Last Updated :
கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் "தமிழ்த் தலைமகன்' விருதை முதல்வர் கருணாநிதிக்கு வழங்குகிறார் சங்கத்தின் ஆலோசகர் த
சென்னை, டிச.20: ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகி மக்களுக்காக செயல்படுவேன் என்று நான் முன்பு சொன்னது அப்படியேதான் உள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்த் தலைமகன் என்னும் விருது வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.முன்னாள் துணைவேந்தர் வி.சி. குழந்தைசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், கொல்கத்தா தமிழ்ச் சங்க ஆலோசகர் த. ஞானசேகரன், கருணாநிதிக்கு விருதினை வழங்கினார்.பின்னர் கருணாநிதி ஆற்றிய ஏற்புரை:கொல்கத்தா தமிழ்ச் சங்கம், தில்லி தமிழ்ச் சங்கம், மும்பை தமிழ்ச் சங்கம் என தமிழுக்கு சேவை செய்யும் அனைத்து தமிழ்ச் சங்கங்களுக்கும் தி.மு.க. அரசு துணை நிற்கும்.அரசியல் மேடைகளில் மாற்றுக் கட்சியினர் கூட என்னைப் பாராட்டியுள்ளனர். ஆனால், இந்த விழாவில் எனக்கு ஏன் இந்த விருது வழங்கப்படுகிறது என்பது குறித்து பேசிய விழா தலைவர் வி.சி. குழந்தைசாமி, தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்படும் சமத்துவபுரம் திட்டத்தை ஒரு காரணமாகக் குறிப்பிட்டார்.இது உண்மையிலேயே என்னை ஒருபடி மேலே உயரச் செய்தது.கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 95 சமத்துவபுரங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது ஒரு சமுதாய மறுமலர்ச்சித் திட்டம். இங்கு சாதி, மத பேதங்கள் இல்லை என்ற நிலை ஏற்படும் வரை சமத்துவபுரங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். செம்மொழி மாநாடு: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு முன்னோட்டமாக இந்த விழா நடைபெறுவதாக இங்கே குறிப்பிட்டார்கள். தமிழன் தலை நிமிர்ந்து வாழும் நிலை ஏற்பட வேண்டும் என்பதற்காக செம்மொழி மாநாட்டை நடத்துகிறோம்.இந்த மாநாட்டுக்கு வர இயலாது, முடியாது என சிலர் கூறியுள்ளனர். அந்த ஓரிருவர் இல்லாவிட்டாலும்கூட, அவர்கள் இருந்தால் எந்த அளவு சிறப்போடு நடைபெறுமோ, அதே சிறப்போடு, உரிய பண்பாட்டோடு மாநாடு நடைபெறும்.தமிழ்ப் பெருங்குடி மக்கள் உரிய ஒத்துழைப்பு அளித்தால், நாம் விரும்புகிற தமிழ்ச் சமுதாயத்தை அமைக்க முடியும். அது ஒரு புரட்சிகர, பகுத்தறிவு நிறைந்த சமுதாயமாக இருக்கும்.அப்படியே உள்ளது: எனக்கு இப்போது 86 வயதாகிறது. நான் இருக்கின்றவரை தமிழ் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். இடையில் அரசுப் பொறுப்பிலிருந்து சற்று ஒதுங்கி செயல்படுவேன் என்று நான் முன்பு சொன்னது என்ன ஆனது என சிலர் கேட்கலாம். அதை நான் ஒதுக்கிவிடவில்லை. முன்பு சொன்னது அப்படியேதான் உள்ளது என்றார் கருணாநிதி. விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், நடிகர் சிவகுமார், கவிஞர் வைரமுத்து ஆகியோர் விருது பெற்ற கருணாநிதியை வாழ்த்திப் பேசினர்.முன்னதாக கொல்கத்தா தமிழ்ச் சங்க ஆலோசகர் எஸ். மகாலிங்கம் வரவேற்றார். நிறைவில் அதன் செயலாளர் இரா. ஸ்ரீதரன் நன்றி கூறினார்.விழாவில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு தமிழ்ச் சங்க நிர்வாகிகள், கல்வியாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
By Ilakkuvanar Thiruvalluvan
12/21/2009 5:27:00 AM
By Ilakkuvanar Thiruvalluvan
12/21/2009 5:26:00 AM
By B sivanesan
12/21/2009 2:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*