தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை... புதிய தலைமைச் செயலகத்தில் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் கருணாநிதி.
''இணையத்தில் தமிழை அனைவரும் எளிதில் தட்டச்சு செய்யவும் படிக்கவும் ஒரே
மாதிரியான ஒருங்குறி (யூனிகோட்) முறையில், தமிழ் எழுத்துருக்களுடன் தமிழில் இல்லாத உச்சரிப்பைப் பயன்படுத்துவதற்காக, கிரந்த எழுத்துகளை புதிதாக (உதாரணமாக தமிழில் 'க' என ஒரே எழுத்து, உச்சரிப்புதான் உள்ளது. ஆனால், நான்கு வகை 'க' உச்சரிப்புக்கான கிரந்த எழுத்துகள் உண்டு) சேர்க்கவேண்டும். மேலும் கிரந்த எழுத்துகளுக்குக் கூடுதலாக இடம் ஒதுக்குவதுடன், 'எ, ஒ, ழ, ற, ன' ஆகிய தமிழ் எழுத்துகளையும் சேர்க்கவேண்டும்'' என்று முன்வைக்கப்பட்ட கருத்தை மத்திய அரசு ஏற்று, கன்சார்ட்டியத்துக்கு அனுப்பியது. இதனை ஆய்வு செய்வதற்காகவே இந்தக் கூட்டம். அதையடுத்து, இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பில் உள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஒரு கடிதமும் அனுப்பினார், முதல்வர்.
கணினித் தமிழ் அறிஞர்கள் சிலர், ''வெவ்வேறு எழுத்துருக்களை பயன்படுத்துவது மாறி, யூனிகோட் எழுத்துருவின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. அந்த முறையைக் காலத்துக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த 'யூனிகோட் கன்சார்ட்டியம்' அமைப்பு செயல்படுகிறது. யூனிகோட் முறையில் தமிழுக்கான இடத்தை அதிகரிப்பது தொடர்பாக, கடந்த 6-ம் தேதி நடக்க இருந்த கன்சார்ட்டியத்தின் கூட்டத்தில் முடிவெடுக்க இருந்தனர். இதற்காக, மத்திய அரசு அனுப்பிய கருத்துதான் பிரச்னைக்குக் காரணம். யூனிகோடைப் பொறுத்தவரையில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மொழிகளின் எழுத்துருக்களுக்கு ஏற்கெனவே தனித்தனியான இடங்கள் உள்ளன. அப்படியிருக்க, சம்ஸ்கிருதம் கலந்த உச்சரிப்புக்காக கிரந்த எழுத்துகளுக்குத் தனி இடம் ஒதுக்குவதும், தமிழுக்கான இடத்தில் இவற்றுக்கு இடம் கேட்பதும் சரியல்ல. தனித்தன்மை மிக்க தமிழின் தூய்மையைக் கெடுக்க இப்படியரு முயற்சி நடக்கிறது. இதைவிட்டால், தமிழ் மட்டும் அல்ல, பிற திராவிட மொழிகளையும் விட கிரந்தம் மேல்நிலைக்கு வந்து, திராவிட மொழிகள் அதன் துணைமொழிகள் போன்று ஆகிவிடும். தமிழகத்தைப் பொறுத்தவரை நாளைக்கு தமிங்கிலத்தை மனதில் கொண்டும் தனி எழுத்துகள் உருவாகும் அபாயமும் ஏற்படும்...'' என்றனர் கொதிப்பாக.
தமிழுக்கு எதிரானதாகக் கூறப்படும் 'கிரந்தக்கலப்பு' கருத்துருவை, மூன்று மாதங்களுக்கு முன்பே மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டார்கள். சம்பந்தப்பட்ட துறையை கவனிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் கவனத்துக்கு இது போகவில்லையா? இப்போது அவசர அவசரமாகக் கூட்டம் போடும் தமிழக அரசு, முன்பே தமிழ் அறிஞர்கள் சுட்டிக்காட்டியும் கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன்? காலம் கடந்த காலத்தில் முதல்வர் கூட்டிய கூட்டத்திலும் தகுதியான இணையத் தமிழ் அறிஞர்களை அழைக்காதது ஏன்? தி.மு.க. எம்.பி. கனிமொழி, அவரின் கணவர் அரவிந்தன் ஆகியோர் கணினித் தமிழ் துறையில் செய்த பங்களிப்புதான் என்ன? செம்மொழி தமிழுக்கு மாநாடு நடத்தியதாக மார்தட்டிக்கொள்பவர்களுக்கு இதுதான் அழகா? என்றெல்லாம் வரிசையாகக் கேள்விகளை அடுக்குகிறார்கள், தமிழ் அறிஞர்கள். இதற்கிடையில், யூனிகோடில் தமிழுக்கான கூடுதல் இடம் பற்றிய முடிவு, வரும் பிப்ரவரிக்குத் தள்ளிவைப்பதாக கடந்த 2-ம் தேதியன்று கன்சார்ட்டியம் அமைப்பு அறிவித்துள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக