Last Updated :
கொழும்பு, ஜன. 27: இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபட்ச (64) வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட சரத் பொன்சேகா (59) தோல்வியைத் தழுவினார். தேர்தல் முடிவை தேர்தல் ஆணையம் முறைப்படி புதன்கிழமை அறிவித்தது. இரண்டாம் தடவையாக அதிபர் பதவியில் அமர்கிறார் ராஜபட்ச.இதனிடையே, சரத் பொன்சேகா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அதை அரசு மறுத்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடந்தது. அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ராஜபட்சவுக்கு 60 லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளும் (57.88 சதவீதம்) பொன்சேகாவுக்கு 41 லட்சத்து 73 ஆயிரத்து 185 வாக்குகளும் (40.15 சதவீதம்) கிடைத்துள்ளன. தமிழர்கள் சார்பில் சுயேச்சையாக தேர்தலில் களம் இறங்கிய சிவாஜிலிங்கம் 9662 வாக்குகள் (0.09 சதவீதம்) பெற்றார். தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையர் தயானந்த திஸநாயக நிருபர்களிடம் அறிவித்தார்.ராஜபட்ச வெற்றி பெற்ற செய்தி எட்டியவுடன் நாடெங்கிலும் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பரித்து தெருக்களில் திரண்டு பட்டாசுகளை வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.தேர்தல் முடிவை நிராகரித்த சரத் பொன்சேகா, தேர்தலில் தில்லு முல்லு நடந்துள்ளதாகவும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.தேவைப்பட்டால் பாதுகாப்புக்காக கொஞ்ச காலத்துக்கு வெளிநாட்டில் தங்கவேண்டி வந்தாலும் வரும். தேர்தல் விதிகளை அரசு அப்பட்டமாக மீறியுள்ளது. பொதுமக்களை அரசு ஏமாற்றியுள்ளது என்றும் பொன்சேகா கூறியுள்ளார்.பாதுகாப்பு கேட்டு வெளிநாட்டு உதவியை பொன் சேகா நாடியுள்ளதாகவும் தெரிகிறது. "தேர்தல் ஆணையம் எனது பாதுகாப்புக்காக அனுமதித்த பாதுகாப்புப் படை வீரர்களில் 10 பேர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். என்னை கைது செய்ய அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனக்கு பாதுகாப்பு தரவேண்டும்' என்று கோரி தேர்தல் ஆணையத்துக்கு பொன்சேகா கடிதம் எழுதியுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.தனது அலுவலகத்தை பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றிவளைக்கவே வேறு வழியின்றி ஹோட்டலுக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.பொன்சேகா சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்று முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளதாக பத்திரிகை செய்தி தெரிவித்துள்ளது.பொன்சேகாவின் பாதுகாப்புதான் இப்போது முக்கியம். அதற்காக (இந்தியாவை மறைமுகமாக குறிப்பிட்டு) வெளிநாட்டு தூதரை சந்தித்து பாதுகாப்பு கோரவுள்ளோம் என்றார் அவரது நெருங்கிய சகாவான மனோ கணேசன். இலங்கையில் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சகாப்தம் முடிந்த பிறகு நடந்த முதல் தேர்தல் இது.விடுதலைப் புலிகளை நிர்மூலம் செய்து நாட்டில் அமைதி ஏற்படுத்தியதில் தனக்கே மகத்தான பங்கு என்று மகிந்த ராஜபட்ச பெருமைப்பட்டுக் கொள்ளவே அதில் தனக்கும் சமபங்கு உண்டு என்று உரிமை கொண்டாடினார் புலிகளுக்கு எதிரான போரை தலைமை ஏற்று நடத்திய சரத் பொன்சேகா. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர்.ராணுவப் பதவியை உதறிவிட்டு, அதிபர் தேர்தலில் ராஜபட்சவை எதிர்த்து எதிர்óக்கட்சிகளின் கூட்டணியின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா களம் இறங்கினார். தனது பதவிக்காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் இருந்தாலும் விடுதலைப்புலிகளை ஒடுக்கியதால் அதன் மூலம் மக்கள் ஆதரவுடன் எளிதாக வெற்றி பெறமுடியும் என கணக்குப்போட்ட ராஜபட்ச முன்னதாகவே தேர்தலை நடத்தினார்.மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 1 கோடியே 40 லட்சத்து 88 ஆயிரத்து 500 வாக்குகள் பதிவாகின.கடைசி நேரத்தில் ஆளும் இலங்கை சுதந்திர கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் அதிபருமான சந்திரிகா, பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.நன்றி: அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ராஜபட்ச, நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தற்போதைய மேம்பாட்டுத் திட்டங்கள் தொடரும் என்றார்.
By Ilakkuvanar Thiruvalluvan
1/28/2010 3:10:00 AM
By Paris EJILAN
1/28/2010 2:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*