ஞாயிறு, 24 ஜனவரி, 2010

தமிழினப் படுகொலையில் ஐ.நாவும் பங்குதாரியா?

பதிந்தவர்_ரமணன் on January 24, 2010
பிரிவு: கட்டுரைகள், முதன்மைச்செய்திகள்

இயற்கையின் சீற்றங்கள் இந்தப் பூமியில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. இயற்கைப் பேரழிவு என்பது எப்போதாவது என்ற நிலைபோய், அடுத்து அடுத்து நிகழும் அவலம் இன்று சாதாரணமாகிவிட்டது.

இந்த இயற்கைப் பேரழிவில் இருந்து மனிதன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அனைத்து வழிகளையும் முன்னெடுக்கின்றான். வரும் முன் காப்பதற்காக ஆய்வுகளையும், ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்ட வண்ணமே இருக்கின்றான். ஆனாலும், அவ்வப்போது தடுத்து நிறுத்திவிட முடியாதளவிற்கு இயற்கை எதிர்பாராத பேரழிவை மனிதனுக்கு ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கின்றது.

இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மண்ணையும், மக்களையும் அரவணைக்க கோபதாபங்களையும் மறந்து இந்த உலகம் ஓடோடிச் செல்கின்றது. தங்கள் சுய இலாபங்களுக்கு அப்பால், பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தங்கள் பழைய வாழ்விற்குத் திரும்பவைக்க தங்களாலான உதவிகளை ஏதோ ஒரு வழியில் செய்துகொடுகின்றன. ஆனால், செயற்கை அழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை. இந்த உலகத்தின் கண்களின் முன்னேயே ஒரு இனம் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டபோது அதனை தடுக்கமுடியாமல் அல்லது அதனைத் தடுக்க முனையாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததும் இந்த உலகம்தான்.

சிங்களப் பேரினவாதத்தின் போர் வெறிக்கு தமிழினம் இந்த உலகின் கண்களின் முன்னேதான் நாள்தோறும் உயிரை இழந்துகொண்டிருந்தது. ஆனால், இதனைத் தட்டிக்கேட்கவும், தடுத்து நிறுத்தவும் இந்த உலகத்தால் முடியவில்லையே. தனது இனம் அழிகின்றது என்பதை ஐ.நாவின் வாசலுக்குச் சென்று, தன்னைத்தானே அழித்து அவர்களுக்கு புரியவைக்க முயன்றான் தம்பி முருகதாஸ். இன அழிப்பைத் தடுத்து நிறுத்துங்கள் என முத்துக்குமார் தொடக்கம் எத்தனை தொப்புள்கொடி உறவுகள் தங்களையே தீயாக்கி எரிந்தார்கள். யாராலும் தமிழினத்தின் அழிவை நிறுத்தமுடியவில்லை.

எல்லாம் முடிந்து, எஞ்சியவர்கள் நடைப் பிணங்களாக சிறைகளுக்குள் தள்ளப்பட்டபின் இந்த உலகம் அவர்களுக்காக கவலைப்பட்டது, கண்ணீர்விட்டது. இன்னொரு பக்கம் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டதாக மகிழ்வும்கொண்டது. ஆனால், போரின்போது மறைக்கப்பட்டு, இப்போது வெளிவரும் சாட்சியங்கள் உலகத்தை அதிர்ச்சிகொள்ளவைக்கின்றன. இது பயங்கரவாதத்திற்கு எதிரான போரல்ல, இன அழிப்பிற்கான போர் என்பதை இந்தச் சாட்சியங்கள் உணர்ந்துகொள்ள வைத்துள்ளன. இதனால், மோசமான இனப்படுகொலை ஒன்றை வேடிக்கை பார்த்த குற்ற உணர்வு உலகை ஆட்டிப்படைக்கத் தொடங்கியுள்ளது.

இதனாலேயே, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமாக எழத் தொடங்கியுள்ளன. ஆனால், இந்தப் போர்க் குற்றங்களை சர்வதேச நீதிமன்றுக்கு எடுத்துவரவேண்டிய பொறுப்புமிக்க ஐக்கிய நாடுகள் சபையும் அதன் பொதுச் செயலரும் இந்தப் போர்க் குற்றங்களை மூடிமறைக்க முயல்கின்றனர். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்று, இன்று அது வெளித் தெரியத் தொடங்கியிருக்கும் நிலையில், மீண்டும் அதனை மூடிமறைக்க ஐ.நா. பொதுச் செயலர் முண்டியடிப்பதுதான் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல மனித நேயமிக்க அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கின்றது.

கொலையாளியிடமே நீதிமன்ற விசாரணையையும் ஒப்படைப்பதுபோல், மனித உரிமை மீறல்கள், மனிதநேய சட்ட மீறல்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக சிறீலங்காவிற்கு ஆலோசனை கூறுவதற்கும் அரசாங்கத்திற்கு உதவுவதற்கும் நிபுணர்கள் அடங்கிய ஆணைக்குழு ஒன்றை நியமிப்பது குறித்து யோசனை செய்து வருவதாக ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கீ மூன் தெரிவித்திருப்பதானது, மிகவும் கேலிக்குரியதாகவும், சந்தேகத்திற்குரியதாகவும் மாறியுள்ளது.

சிறீலங்கா அரசாங்கத்தையும், இனப்படுகொலை புரிந்தவர்களையும் காப்பாற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் ஏன் இத்தனை கவனம் செலுத்துகின்றார் என்ற கேள்வி எழுகின்றது. பான் கீ மூனின் இந்தச் செயற்பாடுகளானது இந்த இன அழிப்பிற்குப் பின்னால் ஐக்கிய நாடுகள் சபையும் பொறுப்பு வகித்ததா, அல்லது ஐக்கிய நாடுகள் சபைக்கு வேண்டப்பட்டவர்கள், அல்லது பான் கீ மூனுக்கு வேண்டப்பட்டவர்கள் இந்த இனப்படுகொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியையே எழுப்புகின்றது. இல்லாவிட்டால், நீதி விசாரணைக்குப் புறம்பானதும், தன்னிச்சையானதுமான மரண தண்டனை விவகாரங்களைக் கையாளும் தமது ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன் வெளியிட்ட அறிக்கையையே புறமொதுக்க வேண்டிய தேவை பான் கீ மூனுக்கு எழுந்தது ஏன்?

ஆசிரியர்-தலையங்கம்

நன்றி:ஈழமுரசு

16-22 january 2010

(Visited 24 times, 24 visits today)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக