ஹைதராபாத், டிச.25: தெலங்கானா தனி மாநிலத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்கவேண்டும் என்று தெலங்கானா ராஷ்ட்ர சமிதி (டிஆர்எஸ்) தலைவர் கே. சந்திரசேகர ராவ் கூறினார்.தெலங்கானா தனி மாநிலம் அமைக்கவேண்டும் என்று டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இதனால் ஆந்திரத்தில் கலவரம் வெடித்தது. இதையடுத்து தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் ஆந்திரத்தைப் பிரிக்கக்கூடாது என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து உடனடியாக தெலங்கானா மாநிலத்தை அமைக்க முடியாது என மத்திய அரசு அறிவித்தது.இந்நிலையில் ஹைதராபாதில் கூட்டுப் போராட்டக் குழுவின் கூட்டம் சந்திரசேகர ராவ் தலைமையில் நடைபெற்றது. கட்சி பேதமின்றி பல கட்சித் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம் சந்திரசேகர ராவ் கூறியதாவது: தெலங்கானா பகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளதால் ஆந்திரத்தில் அரசியல் நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே உடனடியாக தெலங்கானா மாநிலத்தை அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு உடனடியாக துவங்கவேண்டும்.தெலங்கானா மாநிலம் கோரி போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது என கூட்டுப் போராட்டக் குழு தனது முதல் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது என்றார் அவர். காலவரையற்ற பந்த் உள்பட போராட்டத்தைத் தீவிரப்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் ஆந்திரத்தைப் பிரிப்பதற்காக மத்திய அரசுக்கு டிஆர்எஸ் கெடு விதிக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.கூட்டுப் போராட்டக் குழுவின் முதல் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட தெலுங்கு தேசம் கட்சியினர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை.கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்களும் விலகல்தனி மாநிலம் கோரி 13 அமைச்சர்கள் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் 4 பேர் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தனர்.இதையடுத்து இந்த விவகாரத்தில் ராஜிநாமா செய்த ஆந்திர எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 84-ஆக உயர்ந்தது.ஆந்திரப் பேரவையில் இடம்பெற்றிருந்த 4 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்களும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.எம்எல்ஏக்கள் ராஜிநாமா விவகாரம் தொடர்பாக கட்சியின் மத்தியக் குழுவுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசியத் தலைவர்களை ஆலோசித்த பிறகு இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று கட்சியின் மாநில செயலாளர் கே. நாராயணா தெரிவித்தார்.இதுவரை தெலங்கானா பகுதியிலுள்ள 119 எம்எல்ஏக்களில் 30 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 36 தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள், 10 தெலங்கானா ராஷ்ட்ர சமிதி எம்எல்ஏக்கள், 4 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள், 2 பிரஜா ராஜ்யம் கட்சி எம்எல்ஏக்கள், 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
கருத்துக்கள்
உடனடியாக ஆந்திர மாநிலப பெயரைத் தெலுங்கானா என மாற்றி அமைச்சரவையில் மூன்றில் இரண்டு பங்கினர் தனித் தெலுங்கானா வேண்டும் பகுதியினர் என மாற்றி இவர்களுள் ஒருவரே முதலமைச்சர் பிற பகுதியில் இருந்து ஒருவர் துணை முதல்வர் என மாற்றினால் அடங்குவார்களா? அழிவு வேலைகளில் ஈடுபட்ட பின்பே கோரிக்ககைகளுக்குச் செவி சாய்ப்பது என்னும் தன்னுடைய மேலாண்மைப் போக்கை மத்திய காங்கிரசு ஆட்சி கைவிட வேண்டும். கோரிக்கை வைப்பவர்களும் அழிவுமுறை ஆர்ப்பாட்டங்களை விடுத்து அறவழிகளிலேயே போராட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 2:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *12/26/2009 2:54:00 AM