உடுமலை,டிச.24:ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டுமென சாதிக்கத் துடிக்கும் மாணவ, மாணவிகளின் அறிவுக் கருவூலமாக விளங்கி வரும் நூலகத்தின் அவல நிலையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
"பகுத்தறிவுக் கவிஞராயர்' என தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படும் உடுமலை நாராயணகவியின் பெயரில் அமைந்துள்ள மணி மண்டபத்தை முதல்வர் மு.கருணாநிதி 23}2}2001ல் திறந்து வைத்தார்.
சுற்றிலும் பூங்காவுடன் அழகுற அமைக்கப்பட்ட இந்த மணி மண்டபத்தை ஆண்டு முழுவதும் தொடர்ந்து பராமரிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால் 28}09}2004 முதல் உடுமலை முதல் நிலை நூலகப் பராமரிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் செலவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான புத்தகங்கள், கேட், யுசிஜி, நெட், ஐஐடி, ஐஐஎம், ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும், கணிப் பொறியியல், அறிவியலில் வளர்ச்சிகள், உலக வரலாறுகள் உள்ளிட்ட புத்தகங்களும் இங்கு கொண்டு வரப்பட்டன. இதைத் தொடர்ந்து புத்தகங்கள் வைக்க அலமாரிகளும், பிற தளவாடங்களும் பொதுமக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டன.
ஆனால், இதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக இந்த நூலகத்தை எந்த வித விரிவாக்கமும் செய்யாமலேயே விட்டுவிட்டனர். சாதிக்கத் துடிக்கும் மாணவ,மாணவிகளை இது சோர்ந்து போகச் செய்து விட்டது.
எனவே, கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி
மாநாட்டை யொட்டி இந்த நூலகத்திற்கு போதுமான நிதியை ஒதுக்கி விரிவாக்கம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து உடுமலை நாராயணகவி இலக்கியப் பேரவை நிர்வாகிகள் கூறியது:சாதித்த மாணவர்கள்: இந்த நூலகத்தில் அமர்ந்து படித்த உடுமலை பகுதி மாணவர்கள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மற்றும் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் ஐஏஎஸ் முடித்தது சாதனை படைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த நூலகத்தில் 2001 ம் ஆண்டு வரையிலான புத்தகங்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு கடந்த 7 வருடங்களாக புதிய புத்தகங்கள் இந்த நூலகத்தில் இடம்பெறவில்லை. ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் நடப்பாண்டு தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில் புதிய புத்தகங்களை இங்கு வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
உடுமலையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படித்து வருகின்றனர். இந்நிலையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் நூலகத்திற்கு வரும் நிலையில் 25 நபர்களே உட்கார்ந்து படிக்க முடிகிறது. நிறையபேர் நின்று கொண்டே படித்து வருகின்றனர்.
எனவே, நூலகத்தில் குறைந்த பட்சம் நூறு பேர் உட்கார்ந்து படிக்கும் அளவிற்கு கட்டடத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
அதே போல், ஜெராக்ஸ் எடுக்க ஒரு பிரதிக்கு 75 பைசா என்றிருப்பதை இங்கு வரும் ஏழை மாணவ,மாணவிகளின் வசதிக்காக 25 பைசாவாக குறைக்க வேண்டும்.
குறிப் பாக, இங்கு வரும் மாணவர்களுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும். இதற்காக உடுமலை நகராட்சி சார்பில் இலவசமாக ஒரு குடிநீர் இணைப்பை ஏற்படுத்தித் தர வேண்டும், முக்கியமாக இந்த நூலகத்தை சுற்றிலும் உள்ள
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், இந்த நூலகத்திற்கென ஒரு நிரந்தர பணியிடத்தை உருவாக்க வேண்டும் என்றனர்.
இந்த அறிவுக் கருவூலத்தில் இருந்து சிறந்த ஐஏஎஸ், ஐபிஎஸ், பொருளாதார அறிஞர்கள், அரசு உயர் அதிகாரிகள், விஞ்ஞானிகள், தமிழறிஞர்கள், தொழில் நுட்ப மேதைகள் உருவாக வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆர்வம்.
தமிழக முதல்வர் இதற்கு உதவ வேண்டும் எனபதே அனைவரது எதிர்பார்ப்பு.
இச் செய்தியைப் படித்தவுடன் மாண்புமிகு முதல்வரும் நூலகத்துறையும் நடவடிக்கை எடுக்கும் என்னும் நம்பிக்கையில் முன்னதான பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
12/25/2009 4:20:00 PM