திருவண்ணாமலை, ஜன. 29: தேர்வுகளை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள வேண்டும் என மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் சுற்றுலாத் துறை செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் ஏற்பாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஸ்ரீ ராஜீவ்காந்தி உயர்கல்வி வழிகாட்டி முகாம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்தது.விஷ்ணுபிரசாத் எம்.எல்.ஏ. வரவேற்றார். ஆரணி மக்களவை உறுப்பினர் எம்.கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். முகாமில் பங்கேற்று இறையன்பு பேசியது: ஒவ்வொரு மாணவ, மாணவியரும் குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்பட வேண்டும். எந்தப் பணியைச் செய்தாலும் ஒரே நோக்கத்துடன் செய்தால் தான் அப்பணியை செம்மையாக செய்ய முடியும். ஓரே பணியை பலராலும் செய்ய முடியாது. வளர்ச்சி பெற்ற நாடுகள் அனைத்திலும் பலதுறை பணியாளர்கள் இருந்ததால் தான் அவ்வளர்ச்சி சாத்தியமானது. நமது நாட்டிலும் வேலைவாய்ப்புக்கு பஞ்சமில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் எதுவும் கிடையாது. ஏராளமான வேலைகளுக்கு தகுதியான ஆள்கள் கிடைப்பதில்லை. இந்தியாவில் தற்போது மருத்துவ சுற்றுலா பெருகி வருகிறது. இதற்கு நமது நாட்டில் குறைந்த செலவில் கிடைக்கும் தரமான சிகிச்சை முறையே காரணமாகும். இந்திய மருத்துவத் துறை பணியாளர்களுக்கு அயல்நாடுகளில் சிறந்த வரவேற்பு உள்ளது. திறமை, உழைப்புக்கு எப்போதும் மதிப்புண்டு. இரு பண்புகளைக் கொண்டவர்கள் தான் மிகுந்த உயர்நிலையை அடைந்துள்ளனர். நமது மாணவ, மாணவியருக்கு வெளியுலகத் தொடர்புகள் மிகவும் தேவைப்படுகிறது. நகர்ப்புற மாணவர்களைக் காட்டிலும் கிராமப்புற மாணவர்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கின்றனர். மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருக்காகவோ, ஆசிரியருக்காகவோ படித்தல் கூடாது. தங்களுக்காக படிக்க வேண்டும். தேர்வு அறையில் செய்ய வேண்டியவற்றை முன்கூட்டியே நாள்தோறும் இரவு நேரத்தில் திட்டமிடுதல் வேண்டும். தேர்வுகளை மகிழ்ச்சியாக எதிர்நோக்கினால் வெற்றி நிச்சயம். ஒவ்வொருவரும் தங்களுக்குள் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணர முயல வேண்டும். தங்களுக்கு பிடித்தமான துறைகளை தேர்வு செய்து செயல்பட்டால் முன்னேறலாம். அதே போல் மாணவர்களுக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியம். தகவல் தொடர்பு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாடப் புத்தகங்களை தவிர வேறு நல்ல பல நூல்களை வாசிக்க வேண்டும் என்றார் இறையன்பு.மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன்: திருவண்ணாமலை மாவட்டம் கல்வித் தரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது. கல்வித் தரத்தை உயர்த்த மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து செயல்பட வேண்டும். கல்வியறிவு பெருகினால் தான் சமூகம் முன்னேறும்.எதைப் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை, எப்படிப் படிக்கிறோம் என்பது முக்கியம் என்றார். முதன்மைக் கல்வி அலுவலர் வை.பாலமுருகன், மாவட்டக் கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. வ.அன்பழகன், நகராட்சித் தலைவர் ஏ.எம்.சம்பத், துணைத் தலைவர் மோகனவேல் ஆகியோர் பேசினர்.அண்ணா பல்கலை நேனா தொழில்நுட்பத் துறை இயக்குநர் டாக்டர் ஜெயவேல், சென்னை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பி.முத்துசாமி, அரசுத் தேர்வாணைய அதிகாரி கே.பாண்டியன், வேளாண்மை நிபுணர் ராதாகிருஷ்ணன், பல் மருத்துவர் பி.ஆர்.வாசு ஆகியோர் கருத்துரை ஆற்றினர். நகர திமுக செயலர் செல்வபாண்டி, காங்கிரஸ் நிர்வாகிகள் கே.தாமோதரன், க.நடேசதேவர், கோபு, காந்தி, பெருமாள், கோபால் உள்படபலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக