Last Updated :
இந்தியா தனக்கென ஓர் அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றிக் கொண்டு தன்னை ஒரு சுதந்திரக் குடியரசாக அறிவித்து 60 ஆண்டுகளாகிவிட்டன. இந்தியக் குடியரசுக்கு இது வைரவிழா ஆண்டு. சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதுபோல நாம் ஏனோ குடியரசு தினத்தைக் கொண்டாடுவது இல்லை. சுதந்திர தினத்தைவிட பெருமைக்குரியதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் குடியரசு தினம்தான் என்பதுகூட நமக்கு ஏனோ புரியவில்லை.அன்னிய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து சுதந்திரம் பெறுவது என்பது வெறும் சம்பிரதாயமான தொடக்கம்தான். மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்வது என்பதுதான் சுதந்திரத்தின் இன்றியமையாத அடுத்த கட்டம். "குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு, மேன்மையுறக் குடிமை நீதி' என்று மகாகவி பாரதி கண்ட கனவு நனவானது, இந்தியா குடியரசாகத் தன்னை அறிவித்துக்கொண்டபோதுதான்.இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு காலனி ஆதிக்கங்களிலிருந்து விடுதலை பெற்று தங்களை ஒரு சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 182. இதில் தன்னை ஒரு சுதந்திரக் குடியரசாக அறிவித்து, ஓர் அரசியல் சட்டத்தை இயற்றி பாராளுமன்ற ஜனநாயக முறையில் அப்படியே தொடரும் ஒரே ஒரு நாடு இந்தியா மட்டுமே. ஏனைய நாடுகள் பாராளுமன்ற ஜனநாயகம், அதிபர் ஆட்சி, சர்வாதிகாரம், ராணுவ ஆட்சி என்று சுதந்திரத்தின் குறிக்கோளை அடையும் வழி தெரியாமல் திசைமாறி அங்குமிங்கும் பயணித்தபடி இருக்கின்றன.பாராளுமன்ற ஜனநாயக முறையில் நாம் என்ன சிறப்பைக் கண்டோம் என்று கேட்கும் எதிர்மறை சிந்தனாவாதிகளும், இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கண்டு உலக அரங்கில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதைப் பொறுக்காதவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை ஒன்று இருக்கிறது. எத்தனையோ பிரச்னைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் இடையில் இந்தியா ஓர் ஒன்றுபட்ட நாடாகத் தொடர்கிறது என்பதையும், தொடரும் என்பதையும்தான். "பெரும்பான்மையான இந்தியக் குடிமக்கள் படிப்பறிவில்லாதவர்களாகவும், அரசியல் தெரியாதவர்களாகவும் இருந்தும் அரசியல் சட்டம் துணிந்து அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்க முன்வந்திருப்பதன் காரணம் என்ன தெரியுமா? மேல்நாட்டுப் படிப்பில்தான் புத்திசாலித்தனம் இருக்கிறது என்கிற பேதைமையை சராசரி இந்தியன் தகர்த்தெறிந்து, அவனது தேசபக்தியும், சுதந்திர உணர்வும் தனக்கும் நாட்டுக்கும் சரியான தலைமையைத் தேர்ந்தெடுக்கும் புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும் என்பதால்தான். வாக்குரிமை அவனிடம் இருந்தால் மட்டுமே அமையப்போகும் அரசு சராசரி ஏழை இந்தியனுக்காகவும் அவன் நல்வாழ்வுக்காகவும் செயல்படும் என்கிற நோக்கத்தில்தான் அனைவருக்கும் வாக்குரிமை என்கிற முடிவை இந்த அரசியல் நிர்ணய சபை எடுத்திருக்கிறது'. -23 நவம்பர், 1949 அன்று அரசியல் நிர்ணய சபையில் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் பேசியதன் சாராம்சம்தான் இது. கள்ளவாக்குகள் போடப்பட்டிருக்கலாம். ஊழல் பேர்வழிகளும், சமூக விரோதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். வாக்குகள் விலைபேசப்படும் சம்பவங்கள் இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்திய மக்களின் தீர்ப்பு முறையான தீர்ப்பாகத்தான் இதுவரை தொடர்கிறது. அனைவருக்கும் வாக்குரிமை என்கிற நமது முன்னோடித் தலைவர்களின் எதிர்பார்ப்பு முழுமையாகப் பொய்த்துவிடவில்லை.அரசியல் நிர்ணய சபையில் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் பேசும்போது குறிப்பிட்டபடி ஒரு தேசத்தின் நல்வாழ்வு என்பது அந்த நாட்டை நிர்வகிக்கும் ஆட்சியாளர்களின் நேர்மையையும், திறமையையும் பொறுத்துத்தான் அமையும். "அரசியல் சட்டம் என்பது ஓர் உயிரற்ற இயந்திரம்தான். அதை இயக்குபவர்களின் திறமையைப் பொறுத்துத்தான் விளைவுகளை எதிர்பார்க்க முடியும். இந்தியாவின் இன்றியமையாத தேவை ஒழுக்கமும், நேர்மையும், மக்கள் நல்வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் தன்னலமற்ற தலைமையும்தான்' என்று அவர் கூறியதை நாம் குடியரசு தினத்தில் மக்கள் விழிப்புணர்வு தினமாகக் கருதி மூலைமுடுக்கெல்லாம் பிரசாரம் செய்ய வேண்டாமா? சீன ஆக்கிரமிப்பு, பாகிஸ்தான் படையெடுப்பு, பயங்கரவாதத் தாக்குதல்கள் என்று வரும்போது இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து இந்தியா ஒன்றுபடுவதைப் பார்க்கிறோம். இந்தத் தேசிய உணர்வை ஒருங்கிணைத்து, மேன்மையுறும் குடிமை நீதியை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. இந்திய சுதந்திரத்தின் பயனை ஒருசிலர் மட்டும் அனுபவிக்காமல் ஆட்சியில் இருப்பவர்களின் ஏகபோக உரிமையாகத் தொடர விடாமல் "எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்பதை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது."ஒரு மிகச்சிறந்த அரசியல் சாசனத்தை நாங்கள் இந்திய மக்களுக்குத் தருகிறோம். இந்த அரசியல் சட்டம் மக்களைச் சரியாக வழிநடத்தாமல் போனால் அல்லது தோல்வி அடைந்தால் அதற்குக் காரணம் நாங்களல்ல. இதை நடைமுறைப்படுத்திய அயோக்கியர்களாகத்தான் இருக்கும்' என்கிற பாபா சாகிப் அம்பேத்கரின் எச்சரிக்கை இன்றளவும் பொருந்தும்.வாக்குகள் விலைபேசப்படுகின்றன. ஜாதிய மற்றும் மதஉணர்வுகள் அரசியலை நிர்ணயிக்கின்றன. அறிவுப்பூர்வமான அரசியலைவிட உணர்வுப்பூர்வமான அரசியல் முன்னிலைப்படுத்தப்படுகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் குடியரசு என்றால் என்ன என்பதை சராசரி இந்தியனுக்குப் புரிய வைக்க வேண்டும்.தேர்தல்கள் திருவிழாக்களல்ல என்பதை உணரச் செய்ய வேண்டும்.
By Ilakkuvanar Thiruvalluvan
1/26/2010 3:20:00 AM
By RAMESHBABU SALEM
1/26/2010 3:18:00 AM
By TMS.PEER MOHAMED
1/26/2010 2:31:00 AM
By Aravindhan
1/26/2010 1:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்