக்கள்: சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடியதும், மறைந்த உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. இதன்பின், அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பேரவையை எத்தனை நாள் நடத்துவது? என்னென்ன விஷயங்களை விவாதிப்பது என்பது பரிசீலிக்கப்படும். இதன்பின், பேரவை நடைபெறும் நாட்களை பேரவைத் தலைவர் தெரிவிப்பார்.திங்கள்கிழமை தொடங்கும் பேரவை கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரின்போது, நான்கு மசோதாக்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது; கூட்டுறவுச் சங்க தனி அதிகாரிகளுக்கு மேலும் ஆறு மாதங்களுக்கு பதவி நீட்டிப்பு; சொத்துப் பதிவின்போது வசூலிக்கப்படும் முத்திரைத்தாள் கட்டணம் மீது 50 சதவீதம் மேல்வரி விதிக்கப்படுகிறது.இது, மாநகராட்சி, நகராட்சிகளுக்கு வழங்குவதைப் போன்று பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கும் வழங்க வகை செய்யும் சட்ட மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளன.சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் இரண்டாவது பெருந்திட்டத்தில் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வகை செய்யும் மசோதாவும் பேரவையில் கொண்டு வரப்படுகிறது.பிரச்னைகளைக் கிளப்பும்: குழந்தைகள் கடத்திக் கொலை, அரசியல் பிரமுகர்கள் வெட்டிக் கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. இவைகளைச் சுட்டிக்காட்டி சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் பேரவையில் பிரச்னையைக் கிளப்பக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கு ஏற்படும் எதிர்ப்புகள், இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் தலைவர்களின் கைது உள்ளிட்ட சம்பவங்களை பேரவையில் அந்தக் கட்சியினர் எழுப்புவார்கள் என்று தெரிகிறது.காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளில் அரசு எடுத்து வரும் நிலைப்பாடுகள் பற்றியும் எதிர்க்கட்சிகள் பேரவையில் கடும் விமர்சனத்தை முன்வைக்கும் என்று கூறப்படுகிறது.குளிர்கால கூட்டத்தொடரில் காரசாரமான விவாதங்கள் எதிர்க்கட்சிகளுக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே நடைபெறும் என சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: இதனிடையே, திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெறுகிறது.
கருத்துகள்

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் ஐந்தில் ஓரிடம் என அவர்களை ஒதுக்கி வைக்காமல் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை எனச்சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும். அதுதான் உண்மையாகவே தமிழ் வழியில் படிப்பவர்களை ஊக்கப்படுத்துவதாகவும் தமிழ் வழிக் கல்வியைப் ப்ரவலாக்கி அறிவியல் மேதைகளை உருவாக்க வழி வகுப்பதாகவும் அமையும். ஆனால், அரசிற்கு அது குறித்துக்கவலை இல்லை என்னும் வருந்தத்தக்க நிலைதான் உள்ளது. அனைவரையும் தமிழ் வழியில் படிக்கச் செய்வோம்! தரணியெங்கும் தலைமையுறச் செய்வோம்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/8/2010 3:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக