திங்கள், 25 ஜனவரி, 2010

மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் !!!

பதிந்தவர்_யாழினி on January 25, 2010
பிரிவு: கட்டுரைகள், செய்திகள், தமிழ்நாடு

1950 இல் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டது. அப்போது இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கீகாரம் கிடைக்கபெற்றது.

பெரும்பான்மை மக்களால் பேசப்படும் இந்தியை இந்தியா முழுவதும் அலுவல் மொழியாக்கிவிட வேண்டுமென காங்கிரசு கட்சி கருதி இந்திய அரசயலமைப்புச் சட்டத்தின் 343 ஆவது பிரிவின்படி 1965 ஜனவரி 26 முதல் இந்திய நாட்டின் ஆட்சிமொழியாக இந்தியை காங்கிரசு அறிவித்தது

இவ் அறிவிப்பின் படி மத்திய மற்றும் மாநில அரசு நிர்வாகங்களில் ஆங்கிலம் பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் ஆங்கிலத்தை நீக்கி விட்டு இந்தியில் எழுத வேண்டுமென அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை முதலில் எதிர்த்தவர்கள் மேற்கு வங்கத்தினர். பின்னர் தமிழர்கள் இதனை தீவிரமாக எதிர்த்தனர்

இந்தித் திணிப்பிற்கு எதிரான தங்களுடைய பலத்த எதிர்ப்பைத் தெரிவிக்க 1965 ஜனவரி 26 அன்று ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்த தமிழ்நாட்டு மக்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர். இப்போராட்டத்தின் விளைவாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகும் என்று அப்போதைய சென்னை மாநில முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் கருதினார். 1965 ஜனவரி 25 அன்று இரவு அண்ணாவும் அவரது கட்சியைச் சேர்ந்த 3000 தொண்டர்களும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 1965 பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்றுதான் விடுதலை செய்யப்பட்டனர். இந்த இடைப்பட்ட ஒரு வார காலத்தில் தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் காங்கிரசின் இச்சட்டதை எதிர்த்து வெகுண்டெழுந்து தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

அண்ணாவும் தி.மு.கழகத்தின் இதர தலைவர்களும் கைது செய்யப்பட்ட பிறகு, இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தலைமையை மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்த போராட்டதிற்கு தலைவராக சென்னை சட்ட கல்லூரி மாணவர் ரவிசந்திரன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். எல்.கணேசன், கா.காளிமுத்து, நா.காமராசன், ம.நடராசன் போன்றவர்கள் இந்த மாணவர் போராட்டத்தை முன்னின்று நடத்தினர்

அன்றே திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கீழப்பழுவூர் சின்னசாமி (27) என்பவர் கடிதம் ஒன்றை எழுதி விட்டு தனது எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக தீக்குளித்து இறந்து போனார். தான் எரியும் போது தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! என்று முழங்கிகொண்டே தீக்கு இரையானார். இதை தொடர்ந்து போராட்டம் மிக தீவிரம் அடைந்தது

சனவரி 26, சென்னையை சேர்ந்த மாணவர்கள் முதல் அமைச்சர் பக்தவசலத்திடம் மனு கொடுக்க பேரணியாக வந்த போது லால்பகதூர் சாஸ்தரி அரசின் துணை ராணுவ படை மாணவர்களை தாக்கியதில் மாணவர்கள் கூவம் நதியில் குதித்து தப்பிக்கும் நிலைக்கு ஆளாயினர். மதுரை வடக்கு மாசி வீதியில் ந.காமராசன், கா.காளிமுத்து தலைமையில் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்திய போது மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கி சூடு என அனைத்து வெறியாட்டங்களையும் நடத்தியது மத்திய மாநில அரசுகள்

சனவரி 26 அன்று சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சிவலிங்கம்(21) என்பவர் உடல் மண்னுக்கு உயிர் தமிழுக்கு என்று தனது கடிதத்தில் எழுதிவிட்டு தமிழுக்காக அவரும் தன்னை தீக்கு இரையாக்கினார்.

சனவரி 27 விருகம்பாக்கம் அரங்கநாதன், பிப்ரவரி 11 அய்யம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மார்ச் மாதம் மாயவரம் சாரங்கபாணி, கீரனூர் முத்து போன்றவர்கள் தங்களது இன்னுயிரை தமிழுக்காகவும் இந்தி எதிர்புக்காகவும் ஈதனர்

மத்திய அரசில் லால்பகதூர் சாஸ்தரியும் மாநில அரசில் பக்தவத்சலமும் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள். இவர்களின் உத்தரவின் பெயரில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் 100 மாணவர்களுக்கும் மேல் இறந்தும் 500க்கும் மேற்பட்டோர் ஊனமுற்றனர், போராட்டத்தில் தமிழக மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் தமிழகத்தின் அணைத்து சிறையையும் நிரப்பினர், காங்கிரசின் அடக்கு முறை தமிழுக்காக பேசிய அனைவரை சிறையிட்டது.

காங்கிரசு அரசு தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி கொண்டு சிறுபான்மை மக்கள் பேசும் மொழிகளை அழிக்க கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்து தமிழ் நாட்டில் வெடித்ததுதான் இந்தி எதிர்ப்பு போராட்டம்.

இந்த போராட்டத்தில் தமிழக மக்களுக்கு இழப்புகள் அதிகம் என்றாலும் தமிழர்களின் ஒற்றுமையும் மொழி உணர்வும் மத்தியில் இருந்தவர்களை அவர்களது அறிவிப்பில் இருந்து பின்வாங்கவே செய்தது. மற்றும் காங்கிரசின் ஆட்சியென்பது தமிழகத்தில் சாத்தியமில்லை என்று அடுத்து வந்த தேர்தலில் நிருபித்தது.

அன்றைய தமிழக மக்களிடத்திலும் மாணவர்களிடத்திலும் இருந்த மொழிப்பற்றும் உரிமையுணர்வும் ஒற்றுமையும் இன்று மிக மோசமான இன அழிப்பை சந்தித்த நமது இனத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

மொழி போரில் உயிர் நீத்த தமிழ் உணர்வாளர்களும் காங்கிரசு அரசு அனுப்பிய படையின் காட்டுமிராண்டிதனமான தாக்குதலால் உடல் நலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கும் வீர வணக்கம்…

(Visited 1 times, 1 visits today)
இந்தி எதிர்ப்புப் போர்ப்படைத் தளபதியாக விளங்கிய செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களிடம் தி.மு.க. இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியதற்கு இணங்கப் பேரறிஞர் அண்ணா அவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தை இந்தி எதிர்ப்புப போரில் ஈடுபடுத்தினார். சட்டத்தின் படியை எரித்த நா.காமராசன்,காளிமுத்து ஆகியோரின் ஆசிரியரான பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களும் இந்தி எதிர்ப்புப் போரில் கைது செய்யப்பட்டார். தமிழ்க் காப்புப் பணியில் ஈடுபட்ட பேராசிரியரை இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்ப் பின்னர் காங்கிரசு அரசு கைது செய்து வேலூர்ச் சிறையில் அடைத்தது. பேராசிரியர் தாம் நடத்திய குறள்நெறி திங்கள் இருமுறை இதழ் நாளிதழ் வாயிலாக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரிடையே இந்தித் திணிப்பை எதிர்த்தும் காங்கிரசு ஆட்சியை அகற்றுமாறு வேண்டியும் பரப்புரை மேற்கொண்டார். 1967 இல் திமுக ஆட்சியைப் பிடித்ததற்கு அடிப்படைக் காரணம் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் அருந்தொண்டே என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக