சனி, 13 நவம்பர், 2010

தலையங்கம்: இவரா திருவாளர் பரிசுத்தம்?

லையங்கம்: இவரா திருவாளர் பரிசுத்தம்?


ஏழு ஆண்டுகளில் மகாராஷ்டிர மாநிலம் நான்கு முதல்வர்களைச் சந்தித்துவிட்டிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் இந்த நான்கு முதல்வர்களுமே மக்கள் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவர்கள் அல்ல என்பதுடன், குறிப்பிடும்படியான நிர்வாகத் திறமையோ, அரசியல் பின்னணியோ இல்லாதவர்களும்கூட.ஒரு மிகப்பெரிய புயலுக்குப் பின்னே ஊழல் குற்றச்சாட்டுகளால் சரிந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் நன்மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளவும், மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், ராணுவத்தினரின் மத்தியிலும் அரசியல்வாதிகள் பெயரில் ஏற்பட்டிருக்கும் ஆத்திரத்தைத்  தணிக்கவும், காங்கிரஸ் தலைமை கையாண்டிருக்கும் உத்திதான், பிருத்விராஜ் சவாண் என்கிற மாற்று ஏற்பாடு. துணிந்து அசோக் சவாணை மாற்றியதற்குக் காங்கிரஸ் தலைமையைப் பாராட்டும் அதேநேரத்தில், சட்டப் பேரவைக் கட்சியின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பதவியில் அமர்த்தாமல் இருப்பதற்குக் கண்டிக்கவும் வேண்டியிருக்கிறது.288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 82 உறுப்பினர்களும், கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 62 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். 82 காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒருவர்கூட நேர்மையான நல்லாட்சி தரமுடியாது என்று காங்கிரஸ் தலைமை கருதுவதாலோ அல்லது சட்டப்பேரவை உறுப்பினர்களின் செல்வாக்கைப் பெற்ற ஒருவரைவிடக் கட்சித் தலைமையின் நம்பிக்கைக்கு உரியவர்கள்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்கிற காங்கிரஸ் கட்சியின் எழுப்பப்படாத சட்டத்தின் காரணமாகவோ, பிருத்விராஜ் சவாண் மகாராஷ்டிர மாநிலத்தின் 22-வது முதல்வராகத் தலைமையால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.பிருத்விராஜ் சவாணுக்குப் பெரிய அரசியல் பின்னணிகள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி கிடையாது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கராட் நகரம் தட்சிண காசி என்று பெயர் பெற்றது. பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் அரசாண்ட பகுதி என்று கருதப்படும் கராட், இஸ்லாமியர்களுக்கும் ஒரு புனித நகரம். இந்த கராட் தொகுதி இப்போது மகாராஷ்டிர மாநிலத்துக்கு ஒரு முதல்வரையும் வழங்கிப் பெருமை பெறுகிறது.பிருத்விராஜ் சவாணின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது 1991-ல்தான். ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பக் கல்லூரியிலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் படித்துத் தேர்ந்த பிருத்விராஜ் சவாண், விமானத்துக்கான உறுப்புகள் தயாரிப்பது மற்றும் ராணுவத்துக்கான நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒலிபரப்பு சாதனங்களைத் தயாரிப்பது போன்ற நிறுவனங்களில் அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ராஜீவ் காந்தியின் நண்பர் சாம் பித்ரோடாவால் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு அரசியல் ஞானஸ்நானம் பெற்ற அறிவுஜீவிகளில் ஒருவர் பிருத்விராஜ் சவாண்.பிருத்விராஜ் சவாணும் ஒருவிதத்தில் பார்த்தால் பிரதமர் மன்மோகன் சிங்கைப் போல, நிர்வாகத்தில் அக்கறை காட்டுபவராகத் தொடர்பவரே தவிர, அரசியலில் தனது ஆளுமைத் திறனைக் காட்ட நினைப்பவரல்ல. இதனால்தானோ என்னவோ, ஆரம்பம் முதலே பிரதமரின் நன்மதிப்பைப் பெற்றவராகவே தொடர்கிறார். பிரதமரின் அலுவலகத்தில் இணை அமைச்சராக இருந்த பிருத்விராஜ் சவாணை, பிரதமரின் பரிந்துரையின் பேரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மகாராஷ்டிர முதல்வராகத் தேர்வு செய்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.அமெரிக்காவில் படித்தவர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தேர்ச்சியுற்றவர். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்ததால், பல்வேறு கோஷ்டிகளை அரவணைத்துச் செல்லக்கூடியவர், ராகுல் காந்தியின் பார்வையில் எந்தவித ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்காது, திருவாளர் பரிசுத்தமாகக் காட்சியளிப்பவர் போன்றவை பிருத்விராஜ் சவாணின் தனிச் சிறப்புகளாகக் கருதப்பட்டு முதல்வர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.அசோக் சவாணின் கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 23 அமைச்சர்களும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 20 அமைச்சர்களும் இருந்தனர். புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் பிருத்விராஜ் சவாண், தனது அமைச்சரவையில் பாதிக்குப் பாதி புதுமுகங்களை அறிமுகப்படுத்த இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதில் யார் யார் என்று தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வர் பிருத்விராஜ் சவாணுக்குக் கிடையாது. அதைத் துணை முதல்வர் அஜித் பவாரும் அவரது மாமா சரத் பவாரும் நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள்.தனது அமைச்சரவையில் பாதிக்குப் பாதி புதுமுகங்கள் என்றால், பெருவாரியான காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி இழக்க வேண்டியிருக்குமே, அது சாத்தியம்தானா? ஏற்கெனவே நாராயண் ராணேயில் தொடங்கி, முதல்வர் பதவி கிடைக்காத பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நிலையால், அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களைப் பிருத்விராஜ் சவாணால் செய்ய முடியுமா? அப்படிச் செய்தால், பதவியில் தாக்குப்பிடிக்க முடியுமா? இப்படி ஏராளமான கேள்விகள் புதிய முதல்வர் பிரித்விராஜ் சவாணை எதிர்நோக்கும் சவால்களாகக் காத்திருக்கின்றன.ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு முறைகேடுகளுக்காகப் பதவி விலக்கப்பட்டிருக்கிறார் அசோக் சவாண். புதிய முதல்வர் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரராக ஊழலற்றவராக இருப்பார் என்று ராகுல் காந்தியால் உறுதியளிக்கப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். ஆமாம், மும்பையின் மத்தியப் பகுதியில் அமைந்த வடாலா பகுதியில், குறைந்த வருவாய் பிரிவினருக்கான குடியிருப்பு ஒதுக்கீடு வீடுகளை, வருமானத்தைக் குறைத்துக் காட்டி வாங்கிய ஊழலில் சிக்கியவராயிற்றே பிருத்விராஜ் சவாண் என்றெல்லாம் நாம் இப்போது கேள்விகள் எழுப்பிக் கொண்டிருக்கலாகாது. மக்களே மறந்து விட்டார்கள், கட்சித் தலைமைக்கு ஞாபகமா இருக்கும்!
கருத்துகள்

தன் வசதிக்கேற்ப அடிமையை மாற்றிய காங். ஐ ஆகா, ஒகோ என்று சிலர பாராட்டிக் கொண்டிருக்க தினமணி உண்மைகளை எடுத்துரைத்துள்ளது. பாராட்டுகள். ஊழலுக்கு எப்போதுமே தண்டனை கிடையாது. அதனைத் தெரியும் படிச் செயதால்தான் பதவிப் பறிப்பும் பின்னர்ப் புதிய பதவியும் கிடைக்கும். விலக்கப்பட்டவர் எந்த மாநிலத்தின் ஆளுநர் ஆவாரோ தெரியவில்லை. இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2010 4:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக