தமிழக எல்லையில் உள்ள தமிழ் பேசும் ஆந்திர பகுதிகளை தமிழகத்தோடு இணைப்பது குறித்து தடாவில் நடைபெற்ற பல்வேறு அரசியல் கட்சியினர் கூட்டம்.
கும் மிடிப்பூண்டி,டிச.20: தமிழகத்தோடு தங்களை இணைக்குமாறு ஆந்திர எல்லையோரத்தில் உள்ள 9 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.÷ஆந் திர மாநிலத்தை பிரித்து தெலங்கானா என்ற தனி மாநிலத்தை உருவாக்க மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியதை ஒரு தரப்பினர் வரவேற்றுள்ளனர். மற்றொரு தரப்பினரோ இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.÷இந்நிலையில், தமிழக எல்லையோரத்தில் உள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராமாபுரம், பெரியவேடு, பீமார்பாளையம், காரூர், பூண்டி, தடா, தடா கண்டிகை, இருக்கம், வேநாடு ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.÷ஆந்திரத்தில் தெலுங்கை தாய் மொழியாகப் பேசுபவர்களே தனித்தனி மாநிலம் கேட்கும் போது தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தங்களை தமிழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை இரு மாநில அரசுகளும் ஏற்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.÷இதுகுறித்து வழக்கறிஞரும், ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட ராமாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான வி.என். கிருஷ்ணன் கூறியது: மேற்கண்ட 9 ஊராட்சிப் பகுதி முழுவதும் தமிழர்களே (30 ஆயிரம் பேர்) வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகள் வேங்கடகிரி அரசரின் சமஸ்தானத்தைச் சேர்ந்தாக இருந்தவரை தற்போதைய திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தின் கீழ் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்தன.÷1956-ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, மேற்கண்ட தமிழ் மொழி பேசும் பகுதிகள், இப்பகுதி மக்களின் விருப்பத்துக்கு மாறாக வேங்கடகிரி அரசரின் விருப்பத்தின்பேரில் ஆந்திர மாநிலத்தோடு இணைக்கப்பட்டன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கண்ட பகுதிகள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் நாங்கள் அனைவரும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கிறோம்.÷எங்கள் உற்றார், உறவினர்கள் அனைவரும் தமிழகப் பகுதியிலேயே இருக்கும் நிலையில் நாங்கள் மட்டும் ஆந்திரத்தில் இருந்து அவதிப்படுகிறோம். மேலும், தமிழகப் பகுதிகளுக்குள்தான் நாங்கள் பெண் கொடுத்து, பெண் எடுக்கிறோம். நாங்கள் அனைவரும் இன்றளவும் தமிழ்நாட்டுப் பள்ளி, கல்லூரிகளில்தான் படித்து வருகிறோம். இப்படி தமிழகத்தோடு எல்லாவிதத்திலும் சம்மந்தப்பட்டுள்ள நாங்கள் "ஆந்திர மாநிலத்தவர்' என்று பேதம் பிரிக்கப்படுவதோடு இங்கு எல்லா விதத்திலும் பின்தங்கி உள்ளதால் எங்களை தமிழகத்தோடு இணைத்துக் கொள்ள ஆந்திர அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றார்.÷நெல் லூர் மாவட்ட கவுன்சிலரான பூண்டி செல்வம் கூறுகையில், மேற்கண்ட 9 ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பான்மையானவர்களுக்கு தமிழில் மட்டுமே பேசவும், எழுதவும் தெரியும். தமிழக கல்லூரியில் எம்.ஏ. படித்த பட்டதாரி, அவருக்கு தேவைப்படும் ஒரு சான்றிதழுக்காக ஆந்திரத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கக்கூடத் தெரியாது.÷அதேபோல இங்கு ஊராட்சித் தலைவராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகிக்கும் அனைவருக்கும் தெலுங்கில் எழுதப் படிக்க தெரியாததால் அரசு சார்பில் திட்டங்களை மக்களிடம் விளக்கவோ, கூட்டங்களில் அதிகாரிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளவோ இயலாத நிலையில் உள்ளனர். இதனால், அதிகாரிகள் அளவிலான கூட்டங்களில் மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் அவமானங்களைச் சந்திக்க நேர்கிறது. எனவே மேற்கண்ட பகுதிகளை தமிழகத்திலேயே சேர்ப்பது குறித்ததான தங்களின் கோரிக்கைக்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.÷இதே கருத்தை வலியுறுத்தி ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமர் கோயில் தர்மகர்த்தாவான பட்டதாரி ராகவன் கூறியது: இங்கு தெலுங்கு பள்ளிகள் இருந்தாலும் அதிகமாக யாரும் படிப்பதில்லை. பனங்காடு, பெரியவேடு பகுதிகளில் மாணவர்கள் இன்மை காரணமாக தெலுங்கு பள்ளிகள் மூடப்பட்டன. இங்குள்ள ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, பொன்னேரி பகுதிகளில் பள்ளிக் கல்வியையும், பொன்னேரி, சென்னைப் பகுதியில் கல்லூரிக் கல்வியையும் பயின்று வருகின்றனர். இருப்பினும், தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதற்குரிய சான்றிதழ் ஆந்திரத்தில் வழங்கப்படாததால் தமிழகப் பள்ளிகளில் அச் சலுகைகளை பெற முடிவதில்லை. அதேபோல தெலுங்கு பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக வைக்க தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் ஆந்திர கல்வி துறையால் நிறைவேற்றப்படவில்லை என்றார் அவர்.÷இங்குள்ள ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தமிழக கல்லூரிகளில் படித்ததாலும், அவர்களுக்கு தெலுங்கில் பேச, எழுத தெரியாததாலும் அவர்களுக்கு ஆந்திர அரசு மூலம் வேலை கிடைப்பதில்லை என்றார் சென்னையில் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்த காரூர் பகுதியைச் சேர்ந்த நீலகண்டன். அதேவேளையில், தமிழகத்திலும் அவர்கள் ஆந்திர மாநிலத்தவர்களாக பாவிக்கப்படுவதாலும் இங்கும் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதால் வேலை வாய்ப்பின்றி இந்த பட்டதாரிகள் இரு தலைக்கொள்ளி எறும்பாய் பரிதவிக்கின்றனர் என்றார் அவர்.÷தடா பகுதியைச் சேர்ந்த முன்னாள் மாவட்டக் கவுன்சிலரான உத்தண்டி சுப்பிரமணியம், பீமளாவாரிபாளையம் ஊராட்சித் தலைவரான மனோகரன் உள்ளிட்டோரும் இதே கருத்தை வலியுறுத்தினர்.÷ஆந்திர மாநிலம், பழவேற்காடு ஏரி மீனவர் சங்க நிர்வாகியான சிவாஜி கூறுகையில், இந்த ஊராட்சிப் பகுதிகளை தமிழகத்தில் இணைப்பதன் மூலம் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக நெடுங்காலமாக நிலவி வரும் பிரச்னை தீரும் என நம்பிக்கை தெரிவித்தார்.÷இந்நிலை யில், மேற்கண்ட 9 ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினரும் தடா பகுதியில் ஒன்றுகூடி, ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை தமிழகத்தோடு இணைக்க ஆவன செய்ய வேண்டும் என தமிழக, ஆந்திர மாநில அரசுகளை வலியுறுத்தும் தீர்மானத்தையும் நிறைவேற்றினர்.÷இ துதொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாகவும், மேலும் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரையும் சந்தித்து ஆதரவு கோர உள்ளதாகவும் வழக்கறிஞர் கிருஷ்ணன், நெல்லூர் மாவட்ட கவுன்சிலர் செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.
கருத்துக்கள்
சரியான கோரிக்கை. இதே போல் திருப்பதி முதலான பிற தமிழ்ப் பகுதிகளும் கருநாடாகா, கேரளாவில் இணைக்கப்பட்ட பிற தமிழ்ப் பகுதிகளும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்படவேண்டும். (நான் ஏற்னெவே தினமணி கருத்துப் பதிவுகளில் குறிப்பிட்டு வந்துள்ளேன்.) வன்முறைக்கு மட்டுமே செவி சாய்ப்பது என்னும் போக்கை மத்திய அரசு கைவிட்டு நியாயத்தின் அடிப்படையில் மறு மாநிலப் பிரிவினை மேற்கொள்ள வேண்டும். அந்தந்தப் பகுதியினர் விருப்பத்திற்கு மாறாகப் பிற பகுதியினர் போராடுவதற்கும் தடை விதிக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/21/2009 4:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *12/21/2009 4:54:00 AM