கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு மீண்டும் வந்து விளையாடி பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தவர், அரசியல் கட்சியைத் தொடங்கியவர், அறக்கட்டளைகளை நடத்தியவர், கிரிக்கெட் வர்ணனையாளர் என ஆல்-ரவுண்டராகத் திகழ்ந்தவர்தான் இம்ரான் கான் நியாஸி.1952-ல் லாகூரில் பிறந்தவர், மியான்வாலி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.லாகூரில் பள்ளிப் படிப்பு, இங்கிலாந்தில் கல்லூரி படிப்பு. 16 வயதில் முதல் தர கிரிக்கெட்டில் பங்கேற்பு. 1969-70-ல் லாகூர்-ஏ அணிக்காக விளையாடினார். படிப்படியாக உயர்ந்து பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றார்.1971 ஜுன் 3ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். இதுதான் அவரது முதல் சர்வதேச போட்டி. இடையில் சசக்ஸ், நியூ சவுத் வேல்ஸ், பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், வொர்செஸ்டர்ஷயர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், லாகூர் அணி ஆகியவற்றுக்காக அவ்வப்போது விளையாடியுள்ளார்.1982 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தவர். நடுவில் 1987-ல் உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். பாகிஸ்தான் அதிபர் ஜியா-உல்-ஹக்கின் வற்புறுத்தலால் 1988ல் பாகிஸ்தான் அணியில் மீண்டும் இடம்பெற்றார். சொல்லிவைத்தாற்போல் 1992-ல் அவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையைத் தட்டிச் சென்றது.88 டெஸ்ட் போட்டிகள் மூலம் 3807 ரன்கள் சேர்த்ததுடன் 362 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவற்றில் 6 சதம், 18 அரை சதம், பேட்டிங் சராசரி 37.69. ஒரு இன்னிங்ஸில் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 23 தடவை எடுத்துள்ளார். ஒரே டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் போன்று 6 முறை எடுத்துள்ளார். 28 கேட்சுகளை பிடித்துள்ளார்.175 ஒருதினப் போட்டிகளில் விளையாடி 3709 ரன்களைக் குவித்துள்ளார். 182 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 36 கேட்சுகளை பிடித்துள்ளார். இவ்வாறு பேட்டிங், பெüலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் நம்பர் 1ஆக இருந்து ஆல்-ரவுண்டர் ஆனார்.உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவராக திகழ்ந்தார். 3 ஆயிரம் ரன்கள், 300 விக்கெட்டுகள் என்று உலக சாதனை புரிந்த எட்டு பேரில் இவரும் ஒருவரானார்.வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இன்சமாம்-உல்-ஹக் ஆகியோர் இவருடைய கண்டுபிடிப்புகள்.39-வது வயதில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு தனது தாயார் நினைவாக லாகூரில் மிகப் பெரிய புற்றுநோய் மருத்துவமனையைக் கட்டினார். பின்னர் நீதிக்கான இயக்கம் (தேரிக் இ இன்சாஃப்) என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக