Last Updated :
புதுக் கோட்டை, ஜன. 27: மொழிப்போராட்டம்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அடிப்படையாக அமைந்தது என்றார் தமிழக வணிக வரித்துறை அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா. புதுக்கோட்டையில் நகர திமுக சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது: கடந்த 1965 ஆம் ஆண்டு ஜன.25-ம் தேதி இந்தி மொழியை கட்டாயமாக்கி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு திமுக கடும் எதிர்ப்புத் தெரிவித்து இந்தி பிரசார சபாக்கள் முன்பாக ஆர்ப்பாட்டமும், சட்ட நகல் எரித்தும் போராட்டம் நடத்தியது. அந்தப் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் அதிக அளவில் ஈடுபட்டதால் தமிழகமே கொந்தளித்தது. இந்த மொழி எதிர்ப்புப் போராட்டம்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. அதன்பிறகு நடந்த தேர்தலில் அண்ணா தலைமையில் திமுக ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், கருணாநிதி தலைமையிலான ஆட்சியில்தான் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு பேச அதிக வாய்ப்புகள் அளித்து சட்டப்பேரவையில் ஜனநாயக மாண்பு காக்கப்பட்டு வருகிறது. ஐந்தாவது முறையாக முதல்வரான கருணாநிதி பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். அதில் இலவச டிவி, காஸ் இணைப்பு மற்றும் தற்போது அறிவித்த கான்கிரீட் வீடு திட்டம் ஆகியவை நாட்டுக்கே உதாரணமாகத் திகழ்கின்றன என்றார் உபயதுல்லா. கூட்டத்துக்கு, நகரச்செயலர் அரு. வீரமணி தலைமை வகித்தார். நிர்வாகிகள் த. சந்திரசேகரன், இரா.சு. கவிதைப்பித்தன், ஆ. செந்தில், நகர்மன்ற உறுப்பினர் ப. ரெங்கராஜ், நகர் மன்றத்துணைத் தலைவர் க. நைனாமுகமது, எம்.எம். பாலு, கே.என்.ஆர். ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் பெரியண்ணன்அரசு, பொள்ளாச்சி உமாபதி, கா.வி. நெடுஞ்செழியன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து மொழிப்போராட்டத் தியாகிகள் ந. காந்தி, எம். பார்த்தசாரதி, மாபொசி, ஆலங்குடி சுப்பையா ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
By Ilakkuvanar Thiruvalluvan
1/28/2010 4:33:00 PM
By
velupillai 1/28/2010 1:17:00 PM