திங்கள், 21 டிசம்பர், 2009

இரண்டாம் விடுதலை யாரிடம் இருந்து?சுப்பிரமணிய பாரதி பிறந்த நாள் டிசம்பர் 11 மறந்தோம். சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் கொண்டாடி ஜன்ம சாபல்யம் அடைந்தோம். நவம்பர் 7 அன்று நோபல் விஞ்ஞானி சர். சி.வி. ராமன் பிறந்த தினம் வந்து போனது, பலருக்குத் தெரியாது. பண்டித ஜவாஹர்லால் நேரு பிறந்த நாளும் வந்தது, போனது. வெகு ஜன ஊடகங்கள் அவற்றைக் கண்டு கொண்டால்தானே.நம் அடிமைத்தனம் மட்டும் மாறவே இல்லை. பெருகிவரும் கு, கூ, கொ, கோ - ஆகிய நான்கு தனங்களுக்கு நாம் அடிமை. இது என்ன ஹைக்கூவோ என்று பயந்து விடாதீர்கள். குடிகாரத்தனம், கூத்தாடித்தனம், கொலைகாரத்தனம், கோமாளித்தனம். இதுதான் இன்றைய நம் கலாசாரம் ஆகப் பதிவாகி வருகிறது.குடிப்பழக்கம், புகையிலை இவற்றால் ஆண்டுதோறும் ஒன்றே கால் கோடி இதயநோய் மரணங்களாம். உலக சுகாதார நிறுவன அறிக்கை பற்றி நமக்குக் கவலை இல்லை, நமக்கு முக்கியம் வருமானம்.போதை மருந்துப் புழக்கம் இந்தியாவில் எந்த அளவு கிறக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது? கஞ்சா அடிமைகள் 87.5 லட்சம், ஓப்பியம் பேர்வழிகள் 20.4 லட்சம், மருந்து அடிமைகள் 2.9 லட்சம். உள்ளபடியே ஆப்கானிஸ்தானத்தில் இருந்தும், மியான்மரில் இருந்தும் உலக நாடுகளுக்கு ஹெராயின் கடத்தும் உலக விரோதிகளின் ஊடு நாடாக இந்தியா இயங்கி வருகிறதாமே. 2004-ம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா. அலுவலகமும், சமூகநீதி அமைச்சகமும் இணைந்து நடத்திய கணிப்பின் முடிவு இது.ஏதோ ஒரு வழியில் நம் இளைஞர்களுக்கு அறிவியல் சிந்தனை வராமல் பார்த்துக் கொள்கிறோம். உள்ளபடியே மது போதையில் நம் இளைய தலைமுறை உணர்வு மரத்து உருக்குலைந்து வருகிறது. சுயமாகச் சிந்திக்க இயலாத மந்தபுத்தி மந்தைகளை இனப்பெருக்கம் செய்வதே நோக்கம். இன்னும் பத்து இருபது ஆண்டுகளில் இவர்கள் தேர்தலில் வாக்குப் போடக் கூட வரமாட்டார்கள். வீட்டில் இருந்தபடி வாக்கை - விற்றுவிடத் தயாரானாலும் ஆச்சரியம் இல்லை.இங்கு மதுப் பயனாளிகளில் பெரும்பாலோர் கல்லூரி மாணவர்கள், கணிப்பொறி நிபுணர்கள், இளநங்கைகள் என்பது இன்னொரு அதிர்ச்சித் தகவல். அதி நவீனக் கல்வி தர வேண்டியவர்கள் இன்று மதுக்கடை உரிமையாளர்கள். அன்றைய மது வியாபாரிகள் பலரும் கல்வி நற்பணி தொடங்கிவிட்டனர். காலத்தின் போக்கு, தலைகீழ். அவர்களின் கல்விக் கட்டணத்தைக் குறைக்கச் சொன்னால் ""உங்கள் கமிஷனைக் குறைத்தால் தானே'' என்று யாரோ திருப்பிக் கேட்டார்களாமே. அரசியல்வாதியின் வாய்மொழி உத்தரவில் ஊழல் கோப்பில் கையெழுத்துப் போடுவார் அதிகாரி. அவர் தலையெழுத்து, தனியே மாட்டிக் கொள்வார்.ஏதாயினும் இன்று சுதந்திர இந்தியாவில் ஆட்டோ பெர்மிட் முதல் பாட்டி பென்ஷன் வரை நீக்கமறப் புழக்கத்தில் உள்ள புது வழக்குச்சொல் ஆழ்ண்க்ஷங் தமிழில் கையூட்டு, லஞ்சம், கைக்கூலி, சன்மானம், கமிஷன், மாமூல், கட்டிங், சம்திங், அன்பளிப்பு, இனாம், இலவசம், பெர்சன்ட், தள்ளு, வெட்டு, பெட்டி, கவர், சின்ன கிஃப்ட் - அடேங்கப்பா எத்தனைக் கலைச்சொற்கள். ஆங்கிலத்தை மிஞ்சியது நம் செம்மொழி.தேர்வு எழுதாமலே வெற்றிச் சான்றிதழ் பெறவும் முடிவது அரசியலில் மட்டும் தானாம். தேர்தலுக்கு முன்னமேயே வாக்கு வித்தியாசத்தைக் குறிசொல்லும் கட்சி சோதிடர்கள் நிறைந்த பாரத ஙர்ய்ங்ஹ் திருநாடு வாழ்கவே வாழ்க.எப்படியோ, கறுப்புதான் நம்மில் பலருக்குப் பிடித்த கலரு-பணத்தில் மட்டும். திட்டம் அறிவித்ததும் "சதவீதம்' பெற்றுக்கொள்ளும் சாமர்த்தியசாலிகள் வாழும் புண்ணிய பூமி இது. பத்து பென்சில் வாங்கினால் ஒரு ரப்பர் இலவசம். கஜானா பணத்தில் வாங்கிய பென்சிலுக்குக் கிடைத்த ரப்பர் மட்டும் எப்படி ஆணை போட்டவருக்குச் சொந்தம் ஆகுமோ? டாக்டர் கலாம் சொன்ன அறிவியல் கனவு நம் அரசியல் பெரியவர்கள் காதில் நடு எழுத்து மாறி "ள'கரம் ஆக ஒலித்ததோ என்னவோ?வெளிநாட்டு வங்கியில் 70 லட்சம் கோடி இந்தியர் பணம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். கணக்குப் போடுங்கள், கைக்குழந்தையோ, படுகிழவியோ சராசரி ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிய 70 ஆயிரம் ரூபாய் சொந்தப் பணம் என்று அர்த்தம் ஆகிறதே. எப்போது கிடைக்கும்?அடுத்தபடி, கூத்தாடித்தனம் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஒரு கணத்தில் ஊடகங்களுக்குப் பன்றிக்காய்ச்சலே வராதா என்று ஏங்கத் தோன்றும். அந்த அளவுக்கு தலைவிரித்தாட்டம்.அண்டை நாட்டில் வீர சகோதரர்களின் "புறநானூறு' நடந்து கொண்டு இருந்தது. தமிழ்நாட்டிலோ ஆயுள்முச்சூடும் தனித்தனிச் சானல்களில் திகட்டத் திகட்ட "அக நானூறு' தான். ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம். வீர வசனம் களத்திலாவது, காகிதத் தளத்தில் அல்லது கவியரங்கத்தில் மட்டுமே. போட்டி போட்டுக்கொண்டு எல்லாச் சானல்களிலும் அசைவப் பாட்டுகள், ஆட்டங்கள். பள்ளிக் குழந்தைகளையும் அழைத்து வந்து இந்தப் பள்ளியறை வெட்டல் நடனம் அவசியம் தானா?முன்னொரு காலத்தில் திருநெல்வேலி பொருட்காட்சியில் தம்பிதுரை-மஸ்தான் ஆபாச ரெக்கார்டு டான்ஸ் தடைவிதிக்கப்பட்டது. அது மறுவடிவில் மாடல் ஸ்டூடியோ அரங்கின் கீற்றுக் கொட்டகையில் பூவாளிக் குளியல் காட்சிகள் ஆயின. அந்த ரகசிய ஆட்டங்கள் இன்று தேசிய விழாக்களாக சானல்கள் தோறும் சக்கைப்போடு போடுகின்றனவே. குளியல் நடனங்களின் நீதிபதியும் பாதி குளித்த அரைத்துண்டுடன்தான் வந்து அமர்கிறார். தீர்ப்பின்போது கெமிஸ்ட்ரி நன்றாய் இருந்துச்சு, ஜியாகிராஃபி படுத்துச்சு என்று எல்லாம் பல்கலைக்கழகத் தீர்ப்பு வேறு.திரைப்பட விழாக்களில் வயிறாட்டம் என்று ஒரு புது தினுசு இறக்குமதி ஆகி இருக்கிறது. அதையும் வேலை மெனக்கட்டு வந்து ரசிக்கும் முற்றிய கலையுள்ளங்களை வாழ்த்துவோம். அண்மையில் நம் குடியரசுத் தலைவர் விருது நிகழ்ச்சிக்கு உலக அழகி "பாத்-ரூம் மேக்கப்'புடன் வந்து இருந்தாராமே. இந்திப் படப்பிடிப்பு என்று நினைத்தாரோ என்னவோ? தேசிய விருதுக்கு வழங்கும் கெüரவம் அது. இன்றைக்கு விருதுகளும் ஜனநாயகம் மாதிரி வரையறுக்கப்பட்டு விட்டது. தானே நிறுவிய விருதுக்குத் தன்னைத் தானே தேர்ந்து எடுத்துத் தன்னால் வழங்கும் கிரீடத்தைத் தனக்குத் தானே தரிப்பதில் நம்மவர்க்குத்தான் தாகம் அதிகம்.அண்டைக் கேரளத்தில் முன்பு ஒருமுறை அமைச்சர் உண்மையான பொறுப்புடன் வாரந்தோறும் ஒரு நாளில் தொலைக்காட்சியில் தோன்றினார். பொதுஜனம் கேட்கும் கேள்விகள், முறையீடுகள், கோரிக்கைகளை விசாரிப்பார். நேரடியாக மக்கள் குறை தீர்ப்பார். துணைக்கு அவரது துறைச் செயலரும் உடன் இருப்பார். நமக்கு அதற்கு எல்லாம் நேரம் கிடையாது. "டிவி வால்யூம் கம்மி பண்ணி' சினிமாப் பாட்டு கேட்க மட்டுமே நமக்குப் பிடிக்கும். திரை விண்மீன்களின் மினுமினுப்புகள் போதும்.மூன்றாவதாக, மனிதாபிமானம் இழந்த கொலைகாரத்தனம் எப்படி நம் சமூகத்தில் ஊடுருவுறுகிறது பாருங்கள். சாலை விபத்தில் சக்கரத்தில் மாட்டி உயிர் இழந்தவர்க்கு ஓட்டுநர் சில ஆயிரங்கள் நஷ்டஈடு கொடுத்தால் போதுமாம். ஆனால் காயங்களுடன் அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்தால் முழுச்செலவையும் ஓட்டுநரே ஏற்க வேண்டுமாமே. அதனால் அடிபட்டுக் குற்றுயிராகக் கிடந்தவர் மீது ரிவர்ஸில் வந்து வண்டியை ஏற்றிக் கொன்றே விட்டாராமே. ஆயிரங்கள் அபராதத்தோடு போகும். நாம் எங்கே போகிறோம்?அதிலும் பலவகைக் கொலைகாரர்களும் தொலைக்காட்சிகளில் கூச்சமே இல்லாமல் சிரித்தபடி லேன்சர், டோயாட்டோ கார்களில் மிதப்பதும் பார்த்தால் நமக்கே சந்தேகம் வரும். அரசியல்வாதிகள் மட்டும் அல்ல, குற்றவாளிகளும் தான் போலீஸ் பாதுகாப்புடன் உலா வருகிறார்கள். குற்ற வழக்குகளுக்கு என்றே தனியொரு சானல் தொடங்கலாம் போல. சி.சி.டிவி. பெரிய அங்காடிகளில் மூலையில் யாருக்கும் தெரியாமல் இயங்கும் ரகசியத் தொலைக்காட்சிக் கேமரா, குளோஸ்ட் சர்க்யூட் டிவி என்றுதானே நினைத்தீர்கள். நினைப்பீர்கள். அதுதான் இல்லை, நாம் சொல்ல வந்தது கோர்ட் கேஸ் டிவி சானல்.நான்காவதாக, கோமாளித்தனம் வேறு மனிதனை மழுங்கடித்து வருகிறது. "சிப்' போடச் சொல்லும் சிரிப்புகள், ஒன்றுக்குப் போகும் உவகைக் காட்சிகள், இரட்டை அர்த்த ஏளனிப்புகள் என்று நாடே சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இனி எவரும் நூற்றாண்டு கண்ட கலைவாணர் பெயரைக் கண்டபடி இழுக்க வேண்டாம். விரசமே இல்லாத மேதை செத்த பிறகாவது பிழைத்துப் போகட்டும்.
கருத்துக்கள்

என்ன செய்வது? அரசியல் வாதிகள் பிழைக்க வேண்டாவா? இவற்றை எலலாம் ஒழித்துவிட்டால் அவர்கள் எப்படிப் பிழைப்பார்கள்?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/21/2009 6:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக