டொரான்டோ, டிச. 21: இலங்கையில் தமிழீழம் அமைவதற்கு ஆதரவாக, கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் ஏறத்தாழ ஒருமனதாக வாக்களித்துள்ளனர்.இலங்கையில் தமிழீழம் அமைய வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து, கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கடந்த சனிக்கிழமை கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 48,583 பேரில் 99.8 சதம் பேர் தமிழீழத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.கனடாவில் உள்ள தமிழர்கள் கூட்டமைப்பு இந்தக் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை நடத்தியது.கனடாவில் வசிக்கும் எங்களுக்குள்ள அடிப்படை சுதந்திரம், உரிமைகள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உறுதி செய்யப்படவில்லை' என இந்தக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் தர்ஷிக செல்வசிவம் கூறினார்.இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும், இலங்கையில் ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலை குறித்தும் உலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல தங்களது அமைப்பு விரும்புவதாக செல்வசிவம் தெரிவித்தார்.கனடாவில் இந்தக் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது.கனடாவில் டொரான்டோ பகுதியில்தான் இலங்கைத் தமிழர்கள் பெருவாரியாக உள்ளனர். எனவே, இந்தப் பகுதியில் அதிகளவில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. எனினும், மாண்ட்ரீல், ஒட்டவா, கார்ன்வால், வான்கூவர், கால்கேரி, எட்மான்ட்டன், வின்னிபெக், ஹாலிபேக்ஸ் ஆகிய நகரங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததாக செல்வசிவம் கூறினார்.தானியங்கி வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தயாரிக்கும் எஸ்எஸ் என்ற நிறுவனம் இந்த வாக்குப்பதிவை கண்காணித்தது.நார்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இதேபோல, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவர்களும் தமிழீழம் அமைவதற்கு பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இலங்கையில் வடக்கு, கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தமிழர்களுக்கான இறையாண்மைமிக்க தனி நாட்டை உருவாக்க வேண்டும். தமிழர்களின் பாரம்பரியமிக்க நாடாக இலங்கை விளங்கி வந்துள்ளது. எனவே, தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்' என கனடாவில் உள்ள தமிழர்கள் கூட்டமைப்பு ஓர் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.இலங்கையில் தமிழீழம் அமைவதற்காக அரசுக்கு எதிராக விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் கடுமையாகப் போரிட்டு வந்தனர். ஆனால், கடந்த மே மாதம் நடைபெùற்ற இறுதிக் கட்டப் போரில் விடுதலைப் புலிகளை இலங்கைப் படையினர் ஒடுக்கினர்.இந்த நிலையில், இலங்கையில் தமிழீழம் அமைவதற்கு ஆதரவாக கனடா, நார்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
By Ilakkuvanar Thiruvalluvan
12/22/2009 4:41:00 AM
By suthan raja
12/22/2009 4:08:00 AM
By USANTHAN
12/22/2009 2:56:00 AM
By USANTHAN
12/22/2009 2:55:00 AM
By B Sivanesan
12/22/2009 2:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்