திங்கள், 8 நவம்பர், 2010

வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்!

வேற்றுமையில் ஒற்றுமை காண முயல்வோம்!


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய வருகை நாடு முழுவதும் ஒருவித பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. அவர் இந்தியாவின் நண்பரா, நமக்குச்  சாதகமாகச் செயல்படக்கூடியவரா என்று ஒரு சிலர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.அமெரிக்க நிறுவனங்களின் அன்றாட அலுவல்களை இணையதளத்தின் உதவியால் செய்து கொடுக்கிற பி.பி.ஓ.க்களைக் குறைப்பது போன்ற ஒபாமாவின் செயல்பாடுகளால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்களுக்கும் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் இருப்பதாகச் சிலர் வாதிடுகின்றனர். அமெரிக்க மக்களின் பிரதிநிதியாக அந்நாட்டின் அதிபர் என்ற முறையில் அரசுமுறைப் பயணமாக பராக் ஒபாமா முதல்முறையாக இந்தியா வருகிறார். ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அதிபர் என்ற முறையில் அவரை வரவேற்பது நமது கடமை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், அவரது அரசு முறையிலான இந்திய விஜயம் எந்த அளவுக்கு இந்தியாவுக்குப் பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் கை கொடுக்கும் என்பதுதான் விவாதத்துக்குரிய பொருளாக இருக்கிறது. மரியாதையுடனும் பாதுகாப்புடனும், சமஉரிமையுடனும் வாழும் நாடுகளில் அமெரிக்கா முதன்மையான இடத்தில் உள்ளது. அந்த அளவுக்குத் திறமையை மதித்து அமெரிக்க நிறுவனங்களும், அரசாங்கமும் இந்தியர்களுக்கு வாய்ப்புகளை வாரி வழங்கியுள்ளன.காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றியபோதுதான் இனவெறிக்கு எதிராகப் போராடினார். அமெரிக்காவின் அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கனும் இனவெறிக்கு எதிராகப் போராடியவர். கறுப்பின மக்களுக்கு சமஉரிமை கிடைக்க அவர் நடத்திய போராட்டங்கள் ஏராளம். அதுபோல இனவெறிக்கு எதிரான மார்ட்டின் லூதர் கிங்கின் போராட்டத்தையும் மறக்க முடியாது. பாரதத்துக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா வழக்கறிஞராகப் பணியாற்றும்போது நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர். லிங்கனும், மகாத்மாவும், மார்ட்டின் லூதர்கிங்கும் நடத்திய 150 ஆண்டுகால போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றிதான் ஒபாமா. கறுப்பு இனத்தவரான ஒபாமா 2008-ல் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மாபெரும் சரித்திர நிகழ்வு.தந்தையால் ஆப்பிரிக்கத் தொடர்பும், தாய் மறுமணம் செய்ததால் ஆசியக் கண்டத்தின் தொடர்பும், பிறப்பால் வட அமெரிக்கக் கண்டத்தின் தொடர்பும் உள்ள ஒபாமாவை  பெருவாரியான அமெரிக்கர்கள் தங்களது தலைவராக அங்கீகரித்தது மாபெரும் அரசியல், சமுதாய மாற்றமாகும். கடந்த 10 ஆண்டுகளில் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். ஒபாமா வருகையில் ஒரு தனித்துவம் உண்டு. இதுவரை இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள் அனைவருமே தங்கள் பயணத் திட்டத்தில் பாகிஸ்தானையும் இணைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஒபாமாவின் பயணத் திட்டத்தில் பாகிஸ்தான் இல்லை. அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு மட்டுமே வந்திருக்கிறார். பாகிஸ்தான் போகும் திட்டம் இந்தப் பயணத்தில் இல்லை.   இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன. இரு நாடுகளும் ஆங்கிலேயே ஆட்சியின்கீழ் இருந்தவை. இரு நாடுகளின் அடிப்படை அரசியல் சட்டத்திலும் ஆட்சிமுறையைத் தவிர, பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கிப் பணியாற்ற அளிக்கப்படும் ஹெச் 1 பி விசா பாதிக்கும்மேல் இந்தியர்களுக்குத்தான் அதிகம் வழங்கப்பட்டு வருகிறது. 2007-ல் வழங்கப்பட்ட 1,54,052 ஹெச் 1 பி விசாக்களில் 83,464 விசாக்களும்,  2008-ல் வழங்கப்பட்ட 1,29,464 ஹெச் 1 பி விசாக்களில் 72,517 விசாக்களும், 2009-ல் வழங்கப்பட்ட 1,10,367 விசாக்களில் 55,886 விசாக்களும் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு வழங்கப்படும் ஹெச் 1 பி விசாக்கள் குறைந்துவிட்டதாகச் சிலர் குற்றம்சாட்டினாலும், வழங்கப்பட்டதில் பாதிக்கும்மேல் நமக்குத்தான் கிடைத்துள்ளன. எந்தவொரு நாடும் தனது தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகே மற்ற நாடுகளுக்கு உதவும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, இந்தப் பிரச்னையில் அமெரிக்க அரசை நாம் குற்றம் கூறுவதில் பலனில்லை. உலகப் பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும் வல்லமை படைத்ததாக அமெரிக்காவின் பொருளாதாரம் உள்ளது. 2008-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டது  இந்தியாவும், சீனாவும்தான். என்னதான் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தாலும் சீனாவில் ஜனநாயகம் இல்லை. தனி மனித உரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அந்த வகையில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. உலகமயமாக்கலின் மூலம் இந்தியா வளர்ச்சி அடைந்திருப்பதையும் அந்நாடு கவனித்து வருகிறது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள், இராக் மீதான படையெடுப்பு, பல நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு என்ற அடிப்படையில் அமெரிக்காவைக் குறை கூறுவோர் ஏராளம். அமெரிக்காவிலேயே அரசின் இந்த முடிவுகளைப் பலர் ஏற்றுக்கொள்வதில்லை. பாகிஸ்தானிடம் கண்டிப்புடன் அமெரிக்கா நடந்து கொண்டிருந்தால் மும்பைத் தாக்குதல், நாடாளுமன்றம் மீதான தாக்குதல் போன்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் இருந்து இந்தியா தப்பித்திருக்கும் என்று கருதுவோரும் உண்டு. ஏனெனில், பயங்கரவாதத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வரும் நாடு இந்தியா. காஷ்மீரில் உயிர்ப்பலிகள் அன்றாட நிகழ்வாகிவிட்டன. இந்தப் பிரச்னைகளில் ஒபாமா தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். அதிபர் ஒபாமாவின் இந்திய விஜயத்தில் இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வுகாண முடியும் என்றோ, இந்தப் பிரச்னைகளில் அமெரிக்கா தனது முடிவுகளையும், நிலைப்பாடுகளையும் தெளிவாக்கும் என்றோ யாரும் எதிர்பார்க்கக் கூடாது. அரசுமுறைப் பயணங்களில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதும், நட்புறவு நெருக்கமாவதும்தான் எதிர்நோக்கும் நன்மைகளாக இருக்கக் கூடும். இரு நாள்களுக்கு முன்பு நடந்த அமெரிக்க செனட் மற்றும் மாநில கவர்னர்கள் தேர்தலில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒபாமாவின் பொருளாதாரத் திட்டங்கள் தேவையான மாற்றங்களை உருவாக்கவில்லை என்பதைத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அடுத்த அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெறுவாரா என்ற விவாதம் இப்போதே தொடங்கிவிட்டது. இந்த நிலையில்தான் அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இந்திய மாணவர்களைப்போல, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க மாணவர்களுக்கு ஒபாமா தான் செல்லும் இடங்களில் எல்லாம் அறிவுரை வழங்கி வருகிறார். இந்தியாவில் படித்த சுமார் 50 ஆயிரம் டாக்டர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு ஒருவர் டாக்டராக வேண்டுமானால் | 4.5 கோடி செலவாகும் என்கிறார்கள். அதன்படி பார்த்தால் 50 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இந்தியா அமெரிக்காவுக்கு இந்த விஷயத்தில் உதவியுள்ளது என்று கொள்ளலாம். இந்த நேரத்தில் இந்தியாவில் பஞ்சம் நிலவிய காலத்தில் அமெரிக்கா அளித்த மனிதாபிமான உதவிகளை நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. பஞ்சகாலத்தில் நன்கொடையாகவும், கடனாகவும் அமெரிக்கா வழங்கிய கோதுமை, பால்பவுடர் ஆகியவற்றை மறக்க முடியாது. 1962 சீனப்போரின்போது அமெரிக்க அதிபர் கென்னடி நமக்குக் கொடுத்த ஆயுதங்களால்தான் போர் முடிவுக்கு வந்தது என்பதையும் நாம் நினைவுகூர்ந்தாக வேண்டும். போபால் விஷவாயு வழக்கில் இந்தியாவுக்கு நியாயம் கிடைக்காததும், அணு எரிசக்தி  ஒப்பந்தத்தில் அமெரிக்கா விட்டுக்கொடுக்கும் தன்மையைக் கடைப்பிடிக்காததும் வருத்தமான செய்திகளே. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க ஆதரவளிப்பதில் அமெரிக்கா இன்னும் ஏன் தயங்குகிறது என்பதும்  வேதனைக்குரிய ஒன்று. இந்தியாவுக்கு அமெரிக்கா எவ்வளவு தேவையோ, அந்த அளவுக்கு அமெரிக்காவுக்கும் இந்தியா தேவை என்பதை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும். தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த மும்பை நகருக்கு வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான தாஜ் ஹோட்டலில் தங்கியதன் மூலம் உலகுக்கு ஒரு மிகப்பெரிய செய்தியை இந்தியாவின் சார்பில் தெரியப்படுத்தி இருக்கிறார். தீவிரவாதத்தை இந்தியா துணிவுடன் எதிர்கொண்டு வீறுகொண்டு எழுந்து கொள்வதுடன், இந்தியாவின் இயல்பு வாழ்க்கை தீவிரவாதத்தால் தகர்ந்துவிடவில்லை என்பதுதான் அது! இன்றைய அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், உலக அரங்கிலான மரியாதைக்கும், தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்துக்கும் இந்தியாவின் துணையும் நட்புறவும் தேவை. அமெரிக்காவுக்குத்தான் மிக அதிகமாக, ஏறத்தாழ 60 சதவீதம்  இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகின்றன. இந்தியர்கள் அதிகமாகக் குடியேறிப் பணியாற்றி வருவதும் அமெரிக்காவில்தான். நமது அன்னியச் செலாவணி இருப்புக்கு அமெரிக்க வர்த்தகம் ஒரு முக்கியமான காரணம். உலகின் இரண்டு மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் இந்தியாவும் அமெரிக்காவும். இந்த நாடுகளின் பொருளாதாரத் தேவைகளும், செய்கைகளும் வேறுவேறாக இருக்கலாம். ஆனால், வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் நட்புறவுடன் தொடர்ந்தாக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. ஏனென்றால், இந்த இருநாடுகளுமே தீவிரவாதத்துக்கு எதிரான போரில் கைகோத்துச் செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. "வேற்றுமையில் ஒற்றுமை' காணும் பண்பு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அடிப்படையான கலாசாரம். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய வருகை நமது நட்புறவை மேலும் பலப்படுத்த உதவ வேண்டும். இந்தியாவால் அமெரிக்காவும், அமெரிக்காவால் இந்தியாவும் பயன்பெற வேண்டும். அதற்கு அதிபர் ஒபாமாவின் அரசுமுறைப் பயணம் உதவ வேண்டும்! தில்லியில் குடியரசுத் தலைவர், பிரதமருடன் சந்திப்பு, முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து என ஒபாமா இந்தியாவை வலம் வர இருக்கிறார்.(கட்டுரையாளர்: இந்திய - அமெரிக்க வர்த்தக சபையின் முன்னாள் தலைவர்).
கருத்துகள்

இந்தியாவின் நல்லெண்ணத்திற்காகப பாக். செல்லவில்லை ஒபாமா. அதேநேரம் பாக்.நல்லெண்ணத்தி்ற்காக இங்கே பாக். பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனினும் அமெரிக்காவும் இந்தியாவும் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்பது நல்ல கருத்து. இப்போக்கு எல்லா நாடுகளிடமும் இரு்க்க வேண்டும். அதுவே நமக்குச் சிறப்பு. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/8/2010 4:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக