Last Updated :
சென்னை, டிச.20: ""மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, அரசியல் என்பது பேரம் பேசுகிற இடமல்ல; அது ஒரு வர்க்கப் போராட்ட களம்'' என்று முதல்வர் கருணாநிதிக்கு அந்தக் கட்சி பதில் அளித்துள்ளது.மார்க்சிஸ்ட் கட்சிக்காக அனுசரணையோடும், நேசத்தோடும் தி.மு.க. செய்ததையெல்லாம் அக்கட்சி மறந்திருக்காது என நம்புவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.இதற்கு பதிலளித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:திரிபுரா மாநில முதல்வர் பங்கேற்கிற பேரணிக்குக் கூட காவல் துறை அனுமதி அளிக்க மறுக்கிறது. எனவே, இந்தப் பிரச்னை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.சாதாரண ஜனநாயக நடைமுறையான பேரணிக்கு அனுமதி வழங்குவதுகூட பெருந்தன்மையின் அடையாளம் என்று முதல்வர் கருதுவது வினோதமாக உள்ளது.2006}ல் திமுகவோடு உடன்பாடு கொண்டு மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது. இதனுடைய தொடர்ச்சியாக மாநிலங்களவைத் தேர்தலில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது.இதற்கடுத்து, நடந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.கே.ரங்கராஜனை திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் ஆதரித்தன.தேர்தல்களில் தோழமைக் கட்சிகளுக்குள் விட்டுக் கொடுத்து போட்டியிடுவது, ஒரு கட்சி இன்னொரு கட்சிக்கு அளிக்கக் கூடிய சலுகை அல்ல. பரஸ்பர ஒத்துழைப்பு மட்டுமே.திமுக ஆதரவோடு மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதாலேயே திமுக தலைமையிலான அரசின் தவறான அணுகுமுறையை கண்டிக்கக் கூடாது; விமர்சிக்கக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி எதிர்பார்ப்பது சரியான அணுகுமுறையல்ல.தேர்தல் பணி செய்ய விடாமல்... சென்னை மாநகராட்சி மறுதேர்தலின் போது, மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் திமுக போட்டியிடாது என்று பேரம் நடத்தப்பட்டது. இதை, நாங்கள் உறுதியாக நிராகரித்தோம்.திருமங்கலம் இடைத் தேர்தல் தொடங்கி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வரை திமுகவினர் ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கும் வகையில் பணவிநியோகம் செய்தனர்.எதிர்க் கட்சியினரை தேர்தல் பணி செய்ய விடாமல் போலீஸ் மற்றும் ரவுடிகளின் மூலம் முடக்குவது என்பதை நடைமுறையாக்கி உள்ளது திமுக.மதுரை மக்களவைத் தேர்தலில் நடைபெற்ற வன்முறைகள், பண விநியோகம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மோகன் நீதிமன்றம் சென்றார். அவர் மறைவுற்றதைத் தொடர்ந்து இந்த வழக்கை தொடர்ந்து நடத்த மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.ஒரு பேரணிக்கு அனுமதி வழங்கியதற்காக, இந்த வழக்கை வாபஸ் பெற்றிருக்க வேண்டும் என்று முதல்வர் கருதுகிறார் போலிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை அரசியல் என்பது பேரம் பேசுகிற இடம் இல்ல.அது, ஒரு வர்க்கப் போராட்ட களம். மக்களுக்கான போராட்ட பாதை'' என்று வரதராஜன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
By Ilakkuvanar Thiruvalluvan
12/21/2009 5:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*