Last Updated :
சென்னை, டிச. 19: மார்க்சிஸ்ட் கட்சிக்காக அனுசரணையோடும், நேசத்தோடும் தி.மு.க. செய்ததையெல்லாம் அக்கட்சி மறந்திருக்காது என நம்புவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தி.மு.க. தொண்டர்களுக்கு சனிக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:திண் டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒரு மாநாடும், பேரணியும் நடத்துகின்றனர். திரிபுரா மாநில முதல்வர் பங்கேற்கும் அம்மாநாட்டுக்கு போலீசார் அனுமதி தர மறுப்பதாகவும், முதல்வர் தலையிட்டு அனுமதி வழங்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் செயலாளர் என். வரதராஜன் வெள்ளிக்கிழமை மதியம் எனது செயலாளரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.அச் செய்தியை அறிந்த நான், மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டுக்கும், பேரணிக்கும் அனுமதி வழங்க காவல்துறை அதிகாரிகளிடம் கூறுமாறு, எனது செயலாளரிடம் கூறினேன்.அதன் பின், வெள்ளிக்கிழமை வெளியான மார்க்சிஸ்ட் கட்சி நாளிதழை படித்தேன். அதில், "மதுரை தொகுதியில் மு.க. அழகிரி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, மார்க்சிஸ்ட் வேட்பாளர் மோகன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார், மோகன் மறைந்துவிட்டதால், மார்க்சிஸ்ட் மாற்று வேட்பாளராக மனு செய்த ஏ. லாசர் அந்த வழக்கை தொடர்ந்து நடத்துவார்" என செய்தி வந்துள்ளது.வழக்கு நடைபெறட்டும். நீதிமன்றம் தீர்ப்பு கூறட்டும். தீர்ப்பை ஏற்க தி.மு.க. தயாராக உள்ளது. ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் உள்ள சிலரின் உணர்வுகளையும், தி.மு.க. தலைமையின் உணர்வுகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக சிலவற்றை கூறுகிறேன்.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, 23.4.1997}ல் மதுரை மாநகராட்சி மார்க்சிஸ்ட் உறுப்பினர் லீலாவதி கொலை செய்யப்பட்டார். இது குறித்து லீலாவதி கணவர் அளித்த புகாரின் பேரில், மாநகராட்சி தேர்தலில் லீலாவதியை எதிர்த்துப் போட்டியிட்ட வள்ளி என்பவரின் கணவர் கருமலையான், அவரது சகோதரர் முத்துராமலிங்கம் மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.வழக்கில் குற்றவாளிகள் தி.மு.க.வினராக இருந்தபோதும், அப்போது ஆளுங்கட்சியாக தி.மு.க. இருந்தபோதும், அந்த வழக்கு முறையாக நடைபெற்றது. அரசு வழக்கறிஞருக்குப் பதில் மார்க்சிஸ்ட் கட்சி வழக்கறிஞர் ஆஜராகவும் ஒப்புக்கொண்டோம். நீதிமன்றத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்கள்.ஆனால் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், குடவாசலில் தங்கய்யா என்ற மார்க்சிஸ்ட் தொண்டர் கொல்லப்பட்டார். அந்த வழக்கிலே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், அந்த ஆட்சியில் இருந்த ஒரு அமைச்சரின் காரிலேயே பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். தி.மு.க. ஆட்சி வந்தபிறகுதான், அந்த வழக்கிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.மார்க்சிஸ்ட் கட்சி நண்பர்கள் இதையெல்லாம் மறந்திருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.2006 சட்டப்பேரவை தேர்தலின்போது செய்துகொண்ட உடன்படிக்கைபடி, 2007 மாநிலங்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜாவுக்கு தி.மு.க. வாக்களித்து வெற்றி பெறச் செய்தது. மார்க்சிஸ்ட் கட்சியுடன் அத்தகைய உடன்படிக்கை எதுவும் செய்து கொள்ளவில்லை. எனினும் தோழமைக் கட்சிகளிடம் கொண்டுள்ள தோழமை உணர்வு காரணமாக, 2008 மாநிலங்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரை தி.மு.க. ஆதரித்தது.அக்கட்சி வேட்பாளர் டி.கே. ரங்கராஜனின் வேட்பு மனுவை நானே முன்மொழிந்தேன். அப்போது பேட்டியளித்த ரங்கராஜன், "மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பி. ராமமூர்த்தி, எம்.ஆர். வெங்கட்ராமன், நல்லசிவம், இப்போது நான் (ரங்கராஜன்) ஆகிய நால்வருமே தி.மு.க. ஆதரவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். கூட்டணி கட்சிகளிடையே ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு முதல்வர் கருணாநிதி தேர்தல்களுக்கான ஒதுக்கீடுகளை செய்துள்ளார்" எனத் தெரிவித்தார்.தோழமைக் கட்சிகளோடு, அவர்கள் தோழமையாக இல்லாத காலத்திலும் கூட, நேச உணர்வோடு, விட்டுக் கொடுத்து, அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக தி.மு.க. நடந்து கொள்கிறது.அதே நேரத்தில் மற்ற கட்சிகள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி நடந்து கொள்கிறது என்பதை அக்கட்சி தொண்டர்களே தெரிந்து கொள்ள வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார்.
By Ilakkuvanar Thiruvalluvan
12/21/2009 5:32:00 AM
By Velu Pillai
12/20/2009 10:53:00 PM
By சுகமா சொல்லு
12/20/2009 5:32:00 PM
By raman
12/20/2009 10:39:00 AM
By dhanabal
12/20/2009 9:02:00 AM
By sekar
12/20/2009 8:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*