வியாழன், 11 நவம்பர், 2010

தலையங்கம்: அடையாளம்தான், ஆனாலும்...

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய விஜயம் முடிவடையக் காத்திருந்ததுபோல, காங்கிரஸ் தலைமை சுறுசுறுப்பாக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய  சுரேஷ் கல்மாதி, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் செயலர் பதவியிலிருந்தும், ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு ஊழலில் சிக்கிய அசோக் சவாண், மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்தும் கட்சித் தலைமையின் ஆணையை ஏற்று விலகி இருக்கிறார்கள்.மாநிலக் கட்சித் தலைமைகளுக்கும், தேசியக் கட்சிகளின் தலைமைகளுக்கும் இந்த விஷயத்தில் நிறைய வேறுபாடுகள் உண்டு. என்னதான் தவறு நடந்தாலும், தங்களது கட்சியைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்றுவதும், பாதுகாப்பதும்தான் கட்சித் தலைமையின் கடமை என்று கருதுவது மாநிலக் கட்சிகளின் போக்காக இருந்து வருகிறது. தலைவர்களாலும், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைத் தலைவர்களாலும் தவறுகள் செய்து நிரூபிக்கப்பட்ட பிறகும்கூடத் தங்களது பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க அனுமதிக்கப்படுவதும், தலைமையால் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகப் பதவியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவதும் மாநிலக் கட்சிகளின் அரசியல் இலக்கணமாகவே தொடர்கிறது.ஆனால், தேசியக் கட்சிகள், அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் தலைமை, பல்வேறு சந்தர்ப்பங்களில் தவறிழைத்தவர்களைப் பதவி நீக்கம் செய்யவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தயங்கியதில்லை என்பதுதான் வரலாறு. பதவி விலகச் சொல்லி, விசாரணைக் கமிஷன் அமைத்து, தவறு நடந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் வழக்குத் தொடரவும் காங்கிரஸ் தயங்கியதில்லை. இதற்குப் பல உதாரணங்களைக் காட்ட முடியும்.1958-ல், மத்திய அரசு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஹரிதாஸ் முந்திராவின்  பலவீனமான ஒரு நிறுவனத்தில் சுமார் | 1.24 கோடி முதலீடு செய்திருப்பதை மக்களவையில் வெளிக்கொணர்ந்தவர் காங்கிரஸ் உறுப்பினரான பெரோஸ் காந்தி. இவர் அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவின் மருமகன். நீதிபதி எம்.சி. சாக்ளா தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அன்றைய நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி தனது பதவியை ராஜிநாமா செய்ததுடன், கமிஷனால் விசாரிக்கப்பட்டார்.1964-ல் பண்டித நேருவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், பஞ்சாபின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவருமான முதல்வர் பிரதாப்சிங் கைரான்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, சுதி ரஞ்சன்தாஸ் கமிட்டி அமைக்கப்பட்டு அதன் அறிக்கை அடிப்படையில் அவர் பதவி விலக நேர்ந்தது. 1982-ல், அன்றைய மகாராஷ்டிர முதல்வர் அப்துல் ரெஹ்மான் அந்துலே மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தபோது, அவர் பதவி விலக நேர்ந்தது. உச்ச நீதிமன்றம் வரை வழக்கு நடந்து, அவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட பிறகுதான், மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டார். வென்ற பிறகு மத்திய அமைச்சராகவும் வாய்ப்பளிக்கப்பட்டது.பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிக் கட்சிகள் போன்ற தேசியக் கட்சிகளும் சரி, ஊழல் தொடர்பான விஷயங்களில், தங்களுக்குக் களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாகவே இருக்கின்றன. அப்படியானால், தேசியக் கட்சிகளில் ஊழலே இல்லை என்பதல்ல,  ஊழலில் அந்தக் கட்சிகளுக்குத் தொடர்பே இல்லை என்பதும் அர்த்தமல்ல. நீர்மூழ்கிக் கப்பல் ஊழல், போஃபர்ஸ் ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல், பாஜக தலைவர் பங்காரு லெட்சுமணன் நேரிடையாகச் சம்பந்தப்பட்ட ஊழல் என்று பட்டியல் இல்லாமல் இல்லை. ஆனாலும், ஊழலைத் தேசியக் கட்சிகள் நியாயப்படுத்துவதோ, அங்கீகரிப்பதோ கிடையாது என்பதுதான் சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம்."அசோக் சவாணும், சுரேஷ் கல்மாதியும் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதன்மூலம் இந்த ஊழல்களை மூடிமறைக்கப் பார்க்கிறார்கள்' என்றும், "இவர்கள் பதவி விலகுவதால் மட்டும் ஊழல் ஒழிந்து விடுமா!' என்றும், "இதெல்லாம் கண்துடைப்பு வேலை, சோனியா காந்தி மட்டும் என்ன ஒழுங்கா?' என்றும் கேள்விகள் எழுப்பப்படும். அசோக் சவாணும், சுரேஷ் கல்மாதியும் பதவி விலகியிருப்பதால் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாதுதான். ஆனால், இந்த ஒரு சிறிய அடையாள நடவடிக்கைகூட இல்லாமல் போனால், ஊழல் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அல்லவா மாறிவிடும்?நுகர்வோர் கலாசாரமும், சந்தைப் பொருளாதாரமும் ஊழலின் ஊற்றுக்கண்கள். ஊழல் அதிகரித்து, ஒரு சிலரிடம் தகுதிக்கு மீறிய கணக்கு வழக்கே இல்லாத பணம் புழங்கும்போது அதன் தொடர்விளைவாகப் படாடோப வாழ்க்கையும், அதனால் ஏற்படும் பொறாமையும், சட்ட-ஒழுங்குப் பிரச்னையாக மாறும் என்பதும் கசக்கும் உண்மைகள். ஊழலை முற்றிலுமாக ஒழிப்பது என்பது இயலாத ஒன்று என்பதும் நிஜம். அதற்காக, ஊழலை அங்கீகரித்துவிட முடியுமா, என்ன?1921-ல் மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோதே, நாளைய இந்தியா ஊழலில் சிக்கிச் சீரழிந்துவிடக்கூடும் என்று பயந்தார். அதனால்தான், பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் மக்களில் மக்களாக, சிக்கனமான எளிய வாழ்க்கை வாழ்பவர்களாக இருக்க வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டத் தலைப்பட்டார். பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் சுயநலம் இல்லாதவர்களாகவும், பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.எல்லோரும் அண்ணல் காந்தியாகிவிட முடியாதுதான். ஆனால், உயர் பதவியில் இருப்பவர்கள் ஊழலால் தங்களது கரங்கள் கறைபடியாமல் பார்த்துக்கொண்டால், அவர்களது நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகளும் ஓரளவுக்கு நேர்மையானவர்களாக இருப்பார்கள் என்பதுதானே எதிர்பார்ப்பு. அடுத்த மகாராஷ்டிர முதல்வர் கறைபடியாதவராக இருப்பார்  என்று ராகுல் காந்தி கூறியிருப்பது நடைமுறைச் சாத்தியம்தானா என்று சந்தேகிப்பதைவிட, நம்பிக்கை ஏற்படுத்துகிறதே என்று மகிழ்ச்சி அடைவதுதான் சரி.இந்தப் பதவி நீக்கங்களால் மட்டுமே ஊழல் ஒழிந்துவிடாது. ஆனால், ஊழல் ஏற்புடையதல்ல என்கிற நம்பிக்கை ஊட்டும் செய்தியை நாட்டுக்குத் தந்திருக்கும் காங்கிரஸ் தலைமைக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்!
கருத்துகள்

ஊழலை வெளிக் கொணர்நத பெரோசு கந்தி உயிரிழந்ததும் காங்.கால்தான். (பெரோசு காந்தியல்ல) வேறு வழியின்றி ஊழல் தவைலர்களைப் பதவி நீக்கம் செய்வதுபோல் காட்டினாலும் அதைப் பதவி மாற்றமாக மாற்றி ஆளுநர் பதவி போன்ற பதவிகள் தருவதும் காங்.தான். காங்.கின் ஊதுகுழலாகத் தினமணி மாறுவதைப் பார்த்தால் அ.இ.அ.தி.மு.க. வுடன் காங். கூட்டணி ஏற்படும் என எதிர்நோக்கி எழுதியதைப் போல் உள்ளது. ஊழல் பெருசஙசாளிகளைக் காங். தப்ப விடுவது குறித்து அறிய தினமணியின் பழைய இதழ்களைப் படித்துப் பார்த்தாலே போதுமானது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/11/2010 3:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக