திங்கள், 21 டிசம்பர், 2009

இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் திருவிழா முடிந்து முடிவுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நம் தொகுதியிலும் இடைத்தேர்தல் வராதா என்று மற்ற தொகுதிவாசிகளை ஏங்க வைக்கும் அளவுக்கு, இந்த முறை திருவிழா களை கட்டியிருந்தது.



எம்.எல்.ஏ.,க்கள் திடீரென இறக்க நேரிட்டால், அவரது தொகுதி மக்களின் பிரதிநிதி சட்டசபையில் இடம் பெற வேண்டும் என்ற நோக்குடன் இடைத்தேர்தல் நடந்து வந்தது முந்தைய வரலாறு. ஆனால், கட்சி மாறுவதும், பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதும் தற்போதைய புதிய வரலாறாக மாறியுள்ளது.அதுவும், கடந்த முறை எந்த கட்சி அவரை எம்.எல்.ஏ., ஆக்கியதோ, அந்த கட்சியை எதிர்த்து களமிறங்கி, இதுவரை தான் இருந்த கட்சியை கடுமையாக விமர்சித்து, தேர்தல் பிரசாரம் செய்யக்கூடிய ஒரு வித்தியாசமான சூழல், தற்போது ஏற்பட்டுள்ளது. ஓட்டுக்காக நாக்கு மாறிப் பேசும் இந்த சூழல், ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.இடைத்தேர்தல் நடக்கும்போது, எந்தக் கட்சி ஆளுங்கட்சியாக இருக்கிறதோ அந்த கட்சி விதிமுறைகளை மீறுவதில் முன்னணியில் இருப்பதும் தொடர்ந்து வருகிறது.



காவல்துறை, அரசு நிர்வாகம் என தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதில், இரு கழகங்களும் சளைத்தவை அல்ல.தி.மு.க., ஆட்சி அமைந்தபின், தற்போதைய தேர்தலையும் சேர்த்து 10 இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. இந்த இடைத்தேர்தல்களுக்கு, "டிரெண்ட் செட்டர்' போல அமைந்தது, மதுரை திருமங்கலம் இடைத் தேர்தல்நோட்டு கொடுத்து ஓட்டுக்களை பெறுவது என்ற கலாசாரம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், அடித்தட்டு மக்கள், குடிசைவாசிகள் இருக்கும் பகுதிகளில் நோட்டும், சரக்கும் கொடுத்து ஓட்டுக்களைப் பெறுவது தான் முந்தைய நிலை. ஆனால், திருமங்கலம் தேர்தலைப் பொறுத்தவரை, வீட்டுக்கு வீடு, "பூத் ஸ்லிப்' கொடுப்பது போல், நோட்டு போய் சேர்ந்தது.



வணிக நிறுவனங்களின் செயல்பாட்டைப் போல், "மைக்ரோ' லெவலில் வாக்காளர்களை வளைக்க, கட்சிகள் களமிறங்கி செயல்படுகின்றன. 20 ஓட்டுக்கு ஒரு நிர்வாகி என்ற ரீதியில் நியமித்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன கட்சிகள். ஒரு ஓட்டுக்கு ஆளுங்கட்சி 1,000 ரூபாய் கொடுத்தால், எதிர்க்கட்சி 200 ரூபாய் கொடுத்து பரிதாபமாக ஓட்டுக் கேட்கிறது.ஓட்டுக்காக கொடுக்கப்படும் நோட்டுகளை வாங்காதீர்கள் என துவக்கத்தில் பிரசாரம் செய்தன எதிர்க்கட்சிகள். ஆனால், நமக்கு கிடைக்கும் வருமானத்தை இவர்கள் தடுக்கப் பார்க்கிறார்களே என்ற கோபம் ஏற்பட்டு, நம்மை புறக்கணித்து விடுவார்கள் என உணர்ந்த எதிர்க்கட்சிகள், தங்கள் நிலையை மாற்றி, "பணத்தை அவர்களிடம் வாங்கிக் கொள்ளுங்கள்; ஓட்டை எங்களுக்கு போடுங்கள்' என கூறத் துவங்கியுள்ளனர்.



இவற்றின் உச்சமாகத்தான், "தங்கள் தொகுதியின் எம்.எல்.ஏ., இறக்க மாட்டாரா என, வாக்காளர்கள் எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தார்.இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் கலர், "டிவி', காப்பீடு, ரொக்கம், சரக்கு, மிக்சி, குக்கர், மொபைல் போன், மூக்குத்தி, வேட்டி சேலை, கடன் தொகை, கிரிக்கெட் பேட், ரீசார்ஜ் கூப்பன் என, வீடு தேடி வரும் பொருட்களின் பட்டியல் நீண்டு கொண்டே போவதைப் பார்த்தால் யாருக்குத் தான் இடைத்தேர்தல் வேண்டும் என்ற ஆசை வராது?



வெற்றியை இலக்காகக் கொண்டு, கழகங்களால் உருவாக்கப்பட்ட இந்த கலாசாரம், ஜனநாயகத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்க்க துவங்கியுள்ளது. தாங்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதி, சரியாகச் செயல்படவில்லையென்றால், அவரை திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதி வேண்டும் என்ற கோரிக்கை முன்பு எழுந்தது.இப்போது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதியை வாக்காளர்கள் கேள்வி கேட்க முடியும்? ஓட்டுக்கு இவ்வளவு ரூபாய் என வாங்கியதை திரும்ப கொடுத்தால் தானே, இந்த உரிமையை வாக்காளர்கள் பயன்படுத்த முடியும்.



கோடிகளைக் கொட்டி வெற்றி பெறுபவர்கள், அந்த முதலீட்டை திரும்ப எடுக்க முயற்சிப்பது தவறில்லையே. அவர்களை யார் தட்டிக் கேட்க முடியும் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. இந்த இடைத்தேர்தல், "பார்முலா' பொதுத்தேர்தலுக்கும் பரிணாம வளர்ச்சி பெற்று அமல்படுத்தப்படுமானால், அதன் அபாயம் அளவிட முடியாததாகி விடும்."வாணிகம் நடத்த வந்தவர்கள் அன்று அரசியல் செய்தது வரலாறு; அரசியல் நடத்த வந்தவர்கள் இன்று வாணிகம் செய்வது தகராறு' என்ற புதுக்கவிதை வரிகளை தேர்தல் களம் உண்மையாக்கி வருவது வேதனை அளிக்கிறது.தேர்தல் கமிஷன் என்ன தான் கடும் கட்டுப்பாடுகளை விதித்தாலும் அவை, காற்றில் கரைந்த கற்பூரமாய் மாறி விடுகிறது. இந்த இடைத்தேர்தலில் எந்த கட்சி ஜெயித்தாலும், தோற்கப் போவது ஜனநாயகம் தான்.ஜனநாயகத்தின் சிறப்பும், மதிப்பும் உணராத அரசியல் கட்சிகளும், வாக்காளர்களும் மனம் மாறி, ஜனநாயகத்தை மதிக்கும் காலம் மீண்டும் வர வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.



நமது சிறப்பு நிருபர்


உள்ளதை உள்ளபடி உரைத்த சிறப்புச் செய்தியாளருக்குப் பாராட்டுகள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக