சென்னை, டிச. 23: இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது, கவிஞர் புவியரசுக்கு (79) வழங்கப்படவுள்ளது. கையொப்பம் கவிதைத் தொகுதிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இது இவர் பெறும் இரண்டாவது சாகித்ய அகாதெமி விருது ஆகும்.வானம்பாடி கவிதை இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் முக்கியமானவரான இவர், நாடக ஆசிரியராகவும் பெரும் பங்களிப்பைச் செய்தவர். மேடை நாடகங்கள் மட்டுமின்றி ஏராளமான தெரு நாடகங்களுக்காகவும் இவர் பாராட்டு பெற்றவர். ஏறத்தாழ 80 நூல்கள் எழுதியிருக்கும் புவியரசுக்கு இதற்கு முன் நஜ்ருல் இஸ்லாம் எழுதிய ரிபெள் அண்டு அதர் போயம்ஸ் என்ற நூலின் மொழி பெயர்ப்புக்காக (புரட்சிக்காரன்) சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.இவர் எழுதிய மனிதன் என்ற ரேடியோ நாடகம் 19 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒரே நேரத்தில் அனைத்து வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பப்பட்டது.கமல்ஹா சன் தயாரித்து இயக்கி நடிக்கும் "மருதநாயகம்' படத்திலும் பார்த்திபன் நடித்த "ஹவுஸ்ஃபுல்' படத்திலும் பணியாற்றியவர்.ஷேக்ஸ் பியரின் ஹேம்லெட், ஒத்தல்லோ, உமர்கயாமின் ருபாயத் போன்ற பல மொழி பெயர்ப்புகளைத் தமிழுக்குத் தந்திருக்கும் இவர், இப்போது தாஸ்தயாவெஸ்கியின் 1200 பக்க நாவலான கரமஸோவ் சகோதரர்கள் என்ற ரஷிய நாவலை மொழி பெயர்த்துவருகிறார். கவிஞர் புவியரசு கோவையைச் சேர்ந்தவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழாசிரியராகப் பணியாற்றியவர். இவ ரது மூன்றாம் பிறை என்ற நாடகக் காவியம் மாநில அளவில் முதல் பரிசுக்கான தங்கப்பதக்கம் பெற்றது. சர்வோதய இயக்கத்திலும், தமிழரசு இயக்கத்திலும் பங்குகொண்டு தமிழ் ஆட்சி மொழி, பயிற்சி மொழி மற்றும் தமிழக எல்லைப் போராட்டங்களிலும் பங்கேற்று பல முறை சிறை சென்றவர்.இவரது "ஞானக்கிளி' என்ற 13 வாரத் தொடர் சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாயிற்று.நீண்ட கால நாடகத்துறை அனுபவம் பெற்ற இவரது எல்லா மேடை நாடகங்களும் பல முதல் பரிசு பெற்றவை. அதற்காக "நாடகக் கலாரத்தினம்' என்ற விருது பெற்றுள்ளார். இவரது "மூன்றாம்பிறை' நாடகக் காவியம் பல பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டது.வானம்பாடி கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் இவர் முக்கியமானவர்.
கருத்துக்கள்
வாழ்த்துகள்! பாராட்டுகள்! இங்ஙனம் தினமணி நேயர்கள் சார்பில் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/24/2009 3:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *12/24/2009 3:34:00 AM