புதன், 27 ஜனவரி, 2010

தாளமுத்து நடராசன் என்பவர் ஒருவர் என்பதுபோல் பேச்சு அமைந்துள்ளது. தவறான பேச்சா? செய்தி தவறா? எனத் தெரியவில்லை. தாளமுத்து, நடராசன் ஆகிய இருவர் இந்தி எதிர்ப்புப் போரில் மாண்டனர். தமிழைப்பற்றிப் பேசி ஆட்சிக்கு வந்த திமுக வே தமிழை மறந்த பின்பு, கலைஞர் வழியில் அவர் குடும்பத்தில் ஒருவர்கூட மொழி இனப் போராட்டங்களை அறிந்த உணர்வாளர்களாக இல்லாத பொழுது, அதிமுக தலைவியிடம் எவ்வாறு உணர்வை எதிர்பாரக்க முடியும? தமிழுக்குத் தலைமை. தமிழர்க்கு முதனமை என்னும் நிலை வந்தால்தான் உலகத் தமிழர்கள் யாவரும் உரிமையுடன் வாழ இயலும்.

வீர வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Latest indian and world political news information

திருவள்ளூர் : "தனது 14வது வயதிலேயே சக பள்ளி மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு தமிழ்க் கொடி ஏந்தி போராட்டம் நடத்தியவர் தான் முதல்வர் கருணாநிதி' என, வீர வணக்க நாள் கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.தி.மு.க., சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் மொழிப் போர் தியாகிகளை நினைவு கூறும் வகையில் வீர வணக்க நாள் கூட்டங்கள் நடைபெற்றன. திருவள்ளூரில் நடந்த கூட்டத்திற்கு, தொகுதி எம்.எல்.ஏ.,வும், கட்சியின் மாவட்ட செயலருமான சிவாஜி தலைமை தாங்கினார்.கூட்டத்தில், துணை முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், "என்றுமே தியாகிகளை மறக் காத ஒரே இயக்கம் தி.மு.க., தான்.இன்றைக்கு பல கட்சிகள் வீர வணக்க நாள் கூட்டங்களை அறிவித்துள்ளன. நான் அவர்களை குறை சொல்வதற்காக சொல்லவில்லை.நம்மைப் போலவே, அ.தி.மு.க., வும் இன்று வீர வணக்க நாள் கூட்டங்களை நடத்துவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால், தமிழகத்தில் இதுவரை அக்கட்சி சார்பாக நடத்தப்பட்ட வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்களில் ஏதாவது ஒரு கூட்டத்திலாவது ஜெயலலிதா கலந்துகொண்டுள்ளாரா? ஏன் கலந்து கொள்ளவில்லை.இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தி.மு.க., தான் போராடியது. அதற்காக சிறையிலேயே உயிர் நீத்தவர் தான் தாளமுத்து நடராசன். அவரைப் போலவே சின்னசாமி, தீரன் சிவலிங்கம், சண்முகம், சாரங்கபாணி, ஆசிரியர் வீரப்பன் என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.அவர்களது தியாகங்களை போற்றும் விதமாக தான் வீர வணக்க நாள் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தனது 14 வயதில் பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே தமிழுக் காக தமிழ்க் கொடி ஏந்தி போராடியவர் தான் முதல்வர் கருணாநிதி.பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கூரை வீடுகளே இல்லாத நிலையை உருவாக்க, கலைஞர் வீட்டு வசதி திட்டம், கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் 21 லட்சம் கூரை வீடுகள் காங்கிரீட் வீடுகளாக மாற்றப்படும். முதல்கட்டமாக மூன்று லட்சம் வீடுகள் கட்டப்படும்' என்றார்.முன்னாள் அமைச்சர் சுந்தரம், முன்னாள் எம்.பி., ஆ.கிருஷ்ணசாமி, ரங்கநாதன் எம்.எல்.ஏ., நகராட்சித் தலைவர் பொன்.பாண்டியன், திரு வள்ளூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் வி.எஸ்.சண்முகம், வி.ஜி.ராஜேந்திரன், காயத்ரி ஸ்ரீதரன் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.அம்பத்தூர் நகராட்சி ம.தி.மு.க., கவுன்சிலர் சுப்பையா, கூளூர் ஜெயலலிதா பேரவையைச் சேர்ந்த தேவகி ராஜேந்திரன் உட்பட 200 பேர் கட்சியில் இருந்து விலகி துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க., வில் சேர்ந்தனர்.திருவள்ளூர் நகர செயலர் கா.மு. தயாநிதி நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக