ஞாயிறு, 24 ஜனவரி, 2010

Front page news and headlines today

மொழி என்பது, கருத்துப் பரிமாற்றத்துக்கான கருவி, உறவுப்பாலம் அமைக்கப் பயன்படும் ஊடகம் என்ற ஒரு கருத்து நிலவிய போதும், அதன் உயர்நிலைப் பயன்பாடுகளை ஒதுக்கிவிட முடியாது. ஒரு சமுதாயத்தின் சொல் வளம், இலக்கியச் செல்வம், கவிதை நலம், பண்பாடு, வரலாற்று சிறப்பு, சமய நெறிகள் ஆகிய அனைத் தும், மொழி சார்ந்தவையே. அவ்வகையில், தமிழ் மொழி, தமிழினத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.



இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட, இணையற்ற, இடையீடில்லா இலக்கியப் பாரம்பரியம் கொண்டது தமிழ் மொழி. உலகில் பேசப்படும் 30 மொழிகளில், ஏழு கோடியே 80 லட்சம் மக்களால் பேசப்படும் தமிழ் மொழி, 17வது இடத்தைப் பெறுகிறது. இந்திய மொழிகளில், இந்தி மொழிக்கு அடுத்தபடியாக, பன்னாட்டு மொழி என்ற தகுதியைப் பெற்றது தமிழ் மட்டுமே. ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறை வழிபாட்டுக்கு உகந்த பக்திப் பாடல்களை இயற்றி, தமிழையும், சமயத்தையும் ஒன்றாக வளர்த்தனர். தமிழ் மொழி, தனது நீண்ட வரலாற்றில், வேற்று மொழி ஆதிக்கத்துக்குட்பட்ட போதெல்லாம், தனது தனித்தன்மை மாறாமல், தன்னைத்தானே புதுப்பித்து, இளமை, உயிர்ப்போடு விளங்குகிறது. மாறிவரும் சூழ்நிலைக்கும், தேவைக்கும் ஏற்ப, புதிய கருத்துக்கள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை உள்வாங்கிக் கொள்ளும் நெகிழ்வுத் தன்மையுடையது தமிழ். 18ம் நூற்றாண்டின் மணிப்பிரவாளத்தை மறுதலித்து, தனது தனித்தன்மையை மீட்டெடுத்தது.ஆயினும், அண்மைக் காலத்தில், மிகுதியான ஆங்கில மொழிக் கலப்பால், தமிழ் தன் தூய்மையையும், தனித்தன்மையையும் இழந்து வருகிறது.



சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும், பல்வேறு சூழல்களிலும் ஆங்கிலப் பயன்பாடு போற்றி வரவேற்கப்படுவதால், தமிழ்மொழியின் பயன்பாடு, குறிப்பாக உரையாடல் மற்றும் பேச்சு வழக்கில், குன்றிச் சிதைந்து வருகிறது. தமிழுக்கு நேரப் போகும் பேராபத்தை உணர்ந்த பாரதி, "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, அதைத் தொழுது படித்திடடி பாப்பா' என்று, தமிழர்களுக்கு அறிவுறுத்துகிறார். ஒரு மொழியின் உயிர்ப்பு, பேச்சு வழக்கையே உறைவிடமாகக் கொண்டுள்ளது. அன்றாடம், இல்லம், அங்காடி, சமூக சந்திப்புகளில் எவ்வாறு மக்கள் தம் மொழியைப் பயன்படுத்துகின்றனர் என்பதைக் கொண்டே, அதன் நிலைத்த தன்மையை உணர முடியும். இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பெரும்பாலான தமிழர், படித்தோர் - பாமரர் என்ற வேறுபாடின்றி, தமிழைச் செம்மையாகப் பேசும் ஆற்றல் அற்றவர்களாகவோ அல்லது அவ்வாறு தமிழைப் பேச வேண்டும் என்ற தேவையை உணராதவர்களாகவோ உள்ளனர். நடைமுறை வாழ்க்கையில், காலை முதல் இரவு வரை நிகழும் அனைத்துச் செயல்களையும் வெளிப்படுத்த, ஆங்கிலக் கலப்புடைய உரையாடலையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். "ஏர்லி மார்னிங், டிராவல், பிரண்ட்ஷிப், ரெஸ்ட்' என்று சொல்லும் போது, அவை அயல் சொற்கள் என்பதை யாரும் உணருவதில்லை.



ஆங்கிலக் கலப்பு மிகுந்த கொச்சைத் தமிழ், இயல்பான மொழி வடிவமாக, இன்றைய தலைமுறைத் தமிழரிடையே உலவுகிறது. தடையற்ற, அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றத்துக்கு தேவையான சொல்லாற்றல் மக்களிடையே சுருங்கி வருகிறது. எடுத்துக்காட்டாக, எமக்கு முந்தைய தலைமுறையினர், "பசுமாடு ஈனியது' என்ற கூற்றை, எமது தலைமுறையினர், "பசுமாடு கன்று போட்டது' என்று கூறி வருகின்றனர்.வரும் தலைமுறையினர், "பசுமாட்டுக்கு, "டெலிவரி' ஆனது' என்று கூறினால் வியப்பில்லை. ஒரு மொழியின் நெடிது வாழும் ஆற்றல், எத்தனை மக்கள், அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர் என்பதை விட, எத்தனை பேர், அம்மொழியைப் பேசவும், கற்கவும் முற்படுகின்றனர், எந்த அளவுக்கு இளைய தலைமுறையினர் அதைப் பயன்படுத்துகின்றனர் என்பதைப் பொறுத்து அமையும். இவ்விரு அளவுகோல்களின்படி, தமிழ்மொழியின் நீண்டு நிலைக்கும் தன்மை கேள்விக்குறியதாகவே உள்ளது.



உலகமயமாக்கல், தடையில்லா வணிகம் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றங்களின் தாக்கத்தால், ஆங்கிலம் போன்ற உலகளாவிய மொழிகள், ஆதிக்க மொழிகளாக உருவாகவும், குறைவான எண்ணிக்கையில், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பேசப்படும் மொழிகள், அவற்றின் சிறப்பியல்புகளை இழந்து, பேச்சு வழக்கு ஒழியும் நிலை உருவாகிக் கொண்டுள்ளது என்பதை மொழியியலாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்த உலகளாவிய மாற்றத்துக்கு, தமிழ் விதிவிலக்கல்ல. இந்நிலையை மாற்றவும், இத்தகைய ஆபத்திலிருந்து தமிழ் காப்பாற்றப்படவும், எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆராய்தல் அவசியம். எந்த ஒரு சமுதாய மாற்றமும் முதலில், தனி மனிதனிடமே துவங்கப்பட வேண்டும். உரையாடலில் செம்மையை விரும்பும் ஒவ்வொருவரும், தங்கள் பேச்சு வழக்கில் தேவையற்ற ஆங்கிலப் பயன்பாட்டைத் தவிர்த்து, பேச்சு மொழியைத் திருத்தமாகப் பேசுவது கூட, ஒரு தமிழ்ப்பணி என்று உணர வேண்டும். சாமானியர் எல்லாரும், சமுதாயத்தின் மேல்தட்டு மக்களையே முன்மாதிரியாகக் கொள்கின்றனர். ஆகவே, மாற்றம் மேல்மட்டத்தில் துவங்கினால், விரும்பிய விளைவு ஏற்படும். இக்கருத்து, ஆங்கிலத்துக்கும், அதன் பயன்பாட்டுக்கும் முற்றிலும் எதிரானதல்ல.



பாரதியார், சிறப்பான ஆங்கிலப் பயிற்சியுடையவர் என்பது, அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் மற்றும் கடிதங்கள் வாயிலாக அறியலாம். ஆகவே, ஆங்கில அறிவு மற்றும் உரையாடல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை, குறைத்து எண்ண வேண்டியதில்லை. தாய்ப்பால் ஊட்டி குழந்தையை வளர்க்கும் ஒவ்வொரு இல்லத்திலும், தமிழ்ப் பாலும் ஊட்டப்பட வேண்டும். ஆனால், இன்றைய இல்லங்களில், கலப்படமான தமிழ்ப்பால், "மம்மி, டாடி' வாயிலாக, இளம்பருவத்தில் மழலையர்க்கு புகட்டப்படுகிறது. இல்லங்களில் இயல்பான தமிழ் பேசப்பட்டால், உறவுகள் வலுப்பெறும். மக்கள் மன்றங்கள் மற்றும் சங்கங்கள் பெரும்பாலும், பொதுமக்களை உறுப்பினர்களாகவும், பயனாளிகளாகவும் கொண்டு செயல்படும். இவ்வகை அமைப்பு, தங்கள் நிர்வாகம், விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகளை, ஆங்கில வழியிலேயே அமைத்துக் கொண்டுள்ளன. மக்கள் தொடர்பு மற்றும் பரிமாற்ற நிலையிலேயே அவை தமிழை பயன்படுத்துகின்றன.



அதுபோன்றே, நிறுவனங்கள் மற்றும் வணிகத் தளங்களில், அனைத்து மட்டங்களிலும் ஆங்கிலம் பயன்பாட்டில் உள்ளது. அரசு அலுவலகங்கள், அஞ்சலகங்கள், வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் வாடிக்கையாளரை முன்னிட்டு, தங்கள் வணிக பரிமாற்றங்கள் மற்றும் சேவைச் செய்திகளை வட்டார மொழிகளிலேயே, அதாவது, தமிழகத்தில் தமிழிலேயே வழங்க வேண்டும். ஆனால், நிலைமை அவ்வாறு இல்லை என்பதை, மேற்கூறிய நிறுவனங்களின் செயல்பாடுகளை கூர்ந்து நோக்குவதன் வாயிலாக அறியலாம். ஊடகங்கள், குறிப்பாக, காட்சி ஊடகங்கள் வழங்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில், அதன் அறிவிப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சியை நடத்துவோர், ஆங்கிலம் கலந்து உரையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதோடன்றி, தமிழை அன்னியத் தன்மையோடு உச்சரித்துப் பேசித் தாழ்வாக எண்ணச் செய்கின்றனர். அனைத்து நிலைகளிலும், பேச்சுத்தமிழை மக்களிடையே புத்துயிர் பெறச் செய்யும் மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்குவது, இன்றைய தலைமுறைத் தமிழரின் தலையாய பணி. இப்பணியில், கல்வி நிறுவனங்கள், சிறப்பான பங்களிப்பை நல்க இயலும். இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தினால் அன்றி, தமிழ் மக்கள், தமது மொழி, இலக்கியம், பண்பாடு, அறநெறிகள் ஆகியவற்றை பின்வரும் சந்ததியினருக்கு முழுமையாக விட்டுச் செல்ல இயலாது.



- முனைவர் வே.குழந்தைசாமி, கல்லூரி முதல்வர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக