ராஜபாளையம் :"ஈழத் தமிழர்களை காக்க தவறிய கருணாநிதி, தமிழ் இனத் துரோகி' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார்.
ம.தி.மு.க., விருதுநகர் மாவட்ட மாணவரணி சார்பில் ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
வைகோ பேசியதாவது: முல்லைப் பெரியாறு உரிமையை நாம் இழந்தால், 65 லட்சம் பேருக்கு குடிநீர் கிடைக்காது. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பாசன வசதி பாதிக்கும்.தலைநகரில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஒரு குடும்பத்தின் கையில் தமிழகம் உள்ளது. இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பேராபத்து. இந்தியாவில் அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்கினால் தான் ஒருமைப்பாடு நிலைக்கும்; இல்லாவிட்டால் சிதறிவிடும்.வீரர்களை பற்றி வீரர்கள் தான் பேசவேண்டும். தியாகிகளை பற்றி தியாகிகள் தான் பேசவேண்டும். கருணாநிதி தமிழ் இனத்துரோகி. கடந்த ஆண்டு ஜன., 30ல் முத்துக்குமாரின் உடலுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த போது, மதுரையில் கருணாநிதி தனது மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடினார்.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே, பொன்சேகா போட்டியிடுகின்றனர். இண்டு விஷப் பாம்புகளுக்கு இடையே யார் வெற்றி பெற்றால் என்ன?பிரபாகரன் நாளை விடுதலைப் போரை வழிநடத்தப் போகிறார். 1989ல் இலங்கைக்கு சென்று பிரபாகரனை நான் சந்தித்த போது, எதிரிகளிடம் சிக்கிவிட்டால், என் உயிரை மாய்த்துக் கொள்ள சயனைடு குப்பியை அவரிடம் கேட்டேன்.பிரபாகரன் கொடுத்த குப்பியை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அந்த நன்றிக்காக தான் காயமடைந்த 37 விடுதலைப் புலிகளை ஒன்றரை ஆண்டுகளாக எனது தாய், சோறு கொடுத்து காப்பாற்றினார்.நாங்கள் பிணத்தை வைத்து அரசியல் செய்யவில்லை.
ஈழத் தமிழர்களுக்காக போராடியதற்காக தான் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்டனர்.ஈழப்போர் முடிந்துவிடவில்லை. தமிழ் இளைஞர்கள் வீறுகொண்டு எழுவர். அந்த வேலையை நான் செய்வேன். முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீண்டும் குடியேற்றுவது மட்டும் தீர்வு ஆகாது. தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு.பிரபாகரன் சாகவில்லை. உரிய நேரத்தில் வருவார். எந்த உணர்வுக்காக இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டோமோ. அதே உணர்வுடன் ஈழத் தமிழர்களுக்காக போராடுவோம்.இவ்வாறு வைகோ பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக