ஞாயிறு, 24 ஜனவரி, 2010

தமிழுக்காக ஒரு ​ வேடந்தாங்கல் நாகர்கோவிலில் கூடிய ​வெளிமாநில ஆசிரியர்கள்

First Published : 23 Jan 2010 03:38:07 AM IST

Last Updated : 23 Jan 2010 10:05:03 AM IST


நாகர்கோவில், ​​ ஜன.22:தமிழில் அகரம் தொடங்கி எதுவுமே தெரியாதவர்கள் 6 மாதங்களில் கவிமணியின் தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு பாடலை பாடும் அளவுக்கு கற்றுத் தேர்ந்துள்ளனர்.​ தமிழை ஒற்றுப் பிழையில்லாமல் எழுதும் இவர்கள் அனைவரும் வெளிமாநிலங்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த வெவ்வேறு மொழி ஆசிரியர்கள்.​ ​ ​ ​ ​ ​ ​ ​

​ ​ நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியர்கள்,​​ மாணவ,​​ மாணவிகளுடன் தமிழ்மொழி,​​ பண்பாடு,​​ நமது கலாசாரம் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள இவர்கள் வெள்ளிக்கிழமை வந்திருந்தனர்.

​ ​ மைசூரில் செயல்படும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் தமிழ்த் துறையில் இவர்கள் கடந்த ஆண்டு ஜூலையில் சேர்ந்து தமிழைக் கற்று வருகிறார்கள்.

மணிப்பூர்,​​ கர்நாடகம்,​​ கேரளத்தைச் சேர்ந்த 40 பேர் மற்றும் இலங்கையைச் சேர்நத 2 பேர் என்று,​​ மொத்தம் 42 பேர் நிறுவனத்தின் தமிழ்த் துறை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் சிதம்பரம்,​​ தமிழ்ச்செல்வன் ஆகியோரின் வழிகாட்டுதலில் நாகர்கோவில் இந்துக் கல்லூரிக்கு வந்திருந்தனர்.

​ ​ ​ இந்த 42 பேரும் அந்தந்த மாநில மொழிகளில் பள்ளிகளில் ஆசிரியர்,​​ ஆசிரியைகளாக பணிபுரிந்து வருகிறார்கள்.​ இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் துணையுடன் நாட்டிலுள்ள மொழிகளைக் கற்றுக் கொள்ள ஆண்டுதோறும் இதுபோன்று ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.​ அவ்வாறு தமிழ் கற்க கடந்த ஆண்டில் 42 பேர் தேர்வு செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதம் முதல் கற்பித்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

​ ​ தமிழைக் கற்கும் காலத்தில் இவர்களுக்கான ஊதியத்துடன் ஊக்கத் தொகையையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்குகிறது.​ ஏப்ரல் வரையில் தினமும் ஐந்தரை மணி நேரத்துக்கு இவர்களுக்கு தமிழைக் கற்பிக்கும் பணியில் இந் நிறுவனத்தின் தமிழ்த் துறை ஈடுபட்டுள்ளது.​ மொழியைக் கற்பித்தல் மட்டுமின்றி அம்மொழி பேசும் மக்களின் பழக்க வழக்கங்கள்,​​ கலாசாரம்,​​ பண்பாடு,​​ பேசும் தன்மை குறித்தெல்லாம் இவர்கள் தெரிந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆண்டுதோறும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.​ ​

​ ​ அந்தவகையில் கடந்த 24 ஆண்டுகளாக நாகர்கோவில் தெ.தி.​ இந்துக் கல்லூரிக்கு இவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள்.​ இவ்வாண்டுக்கான ஆசிரியர்கள் 42 பேரும் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்திருந்தனர்.​ கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களையும் சுற்றிப் பார்த்தபின் இந்து கல்லூரியில் 3 மணிநேரம் தமிழ்த்துறை மாணவ,​​ மாணவிகள்,​​ பேராசிரியர்களுடன் அவர்கள் கலந்துரையாடினர்.

​ ​ இது தொடர்பாக முனைவர் சிதம்பரம் கூறியதாவது:​ இந்திய மொழிகளின் அருங்காட்சியகம்.​ இங்கு 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.​ அவற்றில் 18 மொழிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றவை.​ அங்கீகாரம் பெற்ற அல்லது பெறாத மொழிகள் குறித்து ஆய்வு செய்யவும்,​​ அவற்றைக் கற்றுக் கொள்ளவும் வழிகளை எங்கள் நிறுவனம் உருவாக்கித் தருகிறது.​ ​ பழைமையான,​​ இலக்கியத்துவம் வாய்ந்த,​​ இனிமையான செம்மொழியாக தமிழ் இருப்பதால் பல்வேறு மாநிலத்தவரும் தமிழை கற்க ஆர்வமாக வருகிறார்கள் என்றார் அவர்.

​ இந்துக் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆசிரிய,​​ ஆசிரியைகள் தங்களை தமிழில் அறிமுகம் செய்து கொண்டதுடன் தமிழில் தங்களுக்கு பிடித்தவற்றையெல்லாம் கொஞ்சும் தமிழில் மேடையேறி எடுத்துரைத்தனர்.​ ​

​ ​ ​ கன்னியாகுமரி மாவட்ட மக்களின் உபசரிப்பு தங்களுக்குப் பிடித்துள்ளதாகவும் தமிழ் தங்களுக்கு பிடித்த இனிமையான மொழியாக இருப்பதாகவும் கர்நாடகத்தைச் சேர்ந்த பிரமிளா,​​ ஷமீரா ஆகியோர் தெரிவித்தனர்.​ ​

​ ​ பல்வேறு மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட ​ ஆசிரியர்கள் ஒரே இடத்தில் கூடியது வேடந்தாங்கலை நினைவுப்படுத்துவதாக இந்துக் கல்லூரி தமிழ்த் துறைத்ர தலைவர் முனைவர் எஸ்.​ ஸ்ரீகுமார் தெரிவித்தார்.​ அந்த நினைவுகளை எப்போதும் பசுமையாக்கும் வகையில் வெளிமாநில ஆசிரியர்களும்,​​ உள்ளூர் மாணவிகளும்,​​ ஆசிரியர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கருத்துக்கள்

அனைவருக்கும் பாராட்டுகள். தமிழ் என்பது மொழி,இனம்,பண்பாடு,நாகரிகம்.வீரம்,இனிமை முதலான அனைத்தையும் குறிக்கும். தமிழ் பயிலுபவர்கள் தமிழின் உலகத் தாய்மொழியாக விளங்கும் சிறப்பையும் தொன்மையையும் நுண்மையையும வளமையையும் ஒண்மையையும் சீரையும் உணர்ந்து அவற்றைப் பிறருக்கும் கற்பித்து அருந்தமிழை உலகப்பொதுமொழியாக மாற்ற வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan

1/24/2010 4:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக