சென்னை, நவ. 7: நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது தமிழக அரசின் செயலற்ற தன்மைகளை விமர்சித்துப் பேசும் அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சியைக் குறைகூறிப் பேச வேண்டாம் என அதிமுக எம்.பி.க்களுக்கு அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவுரை கூறியிருப்பதாகத் தெரிகிறது.எம்.பி.க்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் ஒபாமா திங்கள்கிழமை உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கூட்ட அலுவல்கள் தொடங்குகின்றன.இந்தக் கூட்டத்தொடரில் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளைத் தெரிவிப்பதற்கான, அதிமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டம் ஜெயலலிதா இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.தொலைத் தொடர்புத்துறையில் "2 ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார் பற்றி பிரதானமாகக் கவனம் செலுத்த வேண்டும் என எம்.பி.க்களுக்கு ஜெயலலிதா அறிவுரை கூறியதாகத் தெரிகிறது.நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது, மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகத்தால் குற்றஞ்சாட்டப்பட்டது ஆகியவற்றுக்குப் பிறகும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா பதவி விலகாமல் இருப்பதாக ஜெயலலிதா ஏற்கெனவே கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்.எனவே இந்த விஷயம் குறித்து அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அதிக அக்கறை காட்டுவார்கள் என்று தெரிகிறது.முல்லைப் பெரியாறு அணை விவகாரம், காவிரியில் தண்ணீர் விட கர்நாடகம் மறுப்பு உள்ளிட்ட பிரச்னைகள் பற்றியும் அதிமுகவினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்னை எழுப்புவார்கள் என்று சொல்லப்படுகிறது.முதல்வர் கருணாநிதியின் தலைமையிலான திமுக அரசு சரியாகக் கையாளாமல் போனதால்தான் இந்த இரு பிரச்னைகளும் மோசமான நிலையை எட்டியுள்ளன என்று ஜெயலலிதா அறிக்கைகள் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதே குற்றச்சாட்டுகளை வலியுறுத்தும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுகவினர் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனராம்.எனினும் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துப் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இப்போது திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியைத் தன் பக்கம் இழுக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முயற்சிக்கிறார் என்று பரவலாகப் பேசப்படுகிறது. காங்கிரஸ் இருக்கும் பக்கம்தான் பலம் அதிகமாக இருக்கும் என்ற சூழ்நிலை உருவாகி இருப்பதால் திமுகவிடம் இருந்து காங்கிரஸ் கட்சியைப் பிரித்துவிட வேண்டும் என்று அதிமுக தரப்பில் கடும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவே நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க வேண்டாம் என்ற அறிவுரை, அக் கட்சியினரிடம் நல்ல பெயரைப் பெறுவதற்கான ஒரு முயற்சியாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கருத்துகள்


By Ilakkuvanar Thiruvalluvan
11/8/2010 3:29:00 AM
11/8/2010 3:29:00 AM


By Mohammed, KJM
11/8/2010 2:49:00 AM
11/8/2010 2:49:00 AM


By Mara Mandai
11/8/2010 12:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English11/8/2010 12:22:00 AM