வியாழன், 24 டிசம்பர், 2009

வந்தவாசி,​​ திருச்செந்தூரில் திமுக வெற்றி



சென்னை,​​ டிச.23:​ திருச்செந்தூர்,​​ வந்தவாசி ​(தனி)​ ஆகிய இரு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.திருச்செந்தூர், ​​ வந்தவாசி ​(தனி)​ ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 19}ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.​ இதில்,​​ பதிவான வாக்குகள் புதன்கிழமை எண்ணப்பட்டன.திருச்செந்தூரில் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும்,​​ வந்தவாசி தொகுதியில் பதிவான வாக்குகள் செய்யாறு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியிலும் எண்ணப்பட்டன.​ முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.​ அதில்,​​ எந்த வாக்குகளும் பதிவாகவில்லை.திருச்செந்தூரில்...​ திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் "அனிதா' ஆர்.ராதாகிருஷ்ணன்,​​ அதிமுக சார்பில் அம்மன் டி.நாராயணன் ஆகியோர் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக களம் இறங்கினர்.வாக்குகள் மொத்தம் 14 சுற்றுகளாக எண்ணப்பட்டன.​ இதில்,​​ "அனிதா' ராதாகிருஷ்ணன் 75,223 வாக்குகளும்,​​ டி.நாராயணன் 28,362 வாக்குகளையும் பெற்றனர்.​ 46,861 வாக்குகள் வித்தியாசத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.வந்தவாசியில்...​ வந்தவாசி தொகுதியில் திமுக சார்பில் ஜெ.கமலக்கண்ணன்,​​ அதிமுக சார்பில் பி.முனுசாமி பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்.​ வாக்குகள் 16 சுற்றுகளாக எண்ணப்பட்டன.கமலக்கண்ணன் 78,827 வாக்குகளும்,​​ முனுசாமி 40,810 வாக்குகளும் பெற்றனர்.​ 38,017 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கமலக்கண்ணன் வெற்றி பெற்றார்.டெபாசிட் இழப்பு...​ இடைத் தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட் இழந்தன.​ திருச்செந்தூர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட கோமதி கணேசன் 4,186 வாக்குகளைப் பெற்று டெபாசிட் இழந்தார்.டெபாசிட் பெற வேண்டுமென்றால் 18,489 வாக்குகளை அவர் பெற்றிருக்க வேண்டும்.​ அதாவது பதிவான 1,10,931 வாக்குகளில் ஆறில் ஒரு பங்கைப் பெற்று இருக்க வேண்டும்.​ இதேபோன்று,​​ வந்தவாசி தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட என்.ஜெனார்த்தனன் 7,063 வாக்குகளைப் பெற்று டெபாசிட் இழந்தார்.​ அவர்,​​ 22,125 வாக்குகளைப் பெற்றிருந்தால் டெபாசிட் கிடைத்திருக்கும்.​ இரண்டு தொகுதிகளிலும் தேமுதிக,​​ சுயேச்சைகள் உள்பட 32 பேர் டெபாசிட் இழந்தனர்.வெற்றிச் செய்தியை அடுத்து,​​ அண்ணா அறிவாலயம் வந்த முதல்வரும்,​​ திமுக தலைவருமான கருணாநிதி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.​ நிகழ்ச்சியில்,​​ துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,​​ கனிமொழி உள்ளிட்டோர்​​ பங்​கேற்றனர்.
கருத்துக்கள்

தமிழ் நாட்டில் தமிழ் மட்டுமே ஆட்சி மொழியாகக் கல்வி மொழியாக வழிபாட்டு மொழியாக அனைத்து நிலைப் பயன்பாட்டு மொழியாகத் திகழத் துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (2/2) காண்க)

By Ilakkuvanar Thiruvalluvan
12/24/2009 2:41:00 AM

½) வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். இவர்கள்வெற்றி குறுக்குவழியில் கிடைத்ததாகப் பிற கட்சியினர் கூறுவர். குறுக்கு வழியில் வெற்றி பெற்ற ப.சிதம்பரம் முக்காடு போட்டுக் கொண்டு மூலையிலா உட்கார்ந்து இருக்கிறார். அடுத்த தலைமையமைச்சர் தான்தான் எனச் செய்தியை உலவ விட்டுக் கொண்டு உள்துறை யமைச்சராய் உலகெங்கும் உலவி வரவில்லையா? ஆனால், ஏதோ ஒரு வகையில் மக்களிடம் செல்வாக்குடன் இருக்க முடிவதால் தமிழ்நாட்டின் முசிபூர் இரகுமான் அவர்கள் இனியேனும் காங்கிரசிடம் அஞ்சி அடிபணிந்து நிற்க வேண்டா. துணிந்து தமிழ் நல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் நமசுகாரமும் சிரீயும் சிதீமதியும் அரசோச்சுவதைத் தடை செய்து வணக்கமும் திரு/ திருவாட்டியும் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகளில் / வானொலிகளில் உள்ள தமிழ் நிகழ்ச்சிகளில் பிற மொழி நிகழ்ச்சிகளையும் பிற மொழிப்பேச்சுகளையுமே ஒளி / ஒலி பரப்பும் கொடும் போக்கை உடனே நிறுத்த வேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் மட்டுமே ஆட்சி மொழியாகக் கல்வி மொழியாக வழிபாட்டு மொழியாக அனைத்து நிலைப் பயன்பாட்டு மொழியாகத் திகழத்

By Ilakkuvanar Thiruvalluvan
12/24/2009 2:40:00 AM

2/2) ஈழத் தமிழர்கள் உரிமையு்டன் தங்கள் நாடான தமிழ் ஈழத்தில் வாழவும் உலகத் தமிழர்கள் அனைவரும் உயர் நிலையில் சிறக்கவும் நடவடிக்கை எடுத்து வெற்றி காண வேண்டும். தமிழர் மிகுதியாக வாழும் நாடுகளில் தமிழர்களையே தூதர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழ் கற்பிக்கப்படவும் மததிய ஆட்சி மொழியாகத் தமிழ் திகழவும் உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறைகள் அமைக்கப்படவும் ஆவன செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/24/2009 2:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக