சென்னை, ஜன.24: பல்லவ மன்னர்கள் மற்றும் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த சிற்பிகளின் பெயர்கள் அடங்கிய அரிய கல்வெட்டுகள் அழியும் நிலையில் உள்ளன.பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட அரிய சிவன் கோயிலும் போதிய பராமரிப்பு இன்றி இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. சென்னையில் இருந்து திருக்கழுகுன்றம் செல்லும் சாலையில் உள்ளது பூஞ்சேரி கிராமம். அரசுப் பள்ளியும், அதன் எதிரே தனியார் பொறியியல் கல்லூரியும் அமையப் பெற்றுள்ளன. பள்ளியை ஒட்டியுள்ள பகுதியில் கற் குவியல்கள் காணப்படுகின்றன. இந்தக் குவியலில் தொட்டி போன்ற அமைப்பு உள்ளது. இதில், சிலரது பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கேவாத பெருந்தச்சன், குணமல்லன், சாத முக்கியன், கோலன் சேமகன் என அந்தக் கல்லில் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தச்சன் என்பது சிற்பியைக் குறிக்கும். பெருந்தச்சன் என்பது தலைமைச் சிற்பியைச் சுட்டுவதாகும். அவர்கள், மாமல்லபுரத்தில் கலை அம்சங்கள் பொருந்திய சிற்பங்களைச் செதுக்கியதில் முக்கியமானவர்கள் எனத் தெரிகிறது. அவர்கள் இந்தப் பகுதியில் இருந்தபோது அல்லது தங்கியபோது தங்களது பெயர்களைப் பொறித்து இருக்கலாம். இவை, கி.பி. 671 முதல் 700}ம் காலத்தைச் சேர்ந்தது'' என்கிறார் பல்லவ சிற்பக் கலைகளை ஆராய்ந்து வரும் முனைவர் ஜான்ஸன் வெஸ்லி. முட்செடிகளுக்குள்: இத்தனை அரிய தகவல்கள் அடங்கிய இந்தக் கல்வெட்டு முட்செடிகளுக்குள் மறைந்து கிடக்கிறது.""இந்தப் பகுதியில் சாலையை அகலப்படுத்தினால் கல்வெட்டுகள் அகற்றப்படும் நிலை ஏற்படும். பல்லவ மன்னர்கள் காலத்திய அரிய தகவல்கள் அடங்கிய கல்வெட்டுகள் இந்தப் பகுதியில் அதிகளவு இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, தொல்லியல் துறை அறிஞர்கள் உடனடியாக அவற்றைத் தங்கள் வசம் எடுத்து ஆராய வேண்டும்'' என்று பூஞ்சேரி பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வாயலூர் கிராமத்தில்: பூஞ்சேரியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வாயலூர் கிராமம். எழில் சூழ்ந்த இந்தக் கிராமத்தில் திருப்புலீஸ்வரர், வைகுந்தப் பெருமாள் சன்னதிகள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. ""பல்லவ மன்னர்களில் ஒரு சாரார் சைவத்தையும், அதன்பின் வந்தவர்கள் வைணவத்தையும் கடைப்பிடித்து இருக்கலாம். இதன் வெளிப்பாடே ஒரே வளாகத்தில் சைவமும், வைணவமும் இணைந்து காட்சி தருகிறது'' என்று தொல்லியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.வரிசைக் கிரமமாக வம்சப் பெயர்கள்: கோயிலின் நுழைவு வாயிலில் பல்லவர் கால எழுத்துகளால் ஆன கல்வெட்டு பராமரிப்பின்றி உள்ளது.""இந்தக் கல்வெட்டில் பல்லவ மன்னர்களின் 52 வம்சப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு முழு அரச வம்சத்தின் பெயர்கள் வரிசைக்கிரமமாகக் காணப்படுவது இந்தக் கல்வெட்டில்தான்'' என்கிறார் வெஸ்லி. கோயில் மண்டபங்களில் பல்லவர் கால எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை கால மாற்றத்தால் அழியும் நிலையில் உள்ளன. கோயிலைப் பற்றிய வரலாறோ, கோயில் எந்த ஆண்டு யாரால் கட்டப்பட்டு என்ற தகவலோ அந்த வளாகத்தில் இடம் பெறவில்லை. ஆனால், அவை கி.பி.690-728-ம் ஆண்டு காலத்தியதைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். உள்ளூர் மக்கள் விருப்பம்: கோயிலின் சிறப்பு குறித்து வாயலூர் கிராம மக்களிடம் கேட்டபோது, ""இந்தக் கோயிலுக்கு காலை வேளையில் மட்டும் அர்ச்சகர் வந்து பூஜை செய்வார். இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் அதிகாரிகள் மாதத்துக்கு ஒரு முறை வருவார்கள். கோயிலுக்கு என்று தனியாகப் பாதுகாவலர்கள் யாரும் இல்லை. நிரந்தரமாக அதிகாரிகளை இங்கு பணியில் அமர்த்தி கோயிலின் வரலாற்றை எங்களுக்குத் (கிராம மக்கள்) தெரிவிக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக