சனி, 13 நவம்பர், 2010

அதியமான் பூமியில் தினமணி!

அதியமான் பூமியில் தினமணி!


எழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண். ஏழு நிறங்கள், ஏழு ஸ்வரங்கள், ஏழு ஜென்மங்கள் என்று ஏழு என்கிற எண்ணுக்கு எத்தனை எத்தனையோ சிறப்புகளை எழுதிக் கொண்டே போகலாம். "தினமணி' நாளிதழ் 77-வது ஆண்டில் தனது 7-வது பதிப்பை நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி இருக்கிறது.அகில இந்திய அளவில் மிக அதிகமான பதிப்புகளைக் கொண்ட நாளிதழ் ராம்நாத் கோயங்கா தொடங்கிய "இந்தியன் எக்ஸ்பிரஸ்'தான் என்றாலும், அதே குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழ் தினசரியான "தினமணி' அதிகமான பதிப்புகளை ஏற்படுத்தாமல் விட்டுவிட்டது துரதிர்ஷ்டம்தான். அந்தத் தவறு இப்போது திருத்தப்படுகிறது. தருமபுரியில் ஏழாவது பதிப்பு தொடங்கப்பட்டு விட்டது.இந்த ஏழாவது பதிப்பு தொடங்கப்படும்போது, 77 ஆண்டுகளுக்கு முன்பு "தினமணி' தொடங்கப்பட்ட சம்பவம் பற்றிய செய்திகள் நினைவில் நிழலாடுகின்றன. "தினமணி' பிறந்த கதை சுவாரஸ்யமானது.சுருக்கமாக, மனதில் நிற்கும் விதத்தில் புதிதாக வெளியாக இருக்கும் தேசிய நாளிதழுக்கு நல்லதொரு பெயரைத் தேர்தெடுக்க வாசகர்களுக்கு பத்து ரூபாய் பரிசு என்று 1934-ல் அறிவிக்கப்பட்டது. "தினமணி' என்கிற பெயரை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.எஸ். அட்சயலிங்கமும், தியாகராய நகரைச் சேர்ந்த எஸ். சுவாமிநாதனும் எழுதி அனுப்பி இருந்தனர். பரிசு இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது."தினமணி' என்றால் அது கதிரவனைக் குறிக்கும். அந்தப் பெயர் புதுமையாகவும் கவர்ச்சிகரமானதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் தருவதாகவும் இருந்தது. நேரடியாகப் பொருள் கொண்டால், அன்றாடம் ஆட்சியாளர்களைத் தட்டி எழுப்பும் மணி என்று சொல்லலாம்.தேசிய தினசரியான "தினமணி' பாரதியாரின் நினைவு நாளன்று வெளிவந்தது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். "தினமணி' பிறந்த அதே நாள்தான் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோ நகரில் உரையாற்றிய நாள். "தினமணி' நாளிதழின் விளம்பரத்தில் "பாரதியார் நீடூழி வாழ்க! தினமணி நீடுழி வாழ்க!' என்று குறிப்பிட்டிருந்ததுடன், இந்த தேசிய நாளிதழ் எந்தக் கட்சியையும் சார்ந்ததல்ல என்றும் சுயநல நோக்கமில்லாமல் மக்களுக்குச் சொந்தமான ஒரே பத்திரிகை என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.செப்டம்பர் 11, 1934-ஆம் ஆண்டு அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் தனது முதல் பக்கத்திலேயே "ஏழை துயர் தீர்க்க, எல்லோரும் களித்திருக்க, எவருக்கும் அஞ்சாத தினமணி' என்கிற வாசகத்தைப் பொறித்தவண்ணம் "தினமணி' நாளிதழின் முதல் இதழ் வெளிவந்தது.""இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும், தன்னைத் "தமிழர்' என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு வெளியே செல்லும்போது தன்னை "இந்தியன்' என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டு வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் தமிழ் பேசும் அனைவருக்கும்தான்'' என்று சந்தேகத்துக்கிடமின்றி முதல் நாள் தலையங்கம் விளக்கி இருந்தது.சுதந்திரப் போராட்ட காலத்தின் உச்ச கட்டத்தில் விடுதலைப் போராளிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும், மக்கள் சக்தியை ஏகாதிபத்திய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக திரட்டும் ஆயுதமாக "தினமணி' விளங்கியது.77 ஆண்டுகள் உருண்டோடியும், இன்றும் இளமை குன்றாமலும், தனது கடமை தவறாமலும் துணிவில் தொய்வு ஏற்படாமலும் தொடர்ந்து செயலாற்றும் "தினமணி', தனது ஏழாவது பதிப்பாக தருமபுரி பதிப்புடன் தனக்கு மேலும் வலிமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.துணிந்து ஒரு பின்தங்கிய மாவட்டத்தில் "தினமணி' பதிப்பைத் தொடங்குவானேன் என்று கேட்டால், பின்தங்கிய நிலையில் இருக்கும் ஒன்றை முன்னேற்றமடையச் செய்வதுதானே ஒரு பத்திரிகையின் கடமை என்பதுதான் பதில்.தருமபுரி பதிப்பில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, பெங்களூரு ஆகிய பதிப்புகளும் இணைகிறது. சொல்லப்போனால், நிர்வாக வசதிக்காக அரசால் பிரிக்கப்பட்ட அன்றைய ஒன்றுபட்ட சேலம் மாவட்டம் "தினமணி'யில் தருமபுரி பதிப்பு மூலம் மீண்டும் இணைக்கப்பட்டிருக்கிறது.முந்தைய சேலம் மாவட்டத்தில் வடசேலம் என்றழைக்கப்பட்ட பகுதிகள் ஒன்றாக்கப்பட்டு, 1965-ல் தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதுவரையிலும் தருமபுரி என்பது வெளியுலகில் பேசப்படாத நகரமாகவே இருந்தது.இந்த மாவட்டத்தில் உள்ள தொரப்பள்ளியில் பிறந்தவர்தான் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி என்கிற சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார். தருமபுரியை அடுத்துள்ள பாப்பாரப்பட்டியில் இருந்த சான்றோர்கள் பலர் விடுதலை வேள்வியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். வ.உ.சி., மகாகவி சுப்பிரமணிய பாரதி ஆகியோருடன் கைகோர்த்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த சுப்ரமணிய சிவா இங்குதான் பாரதமாதாவுக்கு கோயில் கட்ட முனைந்தார்.விடுதலைப் போரில் தீவிரம் காட்டிய சுப்ரமணிய சிவா, அலிகார் சிறையில் இருந்த காலத்தில் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் தீர்த்தகிரியார்,  கந்தசாமி குப்தா ஆகியோருடன் ஏற்பட்ட நட்பினால், பாப்பாரப்பட்டிக்கே வந்து வாழ்நாள் இறுதிவரை இங்கேயே இருந்தார். அதியமான் வாழ்ந்ததும், அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்ததும் இந்த மண்ணில்தான். பழைய சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டாலும், அவை அனைத்தையும் மீண்டும் தனது தருமபுரி பதிப்பினால் ஒன்றிணைத்துள்ளது தினமணி. "தினமணி'யின் முதல் பதிப்பு சென்னையில் 1934-ம் ஆண்டு பாரதியின் 13வது நினைவாண்டில் உதயமானது. அதன் பிறகு 1951ல் மதுரை பதிப்பும், 1990-ல் கோவை பதிப்பும் உருவானது. அதன் பின்னர் 2003-ல் திருச்சியிலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் திருநெல்வேலி, வேலூர் ஆகிய ஊர்களிலும் பதிப்புகளைத் தொடங்கிய தினமணி தற்போது தருமபுரியிலும் தொடங்கியுள்ளது. "தினமணி' வரலாற்றில் தருமபுரி ஒரு திருப்புமுனை. மகாகவி பாரதியார் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தருமம் மறுபடி வெல்லும்'. எமது வெற்றிப் பயணம் தருமபுரி பதிப்பின் மூலம் "தினமணி' மீண்டும் வீறுகொண்டு எழும் என்கிற நம்பிக்கையுடனும், இந்த வெற்றிப் பயணத்துக்கு, வாசகர்கள்தான் காரணம் என்கிற நினைவுகளுடனும், தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு எங்கள் காணிக்கையாக இந்தப் பதிப்பை சமர்ப்பிக்கிறோம்.
கருத்துகள்

திமணியின் முன் நினைவுகளை அசை போட்டு நாங்களும் அறியச் செய்தமைக்கு நன்றி. நாட்டில் ஏழைகள்துயர் தீர்ந்து விட்டதா? எல்லாரும் களிப்பில் உள்ளனரா? ஏன் அந்த முழக்கம் நிறுத்தப்பட்டது? முழக்கங்கள் 
எப்பொழுதெல்லாம் மாற்றப்பட்டன? ஏன் மாற்றப்பட்டன? என்னும் செய்திகளையும் வெளியிட்டால் நன்று. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2010 4:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக