திங்கள், 8 நவம்பர், 2010

தலையங்கம் : உறவுக்குக் கைகொடுப்போம்!

தலையங்கம்
உறவுக்குக் கைகொடுப்போம்!

First Published : 08 Nov 2010 12:00:00 AM IST


அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் விஜயம் இரண்டு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை வலுப்படுத்த உதவும் என்பதுடன், அதிவேகமாக மாறிவரும் உலக வெளியுறவு அமைப்புகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதும் உண்மை. இந்தியாவைத் தொடர்ந்து இந்தோனேஷியா, தென் கொரியா, ஜப்பான் போன்ற தனது நட்பு வட்டத்துக்குள் உள்ள சில ஆசிய நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் விஜயம் செய்ய இருப்பது, ஆசியாவில் அமெரிக்க நேச நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சியாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.சோவியத் யூனியனின் பிளவுக்குப் பிறகு உலகில் பலம் பொருந்திய நாடுகளாகக் கருதப்படுபவை அமெரிக்காவும், சீனாவும். மக்களாட்சித் தத்துவம் என்கிற வகையில் இந்தியாவுக்கு அணுக்கமான உறவு அமெரிக்காவுடன்தான் ஏற்பட முடியும் என்றாலும் அமெரிக்காவின் முதலாளித்துவக் கண்ணோட்டமும், சுயநலச் சந்தைப் பொருளாதாரமும் நமக்கு அமெரிக்காவுடனான நெருக்கத்தில் காணப்படும் நெருடல்கள். அண்டை நாடு என்பதைத் தவிர, எந்த விதத்திலும் இந்தியாவின் பொருளாதாரத்துக்கும், வெளியுறவுக் கொள்கைக்கும், நட்புக்கும் உகந்த நாடாக சீனாவை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. இந்திய அமெரிக்க உறவு என்பது, சோவியத் யூனியன் என்கிற மாற்று சக்தி இல்லாத சூழ்நிலையில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இன்றியமையாதது என்பதுதான் எதார்த்த நிலைமை. பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மியான்மர் என்று இந்தியாவைச் சுற்றி ஓர் எதிர்ப்பு வளையத்தை வலுப்படுத்தி, அந்த நாடுகளைத் தனது நட்பு வட்டத்துக்குள் இணைத்துக் கொண்டிருக்கிறது சீனா. போதாக்குறைக்கு, இப்போது சீனாவின் பார்வை இந்துமகா சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதிலும் திரும்பி இருக்கிறது.உலக அரங்கில் அமெரிக்காவுக்கு எதிரான மிகப்பெரிய சக்தியாக, கொள்கை அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் உயர்ந்து வரும் சீனாவைக் கண்டு அமெரிக்காவின் ஆதரவில் தங்களது பொருளாதாரத்தையும், பாதுகாப்பையும் அமைத்துக் கொண்டிருக்கும் பல ஆசிய நாடுகள் மிரண்டு போயிருக்கின்றன. இந்த நிலையில், சீனாவை எதிர்கொள்ளும் வலிமையுள்ள பெரிய நாடாக, சீன சர்வாதிகாரத்துக்கு மாற்றாக உள்ள ஜனநாயக நாடாக அமெரிக்காவுக்கு இந்தியா காட்சி அளிக்கிறது. இந்தியாவைப் பலப்படுத்துவதன் மூலம், சீனாவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கிற ராஜதந்திர புத்திசாலித்தனம், இந்திய அமெரிக்க உறவின் அடிப்படைக் காரணம்.இந்தியாவும் அமெரிக்காவும்தான் இயற்கையான நட்பு நாடுகளாக இருந்திருக்க வேண்டும். இந்த இரண்டு நாடுகளுமே ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவை என்பது மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நாடுகள். ஆனாலும், ஆரம்பம் முதலே இந்திய அமெரிக்க நெருக்கம் எதிர்பார்த்த நட்புறவுடன் இல்லாமல் இருப்பதற்கு அமெரிக்காவின் கண்ணோட்டமும், தவறான எதிர்பார்ப்புகளும்தான் காரணம்.இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமைந்த அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின்படி, தன்னுடன் நட்புறவு கொள்ளும் நாடுகள் பொருளாதார ரீதியாகவோ, ராணுவ ரீதியாகவோ தனது கூட்டாளி நாடாக அண்டி இருக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கத் தொடங்கியது. ஜப்பானை எடுத்துக்கொண்டால், அமெரிக்கா ராணுவத்தளம் அமைத்துக் கொள்ள இடமளித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவை எடுத்துக்கொண்டால், பென்டகனின்  சுட்டு விரல் அசைவுக்கு ஏற்றபடிதான் கொள்கை முடிவுகள் அங்கே வகுக்கப்படும். அமெரிக்காவைப் பொருளாதார ரீதியாக அண்டி இருக்கும் சிறிய நாடுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அமெரிக்காவுக்குக் குற்றேவல் புரியும் நாடாக, அமெரிக்கா சொல்வதை எல்லாம் தலையசைத்து அனுசரிக்கும் நாடாக இந்தியா இல்லை என்பதுதான் அமெரிக்க நிர்வாகத்தை எரிச்சலூட்டும் விஷயம். இந்தியாவும் தன்னைப்போல ஒரு ஜனநாயக நாடு என்பதையும், பிரதமரே ஆனாலும் இங்கே தன்னிச்சைப்படி எதுவும் செய்துவிட முடியாது என்பதையும் அமெரிக்கா சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஏற்படும் கருத்து வேறுபாடுதான் இது. பாகிஸ்தான் உள்ளிட்ட பல அமெரிக்க நட்பு நாடுகளில் ஜனநாயகம் என்பது வெறும் கண்துடைப்பாகத்தான் தொடர்கிறது என்பதையும், அமெரிக்க ஆதரவில் தொடரும் பல நாடுகளில்  ராணுவ ஆட்சி நடைபெறுகிறது என்பதையும், மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலான இந்தியாவுக்கு அதே அளவுகோல் கூடாது என்பதையும் யாராவது அமெரிக்காவுக்கு எடுத்துக்கூற வேண்டும்.சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்கா, தனது நாட்டின் பெரு முதலாளிகளின் நன்மைக்காக வாதாட வேண்டிய கட்டாயம். அதிபர் பராக் ஒபாமாவையே எடுத்துக்கொண்டால் அவரது விஜயத்தின் செயல்திட்டங்களில், இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் இழப்பீடு பிரச்னையும், இந்திய ராணுவத்துக்கு அமெரிக்க நிறுவனங்களின் தளவாடங்கள் வாங்குவதும் முதன்மை பெற்றிருக்கிறது. அமெரிக்க அணுஉலை தயாரிப்பு நிறுவனங்களான வெஸ்டிங்ஹெளஸ், ஜி.இ. போன்ற நிறுவனங்கள், விபத்து நேர்ந்தால் அணு உலைத் தயாரிப்பாளர்கள் இழப்பீடு தரும் பிரிவுக்குக் கடும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றன.அதேபோல, அமெரிக்க ராணுவத் தளவாடங்களை இந்தியா பெறும்போது, அந்தத் தளவாடங்களை நாம் எப்படி, யார்மீது பயன்படுத்துவது என்பதுகூட ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்திக்கிறது. அந்தத் தளவாடங்களை நாம் தமக்குத் தகுந்தபடி மாற்றிக் கொள்ளும் உரிமைகூட மறுக்கப்படுகிறது. ஏனைய நாடுகள் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டிருப்பதால் நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்புதான், நமது உறவில் ஏற்படும் சிக்கல்.அமெரிக்கா தனக்காகப் பேசாமல் தனது நாட்டு வியாபார நிறுவனங்களுக்காகப் பேசுகிறது. அமெரிக்கா இந்தியாவை ஒரு சுதந்திர ஜனநாயக நாடாகப் பார்க்காமல், தன்னை அண்டி வளமுடன் வாழும் துணைவனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த "ஜமீன்தாரி' மனநிலையை மாற்றிக்கொண்டு, வியாபாரக் கண்ணோட்டத்தை விட்டுவிட்டு நட்புறவுக்கு அமெரிக்கா கைகொடுக்குமேயானால், அது ஒரு வெற்றிகரமான, இயற்கையான நட்பாக இருக்கும்.அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய விஜயத்தால் வேறு எந்த நன்மை ஏற்படாவிட்டாலும், மேலே குறிப்பிட்ட உண்மையை அவருக்குப் புரியவைப்போமேயானால், அது இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். அமெரிக்காவுக்கு உலக அரங்கில் ஏற்படும் மிகப்பெரிய பலமாகவும் அமையும்.தீவிரவாதத்துக்கும் சீனாவின் ஏகாதிபத்தியக் கண்ணோட்டத்துக்கும் எதிராகப் போராட வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கும் உண்டு, இந்தியாவுக்கும் உண்டு!
கருத்துகள்

சீனாவிற்கு எதிராக இந்தியாவை வலுவான நாடாக மாற்ற அமெரிக்கா விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளது உண்மையெனில் பாக்கிசுதானை அமெரிக்கா செல்லப்பிள்ளையாக நடத்தி வளர்த்து வருவதன் நோக்கம் என்ன? இந்தக் கருத்து ஆசிரியவுரையில் தெரிவித்துள்ள பிற உண்மையான கருத்துகளுக்கு எதிராக உள்ளது. உறவுக்குக் கை கொடுக்கும் பொழுது மற்றொரு கை நம் கழுத்தின் மீது கை வைக்கும் மற்றொருவனுடன் குலுக்கிக் கொண்டிருக்கக் கூடாது அலலவா? எனவே தினமணியின் விழைவிற்கேற்ப அமெரிக்கா இந்தியாவை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமெனி்ல் இந்தியாவிற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு உற்ற தோழனாக விளங்கக் கூடாது. 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/8/2010 4:07:00 AM
எனவே, இங்கு தமிழ் மக்கள் மனிதப்பேரவலம் ஒன்றை சந்தித்துள்ள இன்றைய வேளையில், உலக சமூகம் உடனடியாத் தலையிட்டு அவர்களைக் காக்க வேண்டும் என்றார் அவர்.
By thamilan
11/8/2010 3:03:00 AM
தீர்வு ஒன்றை காணும் முயற்சிகள் எதனையும் இந்தியா மேற்கொள்ளவில்லை. கடந்த சனிக்கிழமை சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நான்கு தடவைகள் மக்கள் செறிவாக வாழும் பாதுகாப்பு வலயத்தின் மீது குண்டுத் தாக்குதல்களை நிகழ்த்தின. பீரங்கி தாக்குதல்களும் கடுமையாகத் தொடர்கின்றன. இந்திய அதிகாரிகளின் கொழும்பு பயணத்தின் பின்னரே இவ்வாறான தாக்குதல்கள் உக்கிர நிலையை எட்டியுள்ளன. விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தவில்லை, இராணுவத்தினரே படையெடுப்பினை மேற்கொள்ளும் போது மக்களை மனித கேடயங்களாக முன்னால் நகர்த்தி முன்னேறுகின்றனர். தமிழ் மக்கள் மீது பல வழிகளிலும் மேற்கொள்ளப்படும் இன அழிப்புக்களின் உண்மைத் தன்மையை அனைத்துலக சமூகம் இப்போது மெதுவாக உணரத் தொடங்கியுள்ளது. தமது மண்ணில் சுதந்திரமாக வாழ்ந்து, தமது தாயகத்தை தாமே அளும் நியாயமான அரசியல் அவாக்கள் எமது மக்களுக்க உள்ளன. அந்த அரசியல் அவாக்களை வென்றெடுப்பதற்கு விடுதலைப் புலிகளையே அவர்கள் தமது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் அவாவுக்கான போராட்டம் அவற்றை அவர்கள் அடையாதவரை முடிவுக்கு வராது. எனவே, இங்கு தமிழ
By thamilan
11/8/2010 3:02:00 AM
ஈழத் தமிழர்களுக்கு எதிராக இன்றைய இந்திய அரசு செயற்படுகின்றது: பா.நடேசன் குற்றச்சாட்டு 29 ஏப்ரல் 2009, 02:31 தமிழ்மக்கள் மீதான சிறிலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கைக்கு தொடர்ந்து இராணுவ உதவிகளையும் இராஜதந்திர ஆதரவையும் வழங்கி, இன்றைய இந்திய அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருவது கண்டு தாம் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். 'த ஸ்ரேற்ஸ்மன்' இதழின் வெளிவிவகாரங்களுக்கான ஆசிரியர் சிம்ரன் சோதிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தற்போதைய இந்திய மத்திய அரசின் நிலைப்பாடுகளும், செயற்பாடுகளும் எமக்கு ஏமாற்றத்தையே தருகின்றன. இந்தியாவின் உண்மையான நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில் - இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் இயற்கையான கூட்டாளிகள் யார் என்பதை அறிவதில் இன்றைய இந்திய அரசு தவறி விட்டது; அது ஈழத் தமிழர்கள் தான். அவர்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். இதனை கண்டு நாம் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். போரை நிறுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல்
By thamilan
11/8/2010 3:00:00 AM
ஆகமொத்ததில் அமெரிக்கா இந்தியாவை குட்டி இஸ்ரேல் ஆக்காமல் விடபோவதில்லை , இதில் அமெரிக்கா ஜனநாயக நாடாம் .
By ரிஜி.கரியாப்பட்டினம்
11/8/2010 2:44:00 AM
அமெரிக்கா ஒரு ஜ்னநாயக நாடாக இருப்பினும் அது ஒரு முதலாளித்துவ நாடு. நம் நாடு ஜனநாயக நாடு. அதேநேரத்தில் ஒரு சோஷலிஸ நாடு. (நம்நாட்டின் நடைமுறை வேறு).தன் நாட்டில் ஜனநாயகம் இருப்பினும் பிறநாடுகளைப் பொருத்தவரையில் எந்த அரசியல் அமைப்பாக இருந்தாலும் தன்னை சார்ந்து இருக்கவேண்டும் என்பதே அமெரிக்காவின் எண்ணம்.இந்தியாவின் ஜனத்தொகை இந்தியாவை ஒரு சரியான சந்தையாக பாவிக்க வைத்திருக்கிறது. அவ்வளவே. இந்தியாவின் மீது எந்த வித கரிசனையும் அமெரிக்காவிற்கு கிடையாது. ஆசிய பிராந்தியத்தில் பாகிஸ்தான் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டாலும் இஸ்ரேலுக்கு அடுத்த செல்லப்பிள்ளையாக பாகிஸ்தானைத்தான் நினைக்கிறது அமெரிக்கா.இந்தியாவில் பாகிஸ்தான் நடத்தும் தீவிரவாத தில்லுமுல்லுகளை இதுநாள் வரை அமெரிக்கா கண்டித்தது கிடையாது. இந்தியாவை அடக்கி ஆள்வதற்காகவே பாகிஸ்தானுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் ஆயுதங்களை வழங்கிவருகிறது அமெரிக்கா.சீனா அமெரிக்காவிடம் எப்படி நடந்துகொள்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆனால் இன்றைய காங்கிரஸ் அரசு அமெரிக்காவிடம் அடி பணிய காத்திருப்பது போலத்தான் தெரிகிறது.
By A.Kumar
11/7/2010 11:27:00 PM
BPO (BUSINESS PROCESS OUTSOURCING) சம்பளம் மிக குறைவு அமெரிக்கர்கள் யாரும் அந்த சம்பளத்தில் வேலை செய்ய தயாராகவில்லை என்பதால் தான் ஒபாமாவிற்கு கரிசனை தவிர, இந்தியனுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதல்ல. ஐ நா சபையில் நிரந்தர உறுபினராக இந்தியாவை ஏற்றுக்கொள்ள செய்ய முடியவில்லை! போபால் விஷ வாயுவில் இறந்தவர்களுக்கு எதுவும் செய்ய போவதில்லை, அணு உலையில் வரும் கழிவுகளை மறுபடியும் உபயோக்கிக்க உத்தரவாதம் தர போவதில்லை. பாகிஸ்தான் தீவிரவாத ஊடுருவலை கண்டிக்க போவதில்லை. பொதுத்துறையில் குவிந்துள்ள பணத்தை கொள்ளையடிக்கத்தான் இந்த பயணம்.
By N RAMIAH, CHENNAI.
11/7/2010 10:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக