வெள்ளி, 29 ஜனவரி, 2010

தலையங்கம்: விதியின் பிழை



இலங்கையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை. மாறாக, வேதனையைத்தான் தருகிறது.வேதனைக்குக் காரணம் அதிபர் ராஜபட்ச மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பது அல்ல; மக்களாட்சித் தத்துவம் இப்படியெல்லாம் கேலிப் பொருளாகிறதே என்பதால்தான்.70 விழுக்காடு வாக்குப்பதிவு என்பதும், எதிர்பாராத வித்தியாசத்தில் ராஜபட்ச வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் தலைப்புச் செய்தி என்கிற அளவில் வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால், நம்பகத்தன்மை உடையதாக இருக்கிறதா என்றால் ராஜபட்சவின் மனசாட்சிகூட (அவருக்கு அப்படியெல்லாம் இருக்குமேயானால்) ஏற்றுக்கொள்ளும் என்று தோன்றவில்லை.முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை போட்டியில் களம் இறக்கியதுகூட ராஜபட்சவின் ராஜதந்திரம்தானோ என்று சந்தேகித்தவர்களுக்குத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நேரத்தில், ""எனது முன்னாள் தளபதியான பொன்சேகா என்னிடம் நேரிடையாகப் பேசுவதில் என்ன தடை இருக்க முடியும்'' என்று அதிபர் ராஜபட்ச வெளியிட்டிருக்கும் கருத்து மேலும் வலு சேர்க்கிறது.தன்னை எதிர்த்தபோது வேறு எந்த எதிர்க்கட்சியும் போட்டியிடாமல் தனது நம்பிக்கைக்குரிய முன்னாள் தளபதியை நிற்க வைத்து, தோல்வி அடையச் செய்யும் ராஜதந்திரம் ராஜபட்சவுக்குத் தெரியாது என்று நம்ப முடியுமா?அதெல்லாம் முடிந்துவிட்ட கதை. தேர்தல் என்று ஒன்றை நடத்தி, தனது பதவிக் காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டார் அதிபர் ராஜபட்ச. பெருவாரியான தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்பது மட்டுமல்ல, தமிழர்களின் மொத்த மக்கள்தொகையே கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் வெற்றியோ, தோல்வியோ தமிழர்களைப் பொறுத்தமட்டிலும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத ஒன்றாகவே இருக்கும்.குடியரசுத் தலைவரை முன்னிறுத்திய ஆட்சிமுறை என்பதே பெரும்பான்மையினரின் ஆட்சி முறை என்றுதான் கருதப்பட வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயக முறையிலாவது, சிறுபான்மையினரின் குரலைப் பிரதிபலிக்க அந்தந்தப் பகுதியிலிருந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நாடாளுமன்ற ஜனநாயக முறை இருப்பதால்தான் இந்தியாவில் பல்வேறு மாநில,இன, மொழி உணர்வுகள் மத்திய அரசிலும் ஆட்சி முறையிலும் பிரதிபலிக்கின்றன.நாடாளுமன்ற ஜனநாயக முறை இலங்கையில் இருந்தபோது இந்திய வம்சாவளித் தமிழர்களும், தமிழ் பேசும் இஸ்லாமிய சமுதாயத்தினரும், யாழ்ப்பாணத் தமிழர்களும் ஆட்சி அமைப்பிலும் நிர்வாகத்திலும் பங்கு வகித்தனர் என்பதால்தான், நாடாளுமன்ற நடைமுறையை மாற்றி ஒட்டுமொத்த மக்களும் குடியரசுத் தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறைக்கு மாற்றினார்கள். இனஉணர்வு மிக்க சிங்களர்கள் பெருவாரியாக வாழும் இலங்கையில் சிங்கள இனத்தவர் மட்டுமே அதிபர் ஆக முடியும் என்கிற நிர்பந்தம் இந்த மாற்றத்தினால் நிலை நாட்டப்பட்டது. இலங்கையில் நாடாளுமன்ற ஜனநாயகம் மீண்டும் ஏற்பட்டு, தமிழ் பேசும் பகுதிகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிப்பு நடைபெறாதவரை தேர்தல் நடைபெறுவதும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதும் கண்துடைப்பாகத்தான் தொடருமே தவிர, அதனால் எந்தவிதப் பயனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இதை வலியுறுத்தித் தமிழர்களுக்கு நியாயமான உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டிய இந்தியாவே மெüனமாக வேடிக்கை பார்க்கும்போது, ராஜபட்ச மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது என்பதொன்றும் அதிசயமில்லை.உலக அரங்கில் தம்மை ஜனநாயகவாதியாகவும் மக்களின் பேராதரவு பெற்ற அதிபராகவும் நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியில் ராஜபட்ச வெற்றி பெற்றுவிட்டிருக்கிறார். இனிமேல் அவர் சீனாவுடனான தனது நெருக்கத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதோடு, இந்தியாவுக்கு எதிராக, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் கைகோர்த்து காய்களை நகர்த்தப்போவதும் நடைபெறப் போகும் நிகழ்வுகள். இந்துமகா சமுத்திரத்தில் இதுவரை இந்தியாவுக்கு இருந்த ஆளுமை பறிபோகப் போகிறது.அதுமட்டுமல்ல, தமிழர்களுக்கும் மறுவாழ்வு தருகிறோம் என்கிற பெயரில் வட மாகாணங்களில் பெருவாரியாக சிங்களர் குடியேற்றம் நடைபெற இருப்பதும், தான் எல்லோருக்கும் பொதுவானவர் என்று காட்டிக்கொண்டு தமிழர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றும் முயற்சியில் ராஜபட்ச அரசு ஈடுபடுவதும் தவிர்க்க முடியாததாகிவிடும். அதைத் தட்டிக் கேட்கவும் முறியடிக்கவும் ஈழத்தமிழர்களுக்கு அங்கே சரியான தலைமை இல்லை. இந்திய அரசுக்கும் இனிமேல் தைரியம் இருக்காது. அப்படி நடைபெறாமல் இருக்க இறைவனின் திருவுளம் இரங்க வேண்டும்.தானே ஒரு தேர்தலை நடத்தி, தானே முன்னின்று வெற்றியும் பெற்றுவிட்ட இலங்கை அதிபர் ராஜபட்ச, முதலில் தமிழர்களை ஏமாற்றினார். பிறகு இந்தியாவை ஏமாற்றினார். அப்புறம் உலகை ஏமாற்றினார். இப்போது ஒரு தேர்தல் நாடகத்தை நடத்தி சிங்களவரையும் ஏமாற்றி வெற்றி பெற்று இருக்கிறார். இது விதியின் பிழை அல்லாமல் வேறென்ன?
கருத்துக்கள்

அருமையான ஆசிரியவுரை. தொடக்கமே மிகச்சரியாக உள்ளது. தமிழர்களுக்கு உரிமை பெற்றுத் தரவேண்டிய இந்தியாவே மௌனமாக வேடிக்கை பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளது ஒரு வகையில் சரிதான். ஆனால், உண்மையில் தமிழர் உரிமை பறிப்பிற்கு இந்திய அரசுதான் காரணம் என்ற உண்மையைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். எனினும் படிப்படியாக ஆசிரியவுரையில் உண்மையின் வீச்சு வளர்ந்து கொண்டே சென்று இலங்கை நிலைமையை ஈழத் தமிழர்கள நிலைமையை நன்கு விளக்குகிறது. சிங்கள இரவி அஞ்சுவதில் இருந்தே ஆசிரியவுரையின் வீச்சு எந்த அளவு மக்களை ஈர்க்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். என்றாலும நாம் விதியின் பிழை என்று சேர்நது விடாமல் மனித உரிமைகள் மலரவும் ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்தில் உரிமை அரசு அமைத்து வாழவும் நம்மால்ஆகுவனவற்றைச் செய்வோம் எனத் தன்னுடலுக்கு எரியூட்டித் தமிழலகிற்கு ஒளியூட்டிய மாவீரர் முத்துக்குமார் உயிர்க் கொடை அளித்த நாளில் உறுதி ஏற்போம்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு! வீர வணக்கங்களுடனும் வேதனையுடனும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/29/2010 2:27:00 AM

Good article, tamils will suffer from Rajapakshe, tamils suffering will continue. Tamils wants Tamil Eelam to live in peace.

By raja
1/29/2010 2:09:00 AM

Ravi is a RAW from Malaiyali origin. Or He has something deference motive.

By thilaga
1/29/2010 1:41:00 AM

தினமணி இலங்கையின் பத்திரிகையா அல்லது இந்தியாவின் பத்திரிகையா?....எப்போது பார்த்தாலும், இலங்கையின் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறீர்கள். இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களை, வந்தேறிகள் என்று இலங்கை தமிழர்கள் தூற்றுகின்றனர். சிங்கப்பூர், மலேசிய தமிழர்கள், அங்கு சம்பாரிக்க செல்லும் இந்திய தமிழர்களை, ஊர்சுகள் என்று தூற்றுகின்றனர். இப்படி வெளிநாட்டில் வாழும் இந்திய தமிழர்களை தூற்றும் அந்தந்த நாட்டு தமிழர்களுக்கு மட்டும் , தினமணி செய்தி வெளியிடுகிறாதா?...தமிழ்நாடு, மற்றும் இந்தியாவின் செய்திகளுக்கு மட்டும், தினமணியில் முக்கியத்துவம் இருக்கட்டும். இல்லையெனில் தினமணி, தினமலரைவிட பின்னோக்கி தள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுகிறோம்.

By RAVI
1/29/2010 1:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக